அக்ஷய த்ரிதீயை

அட்டவணை

1.      பண்டிகையின் திதி

2.      நிரந்தர பயன்களை வழங்கும் நாள்

3.      ஸத்ய யுக முடிவையும் த்ரேதா யுக ஆரம்பத்தையும் குறிக்கும் நாள்

4.      அவதாரங்கள் வெளிப்படும் நாள்

5.      மூன்றரை மூஹுர்த்தங்களில் ஒன்று

6.      பூமியின் ஸாத்வீகத் தன்மை அதிகரித்தல்

7.      பண்டிகையை கொண்டாடும் விதம்

8.      எள் தர்ப்பணத்தின் அர்த்தம் மற்றும் நோக்கம்

9.      தெய்வங்களுக்கு எள் தர்ப்பணம் செய்யும் விதம்

10.   மூதாதையர்களுக்கு எள் தர்ப்பணம் செய்வதன் முக்கியத்துவம்

11.   இறப்பிற்கு பின் மூதாதையர்களுக்கு கதி வழங்க எள் தர்ப்பணம் செய்யும் வழிமுறை

12.   எள் தர்ப்பணத்தின் பலன்

13.   அக்ஷய த்ரிதீயை அன்று செய்யப்படும் தானத்தின் முக்கியத்துவம்

14.   தெய்வங்கள் மற்றும் மூதாதையர்களுக்காக பிராம்மணர்களுக்கு நீர்க்கலசத்தை தானம் செய்வதன் நோக்கம்

15.   நீர்க்கலசத்தை தானம் அளிப்பதன் வழிமுறை

16.   பூஜைக்கான உபகரணங்களின் அமைப்பு மற்றும் பூஜை சடங்கு

17.   மூதாதையர்களுக்கு நீர்க்கலசத்தை வழங்குவதால் ஏற்படும் பலன்

18.   நீர்க்கலச தானம் மற்றும் எள் தர்ப்பணம் தவிர அக்ஷய த்ரிதீயை அன்று செய்ய வேண்டிய மற்ற சடங்குகள்

19.   பொதுமுடக்க சமயத்தில் அக்ஷய த்ரிதீயை கொண்டாட வேண்டிய வழிமுறை

ஸத்ய யுகம் முடிந்து த்ரேதா யுகம் ஆரம்பமாகும் தினமே அக்ஷய த்ரிதீயை ஆகும். அக்ஷய த்ரிதீயையின் முக்கியத்துவம், அதைக் கொண்டாடும் வழிமுறை, இந்த சுப தினத்தில் செய்யப்படும் எள் தர்ப்பணம் மற்றும் நீர்க்கலச தானத்தின் சிறப்பு மற்றும் இது போன்ற மேலும் பல சிறப்பு விஷயங்களை இந்த விரிவான கட்டுரை வாயிலாகத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சாதாரண காலத்தில் அதாவது எல்லா செயல்களையும் மேற்கொள்வதற்கு ஸாதகமான சூழ்நிலை இருக்கும்போது தர்மம் கூறியுள்ளபடி ஆன்மீக சாஸ்திரத்தைப் பின்பற்ற வேண்டும்.

பாதகமான சூழ்நிலையிலும் ஆபத்துக் காலத்திலும் எவ்வாறு தர்மத்தைப் பின்பற்றுவது என்று ஹிந்து தர்மம் வழிகாட்டியுள்ளது. அதுவே ஆபத்தர்மம். ஆபத்தர்மம் ‘ஆபதி கர்தவ்யோ தர்ம:’ என்பதிலிருந்து வந்துள்ளது. இதன் அர்த்தம் பாதகமான சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய தர்மம் என்பது. தற்பொழுது முழு நாடும் மறுபடியும் கோவிட் விஷாணு பரவலால் பொதுமுடக்க நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் தர்மம் கூறியுள்ளபடி அக்ஷய த்ரிதீயை பண்டிகையை கொண்டாடுவது கடினம். இந்த கட்டுரையில் இந்நிலையிலும் நாம் செய்யக் கூடிய காரியங்களைப் பற்றிய விவரங்கள் உள்ளன. இதிலிருந்து எந்த ஒரு நிகழ்வையும் எதிர்கொள்ளும் ஹிந்து தர்மத்தின் தயார்நிலை தெரிகிறது. இதுவே ஹிந்து தர்மத்தின் தனித்துவமும் ஆகும்.

