ஆளுமை குறைகளைக் களைவதன் மஹத்துவம் – மனம் மற்றும் ஸன்ஸ்காரங்கள்

1. மனம்

மனித சுபாவம் மனதுடன் சம்பந்தப்பட்டதால் ஆளுமை குறைகளைப் பற்றி சிந்திப்பதற்கு முன்பு மனதின் காரியத்தை தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது. அதை  பற்றிய விஷயங்களை முதலில் பார்ப்போம்.

 1 அ. ஆன்மீக சாஸ்திரப்படி

மனித ஜீவன் என்பது ஸ்தூல தேஹம் மற்றும் சூட்சும தேஹத்தால் (லிங்கதேஹம்) ஆனது. ஸ்தூலதேஹம் என்பது நம்முடைய உடலைக் குறிக்கிறது. லிங்கதேஹம் என்பது ஜீவாத்மா (ஆத்மா) மற்றும் அவித்யா (ஆத்மாவை சுற்றியுள்ள  ஆவரணமான மாயை) ஆகிய இரண்டும் கலந்து உருவானது.  அவித்யாவானது, பஞ்சசூட்சும ஞானேந்திரியங்கள், பஞ்ச சூட்சும கர்மேந்திரியங்கள், பஞ்ச சூட்சும பிராணன் (ஒரு சிந்தனைப்படி லிங்கதேஹத்தில் பஞ்ச சூட்சும பிராணன் இல்லை), மனம் (வெளி மனம்), சித்தம் (ஆழ்மனம்), புத்தி மற்றும் அஹம்பாவம் ஆகிய பத்தொன்பது விஷயங்களை உள்ளடக்கியது. பஞ்சபிராணன், எல்லா காரியங்களுக்கும் தேவையான சக்தியை வழங்குகிறது. பாரதீய தர்சனசாஸ்திரப்படி அந்தக்கரணம் என்பது நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. வெளி மனம், ஆழ்மனம், புத்தி மற்றும் அஹம்பாவம்.  இவை நான்கும் சேர்ந்ததே ‘அந்தக்கர்ணசதுஷ்டய’. இவற்றின் செயல்பாடுகள் பின்வருமாறு

மனம் : ‘ஸங்கல்பம் விகல்பகாத்மகம் மன’: மனதின் செயல்பாடு சிந்திப்பது. இது நல்ல மற்றும் தீய எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள் மற்றும் உணர்வுகளை உள்ளடக்கியது. மனம் சஞ்சலிக்கக் கூடியது.  இதை செய்யலாமா அதை செய்யலாமா, என்ற சிந்தனை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு முடிவுக்கு வர முடிவதில்லை.

சித்தம் : உடல், புலன்கள், மனம், புத்தி மற்றும் அஹம்பாவம் ஆகிய அனைத்தின் தன்மைகளையும் செயல்பாடுகளையும் சேகரித்து வைப்பதை ‘ஸ்ம்ருதி’ என்பர். இந்த ஸ்மிருதிகள் அனைத்தும் சித்தத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

புத்தி : ‘நிச்சயாத்மிக புத்தி:’ என்பதற்கேற்ப எது சரியானது எது தவறானது என சிந்தித்து நிர்ணயிப்பதே புத்தியின் காரியமாகும்.  மனதின் சிந்தனைக்கேற்ப செயல் நடக்கின்றதா இல்லையா என்பது புத்தியை சார்ந்தது. மனதிலுள்ள சிந்தனைகளின் தீவிரத்திற்கேற்ப ஒருவரின் புத்தி குறிப்பிட்ட காரியங்களை செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு முடிவெடுக்கிறது.

அஹம்பாவம் :  ஸ்தூலதேஹம், புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் ஒவ்வொரு தன்மை மற்றும் செயலை உள்வாங்கி ‘நான் செய்கிறேன்’ என்ற உணர்வை நிர்மாணிக்கும் அந்தக்கரண தன்மையே அஹம்பாவமாகும்.

1 ஆ. நவீன மனோதத்துவப்படி

மனதில் இரு பாகங்கள் உள்ளன. ‘மனம்’ என்று நாம் சாதாரணமாக கூறுவது வெளி மனதைக் குறிக்கிறது மற்றும் வெளிப்படாமல் இருக்கும் இரண்டாவது பாகமே ஆழ்மனம் அல்லது சித்தமாகும்.  மனது மற்றும் அதன் செயல்பாடுகள் 10% பங்கை வகிக்கிறது, ஆழ்மனம் 90% பங்கை வகிக்கிறது.

வெளிமனம் (கான்ஷியஸ் மைண்ட்) : வெளிமனம் என்பது விழிப்படைந்த  மற்றும் செயல்பாட்டிலுள்ள மனமாகும். சாதாரணமாக எழும் சிந்தனைகளும் உணர்வுகளும் வெளி மனதுடன் சம்மந்தப்பட்டவையே.

