குரு நம் வாழ்வில் வந்துவிட்டால் படிப்படியாக செயல், கர்மா, காட்சி, நேர் அனுபவம், அனுபூதி மூலமாக கற்றுத் தந்து, அவரவரின் உண்மை ஸ்வரூபத்தை உணர வைத்து, அவரின் வெறும் இருப்பால் வாழ்க்கைப் பாடம் நடத்தி ஆத்மஞானத்தையும் பெறச் செய்கிறார், இதன் மூலமாக ஒவ்வொரு நிலையையும் அவரின் அருள் பலத்தால் தாண்ட வைத்து, ஸங்கல்ப சக்தியால் ஸஹஜமாக இதையெல்லாம் நடத்துவிக்கிறார். அதனால் ஜீவனால் வெகு விரைவில் சம்சாரக் கடலைக் கடக்க முடிகிறது.
ஸத்ஸங்கத்தில் இருந்து கொண்டு குருவின் செயல்களை நேரில் காண்பதன் மூலமும் அவற்றின் உள்ளர்த்தத்தை ஆழ் மனதில் அறிந்து கொள்வதன் மூலமும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. இக்காரியங்களின் சைதன்யத்தை உள்வாங்கி மனதில் அசை போடுவதால் அந்த ஜீவன் குறைந்த காலத்திற்குள் மோக்ஷம் வரை பயணிக்க முடிகிறது.
மோக்ஷ பதத்தை அளிக்கும் குருவை குருமௌலி என்கிறோம்! ஒரு முறை குருவின் கையைப் பற்றிக் கொண்டால் குரு அவரை அனைத்து பிறவிகளிலும் கூடவே வந்து இறுதியில் மோக்ஷ பதத்தையும் அடையச் செய்கிறார்; அதனால் மோக்ஷ பதத்தை அருளும் குருவை, அதி உன்னத பதமான குருமௌலி என அழைக்கிறோம்.
– ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில்.
குருவின் வழிகாட்டுதலால்
வெளிப்படும் நன்றியே குருவந்தனமாகும்!
ஞானிகளின் ராஜா குருமஹராஜ் என்று ஸந்த் ஞானேச்வர் கூறியுள்ளார். ஞானத்தை வழங்குபவரே குரு! கல்லிலிருந்து சிலை வடிக்கப்படுகிறது; ஆனால் அதற்கு சிற்பி வேண்டும். அதேபோல் ஒரு ஸாதகருக்கு, சிஷ்யருக்கு இறைவனை அடைய முடியும்; ஆனால் அதற்கு குரு மிகவும் அவசியம். குரு தன்னுடைய ஞான அமுதத்தால் ஸாதகர் மற்றும் சிஷ்யரின் அஞ்ஞானத்தைப் போக்குவதால் இறைவனை அடைய முடிகிறது. ஸாதகர் மற்றும் சிஷ்யர் ஸாதனை செய்யும்போது என்ன செய்ய வேண்டும், என்ன தியாகம் செய்ய வேண்டும் போன்ற விஷயங்களை குரு உணர்த்துகிறார். வெறும் உபதேசத்தால் மட்டுமல்ல, சாதாரண நடவடிக்கையால், பேச்சாலும் உணர்த்துகிறார். அதனால் எவ்வளவு முறை குருசரணங்களில் நன்றி செலுத்தினாலும் போதாது.
(மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸனாதனின் தமிழ் கையேடு ‘குருக்ருபயோகம்’)