1.      பண்டிகையின் திதி

வைகாசி மாத சுக்ல த்ரிதீயை அக்ஷய த்ரிதீயை ஆகும். இந்த நாள் பண்டிகையாகவும் விரதமாகவும் கொண்டாடப்படுகிறது. அக்ஷய த்ரிதீயை சம்பந்தமான பல முக்கிய அம்சங்கள் உள்ளன.

2.      நிரந்தர பயன்களை வழங்கும் நாள்

புராதன சம்ஸ்க்ருத க்ரந்தமான மதனரத்னாவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இந்நாளின் முக்கியத்துவத்தை யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைப்பதாக வருகிறது. அவர் கூறுகிறார்,

அஸ்யாம் திதௌ க்ஷயமுற்பதி ஹுதம் ந தத்தம் |
தேனாக்ஷயேதி கதிதா முநிபிஸ்த்ருதீயா ||
உத்திஷ்ய தைவதபித்ருநிக்ரயதே மனுஷ்யை: |
தத் ச அக்ஷயம் பவதி பாரத ஸர்வமேவ || – மதனரத்னா

அர்த்தம் : (ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார்) ஹே யுதிஷ்டிரா, இந்நாளில் செய்யப்படும் தானமும் யக்ஞத்தில் செய்யப்படும் ஆஹுதிகளும் எப்போதும் வீணாகாது. அதனால் ரிஷிகள் இதற்கு அக்ஷய த்ரிதீயை என பெயர் சூட்டியுள்ளனர். தெய்வங்களுக்காகவும் மூதாதையர்களுக்காகவும் இந்நாளில் செய்யப்படும் எல்லாமே அக்ஷயமாக இருக்கும் அதாவது அழிவில்லாமல் இருக்கும்.


3.      ஸத்ய யுக முடிவையும் த்ரேதா யுக
ஆரம்பத்தையும் குறிக்கும் நாள்

காலப்போக்கில் ஒவ்வொரு யுகத்திலும் ஸாத்வீகத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது, அதாவது ரஜ-தம தன்மை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆன்மீக பயிற்சி புரியும் திறன் மனிதர்களிடம் குறைகிறது மற்றும் அவர்கள் தர்மத்தை விட்டு விலகி செல்கின்றனர். இது தர்ம அழிவை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் இறைவன் தர்மத்தை மறுபடியும் நிலைநாட்ட அவதாரம் எடுத்து வருகிறார். அதோடு மனிதர்கள் பின்பற்றுவதற்கு ஏற்ற ஆன்மீக பயிற்சியை உருவாக்குகிறார். இதன் மூலம் ஸாத்வீகத் தன்மை அதிகரிக்கிறது, அடுத்த யுகத்தின் ஸத்ய யுகம் ஆரம்பமாகிறது. இந்த இடைப்பட்ட காலத்தை சூன்ய காலம் அல்லது கலஹ காலம் என்று அழைப்பர். ஹிந்து கிரந்தங்களின்படி ஒரு யுகம் முடிந்து மறு யுகம் ஆரம்பிக்கும் தினம் மிகவும் முக்கியமானதாகும். இது ஒரு யுகத்தின் கலஹ கால முடிவையும் அடுத்த யுகத்தின் ஸத்ய யுக ஆரம்பத்தையும் குறிக்கிறது. இக்காலம் அதாவது இந்த முஹூர்த்தம் சில க்ஷணங்களே நீடிக்கின்றன; ஆனால் இதன் தாக்கம் அடுத்த 24 மணி நேரம் உள்ளது. அதனால் அன்றைய தினம் முழுவதுமே முஹூர்த்த நாளாக கருதப்படுகிறது.

4.      அவதாரங்கள் வெளிப்படும் நாள்

அக்ஷய த்ரிதீயை அன்று பகவானின் அவதாரங்களான ஹயக்ரீவர், பரசுராமர் மற்றும் நரநாராயணர்கள் வெளிப்பட்டார்கள்.

