கைசிக ஏகாதசி

கார்த்திகை மாதம் “சுக்லபக்ஷ ஏகாதசி” மற்றும்  “துவாதசி” அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி  நிச்சயம்.  அப்பேர்ப்பட்ட மகத்துவமான “கைசிக ஏகாதசி”.

மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான “வைகுண்ட ஏகாதசி”. மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான “கைசிக ஏகாதசி”.  மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.

கைசிக ஏகாதசி மஹாத்மியம்

கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் “ஸ்ரீ வராக மூர்த்தியே” கூறுவதாக உள்ளது. இதற்கு “ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்” அருளியுள்ளார்.

ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார். மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த “கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு” உரைத்தார். பகவான் கூறியது.

தென் பாரத தேசத்தில், மகேந்திர பர்வதத்தைக் கொண்ட திவ்யதேசம் “திருக்குறுங்குடி”. இங்கு பிறந்த ஒருவன், பூர்வ ஜென்ம பலத்தால் “திருக்குறுங்குடி நம்பியான அழகிய நம்பி” மீது அளவில்லா பக்தியுடன் இருந்தான்.   பத்து ஆண்டுகள், ஒவ்வொரு இரவும் கையில் வீணையுடன், மலை ஏறி, பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் அழகிய நம்பியை “திருப்பள்ளியெழுச்சி” செய்து வந்தான்.   இந்த புண்ணியவானே “நம்பாடுவான்”.

நம் பாடுவான் என்பவன் நல்ல கவிதிறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால், அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். வாசல் வரை வந்து நிற்பதற்கு மட்டுமே நம்பாடுவானுக்கு அனுமதி உண்டு.

கோயிலின் வாசலிலிருந்து பகவானைப் பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும், அழகிய நம்பியான பெருமாள் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவர் கேட்டு கொண்டிருக்கிறார், அதுவே போதும். அதிலே எனக்குப் பரமதிருப்தி! என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான் நம்பாடுவான்.

“கைசிகம்” என்ற பண்ணில் நம்பியின் புகழைப் பாடி மகிழ்வான். ‘கைசிக பண்’ என்பது கர்நாடக சங்கீதத்தில் பைரவி ராகத்தைக் குறிக்கிறது.  நம்பாடுவான் தினமும் விடியற் காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளைப் பாடுவான். இவனது பெருமையையும் பிரதிபலன் கருதாத பக்தியையும் “ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம் பாடுவான்” எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான்.

ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி துவாதசி இரவில், ஒரு யாமத்திற்கு மேல் வீணையும், கையுமாய் எம்பெருமானைத் துயிலெழுப்ப மலையேறினான்.  அந்த இரவு நேரத்தில் நடு வழியில், பூர்வத்தில் “சோமசர்மா” என்பவன் அந்தணணாய் இருந்து, யாகம் ஒன்றில் செய்த பெரும் பிழையால் பிரம்மராக்ஷஸனாய் திரிந்தான்.  அந்த பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். தான் பத்து தினங்கள் பட்டினியாய் அலைவதாயும், அவனே தனக்கு தெய்வம் தந்த உணவு என்றான் நம்பாடுவானிடம். பிரம்மராக்ஷஸன் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் பிரம்மராக்ஷஸன் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால், பயப்படவில்லை.

பிரம்மராக்ஷஸனை பார்த்து, “நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுப்பித், துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு, என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே” என்று கெஞ்சினான். ஆனால், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை நோக்கி ”நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே ,எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன்” என்று கூறியது.

நம்பாடுவானோ தான் இறைவனை திருப்பள்ளியெழுச்சி செல்ல மலையேற வழிவிடுமாறு மன்றாடினான்.  பிரம்மராக்ஷஸனோ காது கொடுத்து கேட்கவே இல்லை.  எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரம்மராக்ஷஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் நம்பாடுவான்.   இதற்கு மேல் என்ன சொன்னாலும், பிரம்மராக்ஷஸன் கேட்கப் போவது இல்லை என்று உண்மைச் சூழ்நிலையான தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்துக் கொண்டான் நம்பாடுவான்.

உடனே, பிரம்மராக்ஷஸனைப் பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து “திருப்பள்ளியெழுச்சி” பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு பிரம்மராக்ஷஸன் பலமாக சிரித்து, “சண்டாளனே!  பிறவிக்கு ஏற்ப அதத்யம் செய்கிறாய். இந்த பிரம்மராக்ஷஸன் கையில் மீண்ட எவன் மறுபடியும் திரும்பி வருவான்.? என்றதோடு மட்டுமல்லாமல், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய் சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பி விடுவாய்” என்றது.

அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான பாவங்களைச் சொல்லி, நான் மீண்டும் வராவிடில் இந்தப் பாவங்கள் என்னை வந்தடையும் என்றான் நம்பாடுவான்.   (ஒரு பாவத்தை விட அடுத்த பாவம் கொடியது என்ற வரிசையில் சொல்லி சபதம் இட்டான் நம்பாடுவான்).    17 வது சபதம் வரை சற்றும் மசியாத பிரம்மராக்ஷஸன் 18 வதாக நம்பாடுவான் செய்த சபதம் “மிகக் கொடிய பாவம்” என்று அறிந்து, நம்பாடுவானை மலையேறிச் செல்ல வழிவிட்டது.

அப்படி என்ன சபதங்கள் செய்தார் நம்பாடுவான்?

மலையேறி எம்பெருமான் அழகியநம்பியைத் தரிசித்து நான் திரும்ப வரவில்லை என்றால் :

1. சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.

2. பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.

3. எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்.

4. எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன்.

5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அவளை அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன்.

6. எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிரானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும்.

7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும்.

8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு எதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு அவனுக்கு கொடுக்காமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன்.

9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்.

10.ஒரு பொருளை தானமாக கொடுப்பதாகக் கூறி, பின்பு  மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையக்கடவேன்.

11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன்.

12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன்.

13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.

14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் (வயதான காலத்தில் தனியே) விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும்.

15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் “மகா பாவம்” என்னை வந்தடையட்டும்.

16. எவன் பிரம்மஹத்தி தோஷம் செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, விரதத்திற்கு பங்கம் பண்ணுகிறானோ இப்படிப்பட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன்.

17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்.

இந்த “17 சபதங்கள்” நம்பாடுவான் சொல்லியும் கூட பிரம்மராக்ஷஸன் அசைந்து கொடுக்கவில்லை.

18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேஸ்வரனான அந்த “ஸ்ரீமன் நாராயணனையும்” மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும்.

இந்த பதினெட்டாவது சபதத்தைக் கேட்டதும் பிரம்மராக்ஷஸன் திகைத்து நின்றது. அது மிகக் கொடிய பாவம் என்று அறிந்து கொண்டது பிரம்மராக்ஷஸன். நம்பாடுவான் மேலே சொன்ன சபதங்களைக் கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தைப் புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை என்று உணர்ந்தது. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது.   பிரம்மராக்ஷஸன் வழிவிடவும் நம்பாடுவான் அழகிய நம்பியைக் காணும் ஆவலில் ஓடோடி மலையேறினான்.  நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம்பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது.

நம்பாடுவானின் அபரிமித அனன்ய பக்தி

பெருமாளே! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை உன்னைப் பாட வந்து விட்டேன். இதுவே, எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாகப் பாடினான். ஏனெனில், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை உண்டு விட்டால், அவரது உயிர் பிரிந்து விடும் அல்லவா!  இறைவனை இனிமேல் காண முடியாது என்று மிகவும் உருக்கமாகப் பண் இசைத்து பாடினார் நம்பாடுவான். உள்ளிருந்த “அழகிய நம்பி பெருமாள்” நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார்.   தான் ஆட்கொள்ள வேண்டிய தனது பக்தனின் திருமுகத்தைத் தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத், தான் அளிக்கும் மதிப்புதான் என்ன?  என்று யோசித்தார்.

எம்மை நம்பாடுவானான அவன் காண இயலாதிருந்தும், அவனை நாம் பார்த்து அருள்புரிவோம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது.

“விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும்!  அதை விட நான் அவனைக் காண வேண்டும் !!!  விலகு” என்று தனது பார்வையைச் சற்றே கொடிமரத்தை நோக்கி பார்வையாலேயே சற்று விலக்கினார்.

எம்பெருமான் அழகியநம்பிக்குத் தான் தன் பக்தர்களின் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு! கருணை! பாசம் எல்லாம். தன் பக்தன் என்னைக் காணாவிடிலும், நான் அவனைக் கண்டு அவனுக்கு என் தரிசனத்தைக் கொடுப்பேன் என்று பார்வையாலேயே கொடிமரத்தை விலக்குகிறார் எம்பெருமான்.