ஆழ்மனம் (ஸப் கான்ஷியஸ் மைண்ட்) : இது ஆன்மீக மொழியில் ‘சித்தம்’ எனப்படுகிறது. ஆழ்மனம் என்பது எல்லா உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் ஆளுமை குறைகளின் சேமிப்பு கிடங்காக உள்ளது. அதில் எல்லாவிதமான அனுபவங்கள், உணர்வுகள், எண்ணங்கள், ஆசைகள், லட்சியங்கள் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன இருந்தாலும் இவ்விரு மனங்களின் இடையே ஒரு சுவர் இருப்பதால் வெளி மனதிற்கு இவை தெரிவதில்லை. சில சமயங்களில் ஒருவரைப் பார்க்கும்போது அவரை உடனே அடையாளம் காண்கிறோம், ஆனால் அவரின் பெயர் நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது. ஏனென்றால் வெளிமனம் அதை மறந்து விட்டது. ஆனால் சிறிது நேரம் கழித்து திடீரென்று அவரின் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது. ஏனெனில் அது ஆழ்மனதில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அதனால் ஆள்மனமே வெளி மனதிற்கு பெயரை நினைவூட்டுகிறது. ஆனால் நாமோ ‘அந்தப் பெயர் பிறகு என் ஞாபகத்திற்கு வந்தது’ என்கிறோம். ஆழ்மனமும் இரு பகுதிகளை கொண்டது.

1 ஆ 1. ஆழ்மனத்தின் மேல் பகுதி (ப்ரீகான்ஷியஸ் மைண்ட்) : இதில் உடல், புலன்கள், மனம், புத்தி மற்றும் அஹம் ஆகியவற்றின் தன்மைகள் மற்றும் செயல்களின் பல்வேறு நினைவுகள் பல்வேறு எண்ணப்பதிவு மையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவை அங்கிருந்து சிந்தனைகளாக எப்பொழுதும் வெளிக் கிளம்புகின்றன. அவரவரின் இச்சைக்கேற்ப வெளி மனதிற்கு அவை வருகின்றன. உதாரணத்திற்கு நண்பர்களின் அல்லது உறவினர்களின் பெயர்கள், அவர்களின் சுபாவங்கள், நீங்கள் மற்றவருக்கு உதவிய மற்றும் மற்றவர்களிடம் உதவி பெற்ற நிகழ்வுகள், உங்களின் பல்வேறு ஆசைகள், உணர்வுகள், விருப்பங்கள், லட்சியங்கள் பற்றிய நினைவுகள் ஆகிய அனைத்தும் தொடர்ந்து சிந்தனைகளாக வெளிப்படுகின்றன.  அதாவது மனம் எப்பொழுதும் சிந்தனைகளற்ற நிலையில் இருப்பதில்லை. ஆழ் மனதிலுள்ள எண்ணப்பதிவு மையங்களைப் பற்றிய விஷயங்களை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

ஆசைகளின் மையம் : ஆசைகள், விருப்பங்கள், லட்சியங்கள், எதிர்பார்ப்புகள், பற்றுதல் (உயிர் மீது,  பற்றுதல், மகன் மீது, தர்மத்தின் மீது, மோக்ஷத்தின் மீது பற்றுதல் ஆகியவை) ஆகியவற்றின் எண்ணப்பதிவுகள் இந்த மையத்தில் உள்ளன.

விருப்பு, வெறுப்பு பற்றிய எண்ணப்பதிவுகள் விருப்பு – வெறுப்பு மையத்திலும், சுபாவத்திலுள்ள குணங்கள் மற்றும் குறைகள் சுபாவ மையத்திலும், கலை, விளையாட்டு போன்றவற்றிலுள்ள நிபுணத்துவம் சம்பந்தமான எண்ணப்பதிவுகள் சிறப்புத் திறன் மையத்திலும், சஞ்சிதம் மற்றும் பிராரப்த கர்மாக்கள் கொடுக்கல் – வாங்கல் கணக்கு மையத்திலும் குறித்து வைக்கப்பட்டுள்ளன