5.      மூன்றரை மூஹுர்த்தங்களில் ஒன்று

அக்ஷய த்ரிதீயை மூன்றரை மூஹுர்த்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மூன்றரை முஹூர்த்தங்கள் – சித்திரை வருடப்பிறப்பு, விஜயதசமி மற்றும் அக்ஷய த்ரிதீயை. இவை மூன்று முஹூர்த்தங்கள் ஆகும் பலி ப்ரதிபதா அரை முஹூர்த்தமாக கருதப்படுகிறது.

6.       பூமியின் ஸாத்வீகத் தன்மை அதிகரித்தல்

அக்ஷய த்ரிதீயை அன்று பிரம்மா மற்றும் ஸ்ரீவிஷ்ணு தத்துவங்கள் ஒருங்கிணைந்து பூமியை வந்தடைகின்றன. இது பூமியின் ஸாத்வீகத் தன்மையை 10% அதிகரிக்கிறது. இதுவரை நாம் அக்ஷய த்ரிதீயை சம்பந்தமான பல்வேறு சிறப்புகளைப் பார்த்தோம்.

7.      பண்டிகையை கொண்டாடும் விதம்

எந்த ஒரு காலக்கட்டத்தின் முதல் நாளையும் பாரதீய மக்கள் மங்களகரமானதாக கருதுவதால் ஆன்மீக கிரந்தங்கள் இந்நாட்களில் ஸ்நானம், தானம் போன்ற சடங்குகளை விதித்துள்ளது. இந்நாளில் புனித நீரில் நீராடல், ஸ்ரீவிஷ்ணுவின் பூஜை, நாமஜபம், ஹோமம், தானம் மற்றும் பித்ரு தர்ப்பணம் ஆகியவை செய்யப்படுகின்றன. இந்நாளில் மூதாதையர்களுக்காக பிண்ட ச்ரார்த்தம் செய்வது நல்லது. அது முடியாத பட்சத்தில் எள் தர்ப்பணமாவது செய்ய வேண்டும். தகுதியுள்ளவருக்கே தானம் அளிக்க வேண்டும். தர்மபிரசாரத்தில் ஈடுபடும் ஆன்மீக ஸ்தாபனங்கள் மற்றும் மகான்கள் ஆகியோரே தானம் பெறுவதற்கு தகுதியானவர்கள். தகுதியானவர்களுக்கு தானம் அளிக்கும்போது அது அகர்ம-கர்மாவாகிறது. அதாவது அக்கர்மாவால் எந்த கொடுக்கல்-வாங்கல் கணக்கும் ஏற்படுவதில்லை. தானமளிப்பவர் எந்த பற்றுதலிலும் மாட்டிக் கொள்ளாததால் அவரின் ஆன்மீக முன்னேற்றமும் நடைபெறுகிறது.

மகாராஷ்ட்ராவை சேர்ந்த பெண்களுக்கு அக்ஷய த்ரிதீயை சிறப்பு முக்கியத்துவம் நிறைந்த நாளாகும். அன்றைய தினத்தில் அவர்கள் சித்திரை மாதத்தில் வழிபட்ட சைத்ர கெளரி மூர்த்தியை விசர்ஜனம் செய்கிறார்கள். அதோடு மற்ற திருமணமான பெண்களுக்கு மஞ்சள்-குங்குமம் வழங்கும் சடங்கும் செவ்வாய் அல்லது வெள்ளி அன்று நடத்தப்படுகிறது. இது சித்திரை சுக்ல த்ருதீயை ஆரம்பித்து வைகாசி சுக்ல த்ரிதீயைக்குள் நடத்தப்படுகிறது.