கொடிமரம் விலகிய அடுத்த நொடியே “பளிச்சென்று ஓர் ஒளி உள்ளே இருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தன் கண் முன்னே, தான் பார்ப்பது நம்பிதானா” என்று உள்ளம் குதூகலித்தான் நம்பாடுவான்.  ஆஹா! பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன பாக்கியம் வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம்.

நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது.  அதைவிடத் தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்மராட்சசனை நோக்கி விரைந்தான்.  இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு பிரம்மராக்ஷஸனிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் அதிகமாகக் காணப்பட்டது.

பகவானே சுந்தர புருஷனாக வருதல்

நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது, ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, “யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்?.  நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்! அங்கே போகாதே”” என்று கூறினான். நம்பாடுவானும், “சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என்று சொன்னார். நம்பாடுவான் “சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்” என்று வேண்டினான். தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த “சுந்தரபுருஷன்” உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான்.

அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை!! எம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் ரூபமான சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்மராட்க்ஷஸனையும் ஒருங்கே கடாட்ஷித்து அருள்புரிய எண்ணினார் வராஹமூர்த்தி.

நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் அழகிய நம்பி பெருமாளை வாயாறப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறி நின்றான். பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த பிரம்மராட்க்ஷஸனுக்கு, நம்பாடுவான் வந்த பின்பு பசியே இல்லாமல் இருந்தது. நம்பாடுவானைப் புசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மராக்ஷஸனுக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக மற்றொன்றை நம்பாடுவானிடம் பிரம்மராக்ஷஸன் கேட்டது.

“ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனான, ஸ்ரீமந்நாராயணரான அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான்உன்னை விட்டு விடுகிறேன்” என்றது. அதற்கு நம்பாடுவான் ‘நான் கொடுத்த சத்தியத்தைக் காக்க வேண்டும். ஆகவே என்னை புசித்துக்கொள்’ என்றான். பிரம்மராட்க்ஷஸனும், “அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன்  ஜன்மத்திலிருந்து காப்பாற்று” என்று மன்றாடியது. “நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?” என்று கேட்டான் நம்பாடுவான்.

சோமசர்மா பிரம்மராக்ஷசனான கதை

அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன்.  பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன்.  தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது.

தன்னை அண்டிய அந்த பிரம்மராட்க்ஷஸனிற்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான்.அதன்படியே, “நேற்றிரவு கைசிகம் என்ற பண்” பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்குக் கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜென்மத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவாய் என்று கூறினான் நம்பாடுவான்.

நம்பாடுவானின் வரத்தை பெற்ற பிரம்மராட்க்ஷஸன் ராட்க்ஷஸ ஜென்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோட்சத்தை அடைந்தது. நம்பாடுவானும் நெடுங்காலம் அழகியநம்பி பெருமாளைப் போற்றிப் பாடி, கால முடிவில் திருநாடு (பரமபதம்) அடைந்தான்.

ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த “பராசர பட்டர்” என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதைக் கேட்டு சந்தோசமடைந்த அரங்கன், பராசர பட்டருக்கும் பரமபதத்தைத் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

கைசிக ஏகாதசி விரத மகத்துவம்

ஒவ்வொரு கார்த்திகை மாதம் “சுக்லபக்ஷ ஏகாதசி” அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது.

அப்பேற்பட்ட இந்த “கைசிக மகாத்மியத்தை” கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள் என்று பூமி பிராட்டிக்கு “வராஹ பெருமாளே சொன்ன சத்தியம்” இந்த மஹாத்மியம்.

இப்பிறவியில் எல்லா கஷ்டங்களும் நீங்கி, மகிழ்ச்சியாகிய சந்தோசத்தை அனுபவித்து, அனைத்து செல்வங்களையும் பெற்று, எம்பெருமானின் கருணையைப் பெற்று ஆனந்த வாழ்வு நம் அனைவரும் வாழ அவர் அருள் நம் அனைவரையும் வழி நடத்தட்டும்.

ஓம் நமோ நாராயணாய நமஹ!

ஓம் வராஹ மூர்த்தியே நமஹ!

திருக்குறுங்குடி அழகிய நம்பி திருவடிகளே சரணம்!

(தகவல் : ஸ்ரீவராஹ புராணம், 48-வது அத்தியாயம், கைசிக மகாத்மியம்)

 

 

Leave a Comment