விளக்கின் முக்கியத்துவம்

ஒரு தெய்வத்தை வணங்குவது என்பது  நம் அனைவருக்கும் நம்பிக்கை சார்ந்த ஓன்று. வீட்டில் ஒரு பூஜை அறை ஏற்படுத்தி, அதை நன்கு அழகுபடுத்துவோம். அதில் நமக்குப் பிடித்த தெய்வங்களின் படங்கள் அல்லது சிலைகளை வைத்து, தினமும் பூஜை செய்து வருவோம். நமது வசதிக்கு ஏற்ப பூஜைப் பொருட்களை வாங்குவோம். பூஜைப் பொருட்களான கலசம், சங்கு, செம்புத் தட்டு, செம்புக் குவளை (பஞ்ச பாத்திரம்), சிறுகரண்டி (உத்ருணி), விளக்கு போன்ற பூஜைப் பொருட்களை நாம் அறிவோம். ஒவ்வொரு பூஜைப் பொருளும் தனிச்சிறப்பு வாய்ந்தது. பூஜையின் முக்கியப் பொருளான விளக்கின் சிறப்பைப் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

 

1. ஹிந்து தர்மத்தில் விளக்கின் முக்கியத்துவம்

ஸனாதன ஹிந்து வைதீக தர்மத்தில் விளக்குக்கென்று ஒரு தனி சிறப்பிடம் உண்டு. அது அக்னியின் வடிவமாகவும், குறியீடாகவும் கொள்ளப்படுகிறது. ‘தமசோ மா ஜ்யோதிர்கமய’ என்றால் விளக்கு இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லும் என்பது பொருள். மனிதர்களுக்கு அமைதியையும், ஒளியையும் தரும் சின்னமாக அது விளங்குகிறது. சாஸ்திரங்கள் விளக்கு பற்றி என்ன கூறுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வோம். பூஜைப் பொருட்களிலேயே விளக்கு முக்கியமான ஒரு பொருளாகும். அதன் முக்கியத்துவத்தை பூஜையின்பொழுது சொல்லப்படும் பின்வரும் மந்திரம் விவரிக்கிறது.

भोदीपब्रह्मरूपस्‍त्‍वं ज्‍योतिषांप्रभुरव्‍यय: ।।
आरोग्‍यंदेहिपुत्रांश्‍चमत:शांतिं प्रयच्छमे ।।

அர்த்தம் : ஓ விளக்கின் தேவதையே, நீ பிரம்மத்தின் (பரம்பொருளின்) வடிவம். நீ நிறைந்த ஒளிவீச்சாக இருக்கிறாய். நீ வற்றுவதே இல்லை. தயவுகூர்ந்து எனக்கு செல்வத்தையும் நன்மக்கட்பேறையும் அளிப்பாயாக. தயவுகூர்ந்து என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

 

2. எண்ணெய் மற்றும் நெய் விளக்கின் பலாபலன்கள்

விளக்கிற்கு எண்ணெய் அல்லது நெய் தான் பயன்படுத்தவேண்டும். வேறு எந்த எரிபொருளையும் பயன்படுத்தக்கூடாது என அக்னிபுராணம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஆன்மீக அறிவியலின்படி, எண்ணெய் விளக்கைவிட நெய் விளக்கு அதிக ஸாத்வீகத் தன்மை கொண்டது. இது முக்கியமானதால், இதுபற்றி விளக்கமாகப் பார்ப்போம். நெய்விளக்கிற்கும், எண்ணெய் விளக்கிற்கும் உள்ள வேற்றுமைகளை நாம் பார்ப்போம்.

நெய்யைவிட எண்ணெய்தான் பொதுவாக விளக்கிற்குப் பயன்படுத்தப்படுகிறது எண்ணெய் விளக்கு அதிகநேரம் எரியும். நெய் விளக்கு குறைந்த நேரமே எரியும். இந்த வேறுபாட்டை ஆன்மீக நோக்கில் நாம் பார்ப்போம்.

1. எண்ணெய் விளக்கைவிட நெய்விளக்கு சுற்றியுள்ள காற்று மண்டலத்திலிருந்து, ஸாத்வீக அதிர்வுகளை அதிக அளவில் ஈர்க்கும் திறன் கொண்டது.

2. எண்ணெய் விளக்கு அதனைச் சுற்றியுள்ள மண்டலத்திலிருந்து அதிகபட்சம் ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள ஸாத்வீக அதிர்வுகளையே ஈர்க்கும். ஆனால் நெய்விளக்கு வானில் உள்ள சொர்க்க உலகம் வரையுள்ள ஸாத்வீக அதிர்வுகளை ஈர்க்கும் வல்லமை கொண்டது.

3. எண்ணெய் விளக்கு எரிந்து முடிந்தபின், காற்றுமண்டலத்தில் உள்ள ரஜோகுண துகள்கள் அதிகரித்து, அது அரைமணிநேரம் வரை நீடிக்கும்; ஆனால் ஸாத்வீகத்தன்மை கொண்ட நெய்விளக்கு எரிந்து முடிந்த பின்னும், காற்று மண்டலத்தில் ஸாத்வீகத்தின் தாக்கம் இருப்பதை நான்குமணி நேரத்திற்கு பிறகும் உணர முடியும்.

சூட்சும வரைபட உதவியுடன், ஆன்மீக கோணத்தில், எரியும் எண்ணெய் விளக்கிற்கும் நெய்விளக்கிற்கும் இடையே உள்ள பலாபலன்களை இப்பொழுது பார்ப்போம். சூட்சும வரைபட அதிர்வுகள் முப்பரிமாணம் கொண்டவை என்பதையும், இங்கு சூட்சும வரைபடத்தில் இருபரிமாணமாகக் காட்டப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக கோளம் இங்கு வட்டமாகத் தெரியும். இப்பொழுது சூட்சும வரைபடத்தைப் பார்ப்போம்.

 

3. ஏன் பசுமாட்டின் நெய்யை மட்டும் பயன்படுத்தவேண்டும்?

பொதுவாக எல்லா எண்ணெய் விளக்குகளுமே ரஜோ கூறு அதிர்வுகளை வெளியிடுகின்றன. ஆனால் நல்லெண்ணெய் கொஞ்சம் ஸாத்வீக அதிர்வுகளையும் வெளியிடும். மற்ற எண்ணெய் விளக்குகளை ஒப்பிடும்பொழுது, நெய் விளக்கு அதிகமான ஸாத்வீக அதிர்வுகளை வெளியிடுகின்றது. இங்கே நாம் ஒன்றை கவனத்தில் கொள்வது நன்மை தரும். தெய்வத்தின் முன்னே எரியும் விளக்கில் பசுவின் நெய்யை மட்டுமே ஊற்றி ஏற்ற வேண்டும். இது எதனால் என்றால், பசுவின் நெய்யில் ஏற்கனவே தெய்வத் தத்துவங்கள் அடங்கியுள்ளன. ஸாத்வீகக் கூறுகள் அதிகமுள்ள இந்த நெய், காற்றுமண்டலத்தில் சுடர்விடும் உருவங்களை வெளியிடுகிறது. இந்த சுடர்விடும் உருவங்கள் நெருப்புத் தத்துவத்தின் வடிவங்கள் ஆகும். அதிக அளவு ஸாத்வீக அதிர்வுகளை வெளியிடுவதால், நெய் விளக்கினை நாம் பரிந்துரை செய்தபோதிலும், பொருளாதார வசதியின்மை போன்ற காரணங்களினால் நெய்யை பயன்படுத்த முடியாமல் போனால், நாம் நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம்.

 

Leave a Comment