8.      எள் தர்ப்பணத்தின் அர்த்தம் மற்றும் நோக்கம்

எள் தர்ப்பணம் என்பது தெய்வங்களுக்கும் மூதாதையர்களுக்கும் எள்ளையும் தண்ணீரையும் அளிப்பதாகும். அதாவது அவர்களை சந்தோஷப்படுத்த வலக்கை பெருவிரல் வழியாக தண்ணீரை விடுவது ஆகும். மூதாதையர்களுக்கு இவ்வாறு அளிக்கப்படும் தண்ணீர் பித்ரு தர்ப்பணம் என அழைக்கப்படுகிறது. மூதாதையர்கள் தங்கள் வம்சத்தினரிடமிருந்து பிண்டத்தையும் பிராம்மண போஜனத்தையும் எதிர்பார்க்கின்றனர்; அதேபோல் தண்ணீரையும் எதிர்பார்க்கின்றனர். தர்ப்பணம் செய்வதால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். எள் ஸாத்வீகத் தன்மையையும் தண்ணீர் சுத்த ஆன்மீக உணர்வையும் குறிக்கிறது. தெய்வங்களுக்கு வெள்ளை எள்ளும் பித்ருக்களுக்கு கருப்பு எள்ளும் அளிக்கப்படுகிறது. கருப்பு எள் ரஜ/தம அதிர்வலைகளை வெளிப்படுத்துகிறது. இவற்றின் உதவியுடன் அதிருப்தி அடைந்த மூதாதையர்களால் பூமியில் அந்த சடங்கு நடக்கும் இடத்திற்கு வர முடிகிறது. இந்த சடங்கில் அர்ப்பணிப்பதைப் பெற்று அவர்கள் திருப்தி அடைகிறார்கள்.

9.      தெய்வங்களுக்கு எள் தர்ப்பணம் செய்யும் வழிமுறை

தெய்வங்களுக்கு எள் தர்ப்பணம் செய்யும்போது உள்ளங்கையின் நிலை

அ. முதலில் ஒரு வட்ட தாமிரத் தட்டை கையில் ஏந்த வேண்டும்.

ஆ. பிரம்மா, ஸ்ரீவிஷ்ணு மற்றும் அவர்களின் ஒருங்கிணைந்த ரூபமான ஸ்ரீ தத்தாத்ரேயரை ஸ்மரித்து அவர்களிடம் அந்த தட்டில் ஆவாஹனம் ஆகும்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இ. தெய்வங்கள் சூட்சும ரூபத்தில் அந்த தாமிரத் தட்டில் ஆவாஹனம் ஆகி உள்ளனர் என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ள வேண்டும்.

ஈ. வெள்ளை எள்ளை எடுத்துக் கொண்டு அதை தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்ற ஆன்மீக உணர்வுடன் அவற்றின் மேல் தண்ணீர் ஊற்றி உள்ளங்கையிலிருந்து தாமிரத் தட்டில் விழுமாறு செய்ய வேண்டும்.

உ. கைகளைக் கூப்பி தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதுவே தெய்வங்களுக்கு எள் தர்ப்பணம் செய்யும் வழிமுறை. தெய்வங்களுக்கு எள்ளையும் தண்ணீரையும் ஆன்மீக உணர்வுபூர்வமாக வழங்கும்போது, அந்த தெய்வங்களின் ஸாத்வீகத் தன்மையை அதிக அளவு அவரால் க்ரஹிக்க முடியும்.

10.   மூதாதையர்களுக்கு அக்ஷய த்ரிதீயை
அன்று எள் தர்ப்பணம் செய்வதன் முக்கியத்துவம்

இன்றைய தினத்தில் உயர் லோகங்களிலிருந்து அதிக அளவு ஸாத்வீகத் தன்மை பூமியை அடைகிறது. புவர்லோகத்திலிருந்து பல ஜீவன்கள் இந்த ஸாத்வீகத் தன்மையை க்ரஹித்துக் கொள்ள பூமிக்கு  அருகில் வருகின்றனர். இதனால் மனிதர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிருப்தி அடைந்த மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்கள் 30 முதல் 40% வரை இருக்கும். இந்த ஜீவன்கள் பூமிக்கு அருகில் வருவதால் அவர்களுக்கு எள் தர்ப்பணம் மூலமாக சக்தி கிடைக்கிறது; மேற்கொண்டு செல்லக்கூடிய கதியும் கிடைக்கிறது.

11.   இறந்த மூதாதையர்களுக்கு எவ்வாறு
எள் தர்ப்பணம் செய்ய வேண்டும்?

 இறந்த மூதாதையர்களுக்கான எள் தர்ப்பணம்

அ. ஒரு வட்ட தாமிர தட்டை எடுத்துக் கொண்டு அதில் ஆவாஹனம் ஆகுமாறு இறந்த மூதாதையர்களிடம் வேண்ட வேண்டும்.

ஆ. மூதாதையர்கள் சூட்சும ரூபத்தில் அந்த தாமிரத் தட்டில் ஆவாஹனம் ஆகி உள்ளனர் என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ள வேண்டும்.

இ. கருப்பு எள்ளை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈ. எள்ளில் ஸ்ரீவிஷ்ணு மற்றும் பிரம்மாவின் தத்துவங்கள் உருவேற வேண்டும் என்று அந்த தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உ. பிறகு இந்த தெய்வ தத்துவங்கள் உருவேறிய எள்ளை, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு இடையே தண்ணீருடன் சேர்ந்து தாமிர தட்டில் விட வேண்டும். எள்ளையும் தண்ணீரையும் மூதாதையர்களுக்கு தருகிறோம் என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ள வேண்டும்.

ஊ. மூதாதையர் ஆத்மாக்களின் மேற்பட்ட பயணம் சுலபமாக நடக்க ஸ்ரீ தத்தாத்ரேயர், பிரம்மா மற்றும் ஸ்ரீவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

12. எள் தர்ப்பணத்தின் பலன் என்ன?

மூதாதையர்கள் எள்ளை பெரிதும் விரும்புகின்றனர். எள்ளை உபயோகித்து மூதாதையர்களுக்காக சடங்குகள் செய்யும்போது தீய சக்திகள் தடங்கல்கள் ஏற்படுத்துவதில்லை. அதிக அளவு ஸாத்வீகத் தன்மையை க்ரஹித்து ரஜ-தம தன்மையை அழிக்கும் சக்தி எள்ளுக்கு உண்டு. எள் தர்ப்பணம் செய்யும்போது மூதாதையர்களை அழைப்பதால் அவர்கள் சடங்கு செய்பவரின் ஆன்மீக உணர்வுக்கு ஏற்ப அந்த தாமிர தட்டில் நுழைகின்றனர். இந்த சூட்சும தேஹங்களை சுற்றி கஷ்டம் தரும் அதிர்வலைகள் உள்ளன. எள் தர்ப்பணம் செய்த பின்பு இந்த சூட்சும தேஹங்கள் ஸாத்வீகத் தன்மையை க்ரஹித்துக் கொள்கின்றன. சடங்கின் மூலம் திருப்தி அடைந்த சூட்சும தேஹத்தின் கஷ்டம் தரும் ஆவரணம் குறைகிறது; அதோடு அதை சுற்றி சைதன்ய கவசம் ஏற்படுகிறது. மேற்கொண்டு பிரயாணம் செய்வதற்குரிய சக்தியும் பிராண சக்தியும் கிடைக்கிறது. அதன் பலனாக சூட்சும தேஹத்தின் கனம் குறைந்து லேசாகி கதி கிடைக்கிறது. எள் தர்ப்பணத்தால் மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்கள் 5 முதல் 10% குறைகிறது. அக்ஷய த்ரிதீயை அன்று எள் தர்ப்பணம் செய்வதால் ஒருவரால் தெய்வ கடன் மற்றும் பித்ரு கடனை ஓரளவிற்கு அடைக்க முடிகிறது.

13. அக்ஷய த்ரிதீயை அன்று
செய்யப்படும் தானத்தின் முக்கியத்துவம்

இன்றைய தினம் செய்யப்படும் தானம் நீடிக்கிறது. அக்ஷய த்ரிதீயை அன்று நல்ல தானியங்கள், நீர்க்கலசம், வெட்டிவேர் விசிறி, குடை, செருப்பு போன்றவற்றை மூதாதையர்களுக்காக தானம் செய்ய வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.

பிராம்மணருக்கு நீர்க்கலசம் தானம் அளித்தல்

அக்ஷய த்ரிதீயையில் செய்யப்படும் தானம் என்றும் குறைவதில்லை. மகான்களுக்கும் சத்காரியத்திற்கும் செய்யப்படும் தானம் அதிக மகத்துவம் வாய்ந்தது. இத்தகைய தானம் செய்பவர் இறந்த பின் உயர்ந்த லோகங்களுக்கு செல்வர்.

தெய்வம் மற்றும் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் அர்ப்பணம் செய்வதால் அவர்கள் திருப்தியடைந்து அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கிறது.

14.தெய்வங்கள் மற்றும்
மூதாதையர்களுக்காக பிராம்மணர்களுக்கு
நீர்க்கலசத்தை தானம் செய்வதன் நோக்கம்

நீர்க்கலசம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய நிர்குண கலசமாக கருதப்படுகிறது. மூதாதையர்களுக்காக இந்த நீர்க்கலசத்தை தானம் செய்யும்போது நம் ஆசைகள் அழிகின்றன. அதோடு இந்த செயல் மூலம் கிடைக்கும் இறைவனின் அருள் நம் கர்மாக்களால் ஏற்பட்ட பாவத்தை போக்குகின்றது. நம் கர்மாக்களால் ஏற்படும் சூட்சும ஆசைகள் இந்த தானத்தின் மூலம் இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகின்றன. நீர்க்கலசத்தை தானம் செய்வதன் அர்த்தம் – கலசத்திலுள்ள நீர் பவித்ரமாக கருதப்படுவதால் அது நம் உடல் சம்பந்தமான ஆசைகளை நம் கர்மாக்களை அந்த கலசத்தில் கரைத்து விடுகிறது. அதன் மூலம் ஆசைகள் அழிக்கப்படுவதால் கர்மாக்களை எதிர்பார்ப்பின்றி செய்ய முடிகிறது. அதோடு எல்லா ஆசைகளும் இந்த நீர்க்கலசத்தின் வாயிலாக தெய்வங்கள் மற்றும் பித்ருக்களின் பிரதிநிதியாக உள்ள பிராம்மணரின் காலடியில் சமர்ப்பிக்கப்படுகிறது.

15.  நீர்க்கலசத்தை தானம் அளிப்பதன் வழிமுறை

தெய்வத்திற்கென்று வைக்கப்பட்ட கலசத்தில் வசந்த-மாதவ் என்ற பெயரில் ஸ்ரீவிஷ்ணு ஆவாஹனம் செய்யப்பட்டு அதற்கு பூஜை செய்யப்படுகிறது. அதேபோல் மூதாதையர்களுக்காக வைக்கப்பட்ட கலசத்தில் அனைத்து மூதாதையர்களும் ஆவாஹனம் செய்யப்பட்டு அதற்கும் பூஜை செய்யப்படுகிறது.

16. பூஜைக்கான உபகரணங்களின்
அமைப்பு மற்றும் பூஜை சடங்கு

ஒன்று தெய்வத்திற்காகவும் ஒன்று மூதாதையர்களுக்காகவும் என்று இரு சிறிய முக்காலிகள் வைக்க வேண்டும். அவற்றின் மீது அரிசி தானியத்தைக் குவித்து இரு தாமிர தட்டுகளை வைக்க வேண்டும். கலசங்களை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்திற்கு அருகில் ஒரு தேங்காய் வைக்க வேண்டும். அதோடு இரு வெற்றிலைகளை இரு கலசத்திற்கு அருகிலும் வைக்க வேண்டும். அவற்றின் மீது பாக்கு மற்றும் தக்ஷிணை வைக்க வேண்டும். நைவேத்தியமாக பழங்களை வைக்க வேண்டும். தெய்வத்திற்காக வைக்கப்பட்ட கலசத்தில் ஒரு பாக்கும் வெள்ளை எள்ளும் போட வேண்டும். மூதாதையர்களுக்காக வைக்கப்பட்ட கலசத்தில் ஒரு பாக்கும் கருப்பு எள்ளையும் போட வேண்டும். கலச பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பு ஆசமனம், பிராணாயாமம் செய்து பின் தேச காலத்தைக் கூறி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். கலசத்தை சுற்றி ஒரு புது வஸ்திரத்தை அணிவிக்க வேண்டும். தெய்வத்திற்காக வைக்கப்பட்ட கலசத்தில் வசந்த-மாதவரிடம் பிரார்த்தை செய்து ஆவாஹனம் செய்து பின் பூஜை செய்ய வேண்டும். அதேபோல் மூதாதையர்களுக்கும் கலச பூஜை செய்ய வேண்டும். கலச பூஜைக்கு பின்னர் பிராம்மண பூஜை செய்து தெய்வத்திற்கான கலசத்தை பிராம்மணருக்கு தானமாக அளிக்க வேண்டும். எல்லோரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதேபோல் மூதாதையர்களின் கலசத்தையும் பிராம்மணருக்கு தானமாக அளிக்கலாம். இறைவனிடம் மூதாதையர்களின் அமைதி, ஆனந்தத்திற்காகவும் அவர்களின் மேற்கொண்ட பயணம் சுலபமாக நடைபெறவும் பிரார்த்தனை செய்யவும்.