1 ஆ 2. ஆழ்மனதின் கீழ்ப் பகுதி (அன்கான்ஷியஸ் மைண்ட்) : எல்லா நினைவுகளின் தொகுப்பும் இங்கு உள்ளது. ஆனால் அவை மிக ஆழமாக உள்ளதால் நமக்கு அவை நினைவுக்கு வருவதில்லை.  நம் இச்சைப்படி அவற்றை வெளி மனதிற்கு கொண்டு வர முடிவதில்லை. ஆனால் ஏதாவது அசாதாரண நிகழ்வு ஏற்பட்டால் ஆழமாக மறைந்திருக்கும் இந்த நினைவு வெளி மனதிற்கு வரலாம். உதாரணத்திற்கு பல வருடங்களுக்கு முன்பு, முன்பின் தெரியாத ஒருவர் நமக்கு வழிகாட்டி உதவியிருப்பார். பல வருடங்கள் ஆனதால் அவரைப் பற்றிய நினைவு நம்மிடம் இருப்பதில்லை. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு நாம் அதே இடத்தை அடையும்போது உதவிய அந்த நபரின் நினைவு மனதிற்குள் எழலாம். மனோவசிய முறைப்படியும் இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய பிறவிகளில் ஆழ் மனதில் பதிந்துள்ள நினைவுகளும் வெளி மனதிற்கு வரக்கூடும்.

2. ஸன்ஸ்காரங்கள்

ஸன்ஸ்கார் = ஸம் (ஸம்யக்) + கார்.  ஸம் என்றால் நல்ல மற்றும் கார் என்றால் காரியம்.

விளக்கம் : பொது வழக்கில் ‘ஸன்ஸ்கார்’ என்றால் நன்னடத்தை, நல்ல சிந்தனை மற்றும் நற்செயல் என்று பொருள். ஆன்மீக கண்ணோட்டத்தில் ‘ஸன்ஸ்கார்’ என்ற வார்த்தையின் அர்த்தம், உடல், பஞ்ச ஞானேந்திரியங்கள் பஞ்சகர்மேந்த்ரியங்கள், மனம், புத்தி மற்றும் அஹம் ஆகியவற்றின் தன்மைகள் மற்றும் செயல்களைப் பற்றி ஆழ்மனதில் ஏற்படும் எண்ணப்பதிவுகள் ஆகும்.

நிர்மாணம் : நல்ல விஷயங்களைப் பற்றியும் ஸன்ஸ்காரம் ஏற்படுகிறது. அதேபோல் கெட்ட விஷயங்களைப் பற்றியும் ஸன்ஸ்காரம் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு தெய்வத்தின் நாமஜபத்தை செய்வதற்கான ஸன்ஸ்காரம் ஏற்படுகிறது. அதேபோல் கண்டபடி ஏசும் ஸன்ஸ்காரமும் ஏற்படுகிறது. பல எண்ண ஓட்டங்களும் செயல்பாடுகளும் வெளி மனதின் மீது ஸன்ஸ்காரத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் சில நிமிடங்களில் அல்லது வினாடிகளில் மறைந்தும் போகின்றன. உதாரணத்திற்கு தெருவில் போகும் நபர்கள், தினப்பத்திரிக்கையில் படித்த உபயோகமற்ற செய்தி போன்றவை, சித்தத்தின் மீது அழுத்தமான ஸன்ஸ்காரத்தை ஏற்படுத்தும் சில வெளிப்பொருள்கள், நபர்கள், சந்தர்ப்பங்கள், சம்பவங்கள் ஆகியவை பல காலம் ஞாபகத்தில் இருக்கின்றன. சில சமயங்களில் ஆயுள் முழுவதும் மற்றும் சில சமயங்களில் பல பிறவிகளில் அவை ஞாபகத்தில் உள்ளன. உடல், ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள், மனம், புத்தி  மற்றும் அஹம் ஆகியவற்றிற்கு சாதகமாக அல்லது பாதகமாக உள்ள பொருட்கள், நபர்கள், சந்தர்ப்பங்கள் அல்லது சம்பவங்கள் ஆகியவை ஸன்ஸ்காரங்களாக மாறுகின்றன. அதேபோல் உடல், ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள், மனம், புத்தி  மற்றும் அஹம் ஆகியவற்றால் நடக்கும் செயல்கள் மற்றும் அவற்றின் தன்மைகளும் ஸன்ஸ்காரங்களாக உரு மாறுகின்றன. இந்தச் சுழற்சி நடந்து கொண்டே இருக்கிறது. இந்த ஸன்ஸ்காரங்கள் சித்தத்தில், அதாவது ஆழ்மனதில் மேல் பகுதியிலும் (ப்ரீகான்ஷியஸ் மைண்ட்) கீழ் பகுதியிலும் (அன்கான்ஷியஸ் மைண்ட்) சேமித்து வைக்கப்படுகின்றன. முன்பு ஏற்பட்ட சந்தோஷம், துக்கம், கோவம், வெறுப்பு மற்றும் வேறு பல உணர்வுகளின் நினைவுகளே, ஆழ்மனதில் சேர்த்து வைக்கப்பட்ட இந்த ஸன்ஸ்காரங்கள் ஆகும்.