அ. நீர்க்கலசத்தை பிராம்மணருக்கு தானம் அளிக்கும்போது கூற வேண்டிய மந்திரம்

ஏஷ தர்மகடோ தத்தோ பிரம்மவிஷ்ணுசிவாத்மக: |
அஸ்ய ப்ரதாநாத் த்ருப்யந்து பிதரோபி பிதாமஹா: ||
கந்தோதகதிலௌர்மிஷ்ரம் சான்னம் கும்பம் ஃபலான்விதம் |
பித்ருப்ய: ஸம்ப்ரதாஸ்யாமி அக்ஷய்யமுபதிஷ்டது || – தர்மசிந்து

அர்த்தம் : பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் உள்ள இந்த தர்ம கலசத்தை நான் பிராம்மணருக்கு தானமாக அளிக்கிறேன். இச்செயலின் மூலம் தெய்வங்களும் மூதாதையர்களும் திருப்தி அடையட்டும். சந்தனம், தண்ணீர், எள்ளு, பார்லி மற்றும் பழங்களுடன் இந்த தர்ம கலசத்தை மூதாதையர்களுக்கு அளிக்கிறேன். இந்த கலசம் எப்போதும் எனக்கு அக்ஷயமாக, குறைவில்லாமல் இருக்கட்டும்.

17. மூதாதையர்களுக்கு நீர்க்கலசத்தை
வழங்குவதால் ஏற்படும் பலன்

அ. சூழலில் துகள்கள் ரூபத்தில் சைதன்யம் தொடர்ந்து செயல்படுகிறது.

ஆ. நீர்க்கலசத்திற்கு பூஜை செய்பவர் மனதில் மூதாதையர்களிடம் நன்றியுணர்வு ஏற்படுகிறது. அவரின் அநாஹத சக்கரத்தில் ஆன்மீக உணர்வு வளையம் ஏற்படுகிறது.

இ. பூஜை செய்யப்படும் நீர்க்கலசத்தை சுற்றி சைதன்ய வளையம் ஏற்படுகிறது.

ஈ. பூஜை செய்த பின்பு அந்த கலசத்திற்குள் ஒரு சக்தி வளையம் சுற்ற ஆரம்பிக்கிறது.

உ. கலசத்தை நோக்கி பித்ரு லோகத்திலிருந்து அலை அலையாக மூதாதையர்கள் ஆகர்ஷிக்கப்படுகின்றனர்.

ஊ. கலசத்திலுள்ள தண்ணீர், கருப்பு எள் மற்றும் பாக்கால் இந்த அலைகள் வளைய ரூபத்தில் சுற்றி வருகின்றன.

எ. நீர்க்கலசத்தை பிராம்மணருக்கு தானம் செய்யும்போது தானம் செய்பவரின் அநாஹத சக்கரத்தில் ஸத்வ பிரதானமான வளையம் செயல்பட ஆரம்பிக்கிறது.

ஏ. தானம் செய்பவரிடமிருந்து தானம் பெறுபவரை நோக்கி ஒரு ஸத்வ பிரதானமான ஓட்டம் ஏற்படுகிறது.

ஐ. தானம் பெரும் பிராம்மணரின் அநாஹத சக்கரத்தில் ஒரு ஸத்வ பிரதானமான வளையம் ஏற்படுகிறது.

ஒ. பூலோகத்திலிருந்து பித்ருலோகம் வரை சூட்சும தேஹங்களை கொண்ட ஒரு பிரவாஹம் செயல்படுகிறது.

ஓ. அதிருப்தி அடைந்த மூதாதையர் இந்த பிரவாஹத்தில் சூட்சும தேஹங்களாக உள்ளனர்.

ஔ. இந்த சூட்சும தேஹங்களை சுற்றியுள்ள நிறைவேறாத ஆசைகள் என்ற கஷ்டம் தரும் ஆவரணம் அழிகிறது. அவர்களுக்கு கதி கிடைத்து அடுத்த லோகத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கின்றனர்.

ஃ. ஆசீர்வாத ரூபமான சைதன்ய பிரவாஹம் மூதாதையர்களிடமிருந்து அந்த நபரை நோக்கி ஏற்படுகிறது.

க. அந்த நபரை சுற்றியுள்ள கஷ்டம் தரும் ஆவரணம் அழிகிறது.

கா. அந்த நபரை சுற்றி முழுவதும் ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது.

18.  நீர்க்கலச தானம் மற்றும் எள் தர்ப்பணம் தவிர
அக்ஷய த்ரிதீயை அன்று செய்ய வேண்டிய மற்ற சடங்குகள்

இந்த சுபதினத்தில் விதைகள் விதைக்கப்படுகின்றன. பூமிபூஜை செய்யப்பட்டு மரங்கள் நடப்படுகின்றன. சில இடங்களில் மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகிறது.

19.  பொதுமுடக்க சமயத்தில் அக்ஷய த்ரிதீயை
கொண்டாட வேண்டிய வழிமுறை

பொதுமுடக்க சமயத்தில் நம்மால் வீட்டை விட்டு வெளியேற முடிவதில்லை. இத்தகைய நிலையில் ஆபத்தர்மத்தில் கூறியுள்ள சில மாற்று ஏற்பாடுகளை இங்கு தருகிறோம் –

1. பவித்ர ஸ்நானம் – குளிக்கும்போது கங்கா மாதாவிடம் பிரார்த்தனை செய்வதன் மூலம் புனித கங்கையில் குளித்த புண்ணிய பலன் கிடைக்கிறது. அதற்கு குளிக்கும் முன்பு இந்த ஸ்லோகத்தை சொல்லவும் –

கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு ||

அர்த்தம் : ஹே புனித நதிகளான கங்கா, யமுனா, கோதாவரி, ஸரஸ்வதி, நர்மதா, சிந்து மற்றும் காவேரி, தயைகூர்ந்து இந்த தண்ணீரில் எழுந்தருளுங்கள்.

2. ஸத்பாத்ர தானம் – இன்று பல ஸ்தாபனங்கள் ஆன்லைன் மூலமாக நன்கொடை பெறுகின்றன. இந்த வசதியை பயன்படுத்தி நீங்களும் ஆன்மீகத்தைப் பரப்பும் மகான்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். இதற்கு வீட்டின் படியைக் கூட தாண்டத் தேவையில்லை.

3. நீர் நிரம்பிய கும்பத்தின் தானம் – அக்ஷய த்ரிதீயை அன்று நீர் நிரம்பிய கும்பத்தை தானமாக அளிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. தற்போது வெளியே போக முடியாத நிலையில் அதற்கான சங்கல்பத்தை மேற்கொள்ளலாம். பிறகு, பயண கட்டுப்பாடுகள் தளர்ந்த பின்பு, வெளியே செல்வது பாதுகாப்பானது என்று அரசு அறிவித்த பிறகு நிஜமான தானத்தை செய்யலாம்.

4. பித்ரு தர்ப்பணம் – இது இறந்த மூதாதையர்களுக்காக செய்யப்படும் அர்ப்பணம். மூதாதையர்களிடம் பிரார்த்தனை செய்து இந்த தர்ப்பணத்தை வீட்டிலேயே செய்யலாம்.

5. குலாசாரப்படி செய்ய வேண்டிய சில சடங்குகள் – உங்கள் குல வழக்கப்படி சில சடங்குகளை செய்யும்போது அது அரசு விதிகளை மீறாமல் உள்ளனவா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Comment