2 அ. ஸன்ஸ்காரங்களின் ஸ்தானம் மற்றும் ஆளுமை வளர்ச்சி

ஆரம்ப நிலையில் சித்தத்தின் மேல் பகுதியில் எந்த ஸன்ஸ்காரம் உள்ளதோ அது சஹஜமாக எண்ண ரூபமாக வெளிமனதில் வெளிப்படுகிறது. ஏதாவது ஒரு எண்ணம் அல்லது செயல் திரும்பத் திரும்ப ஏற்பட்டால் அது உறுதியான ஸன்ஸ்காரமாக மாறி சித்தத்தில் நிலைபெறுகிறது. உடல், இந்திரியங்கள், மனம், புத்தி மற்றும் அஹம் ஆகியவற்றின் ஏதாவது ஒரு தன்மை அல்லது செயல்பாடு பல மாதங்களாக அல்லது பல வருடங்களாக வெளிப்படவில்லை. ஏதோ காரணங்களுக்காக மறையவும் இல்லை என்றால் அது ஆழ்மனதின் கீழ் பகுதியில் மறைந்து காணப்படுகிறது.. மற்றும் அந்த தன்மையைப் பற்றிய செயலைப் பற்றிய ஞாபகம் நமக்கு இருப்பதில்லை. ஆனால் வெளிப்படாத ரூபத்தில் ஆழ்மனத்தில் பதிந்திருக்கிறது. இந்தப் பிறவி மட்டுமல்ல, முந்தைய பிறவிகளின் ஸன்ஸ்காரங்கள் ஆழ்மனதில் மறைந்து காணப்படுகின்றன. மனிதர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வரிசை எண் நிகழ்வுகள் விகிதாசாரம் ( % )
1 பிறப்பிலிருந்து ஏற்பட்ட ஸன்ஸ்காரங்கள் 2
2 கடந்த ஏழு பிறவிகளின் ஸன்ஸ்காரங்கள்
(ஒவ்வொரு பிறவியிலும் 7% x 7 பிறவிகள்)
49
3 கடந்த ஏழு பிறவிகளை விடுத்து அதற்கு முந்தைய ஆயிரக்கணக்கான பிறவிகளின் ஸன்ஸ்காரங்கள் 49
மொத்தம் 100

சித்தத்தில் ஸன்ஸ்காரங்கள் ஏற்பட காரணமாக உள்ள மனப்பான்மை அல்லது செயல்களின் மூன்று முக்கிய வகைகள் மற்றும் அவற்றின் பரிணாமம்

1. நல்ல மனப்பான்மை மற்றும் செயல் : மற்றவரிடம் கருணை மற்றும் அன்பு பாராட்டுதல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற நல்ல மனப்பான்மை மற்றும் செயல்களால் தனிமனித மற்றும் சமூக வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக உள்ளது. இந்த செயல்களை எதிர்பார்ப்புடன் செய்யும்போது புண்ணிய பலன் கிட்டுகிறது. எதிர்பார்ப்பில்லாமல் செய்யும்போது ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகிறது.

2. தீய மனப்பான்மை மற்றும் செயல் : வெறுப்பு, பேராசை, திருட்டு, லஞ்சம் தருவது, பெறுவது  போன்ற தீய மனப்பான்மை மற்றும் செயல்களால் ஒருவன் குற்றவாளி ஆகிறான் மற்றும் அவனுக்கு சட்டப்படி தண்டனை கிடைத்து சிறைவாசம் அனுபவிக்க வேண்டி உள்ளது. அதன் மூலம் பாவகர்மா ஏற்பட்டு ஆன்மீக கண்ணோட்டத்தில் அவனுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது.

3. நல்ல மற்றும் தீய செயல்கள் அல்லாத மற்ற செயல்கள் : உட்காரும்போது கால்களை ஆட்டுவது, கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது, டீ அருந்துவது போன்ற செயல்களால் புண்ணிய பலனோ பாவம் பலனோ ஏற்படுவதில்லை. இருந்தாலும் அவை பழக்கமாகும் போது ஆழ்மனதில் ஸன்ஸ்காரங்களாக பதிகின்றன..  இது போன்ற ஸன்ஸ்காரங்களால் ஒருவருக்கு துக்கம் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு நேரத்திற்கு டீ அருந்த முடியாத போது அல்லது கிரிக்கெட் போட்டியை பார்க்க முடியாத போது ஒருவருக்கு துக்கம் ஏற்படுகிறது.

.     மேற்கூறப்பட்ட மூன்று வகை மனப்பான்மைகளும் செயல்களும் ஸன்ஸ்காரங்களாக மாறுகின்றன. மற்றும் ஒவ்வொரு ஸன்ஸ்காரமும் ஒருவரை பிறப்பு – இறப்பு சக்கர சுழற்சியில் பந்தப்படுத்துகின்றன

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘ஆளுமை குறைகளைக் களைவதன் மஹத்துவம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment