தலை சிறந்த ராம பக்தன் பரதனின் ஆன்மீக குணச் சிறப்புகள்

Contents

கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் கொரொனா பெருந்தொற்று காலத்தில் பாரத தேசத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நின்ற நிலையில் தூரதர்ஷன் தொலைக்காட்சியில் வாரத்தொடர்களான இராமாயணம் மற்றும் மஹாபாரதம் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. இந்த கடினமான, ஆபத்துக்கள் நிறைந்த காலத்திலும் பகவான் ஸ்ரீ ராமர் ,ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அவர்களுடைய பக்தர்களின் வாழ்க்கைச் சரிதங்களை  கேட்டும் அவர்களின் லீலைகளை பார்த்தும் மக்களில் பலருக்கும் மன அமைதி  கிடைத்தது. மேலும் கொரொனா கொள்ளைத்தொற்றை எதிர்கொள்வதற்கும்  ஆன்மீக பலம் கிடைத்தது. நமது ஹிந்து தர்ம நூல்கள்  ஆன்மீகம் சார்ந்தே இருப்பதால் அவைகளுக்கு என்றும் அழிவில்லை. ஆகையால் இந்த நூல்களை மீண்டும், மீண்டும் பாராயணம் செய்வதால் உளமகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைப்பதை இன்றும் உணரமுடிகிறது. ப்ரபு ஸ்ரீ ராமர், பகவான்  விஷ்ணுவின் எழாவது அவதாரம் ஆவார். கௌசல்யாவின் புத்திரர் ஸ்ரீ ராமர், கைகேயியின் புத்திரர் பரதன்,சுமித்ரையின் புத்திரர்கள் லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னன் ஆகிய இந்த நால்வரும் தசரத மன்னரின் நற்புத்தரர்கள். பரதன், ப்ரபு ஸ்ரீ ராமரின் இளைய சகோதரர் ஆவார். ப்ரபு ஸ்ரீ ராமருக்கு அனேக பக்தர்கள் இருந்தனர். இந்த கட்டுரையில் நாம் ராம பக்த பரதனின் ஆன்மீக குணச்சிறப்புகளைக் காணலாம், மேலும் பரதனுக்கு இணையான , ஈடில்லாத ராம பக்தி நமது உள்ளத்திலும் அமைய பகவானின் திருவடிகளில் வீழ்ந்து ப்ரார்த்தனை செய்வோம்.

1. உச்சகட்ட வைராக்யம்

கைகேயி,  தசரத மன்னரிடம் இரண்டு வரங்கள் கேட்டிருந்தார். முதலாவது  ஸ்ரீ ராமனுக்கு பதில் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்யவேண்டும். இரண்டாவது ப்ரபு ஸ்ரீ ராமனை பதினான்கு வருடங்கள் வனவாசம் அனுப்பவேண்டும்.  இன்றைய நாட்களில் அரசியல் தலைவர்கள்  பதவிக்காக  எந்த அளவிற்கு  கீழே விழ  தயாராக உள்ளார்கள். ஆனால்  இங்கோ  பரதனுக்கு  கேட்காமலேயே  அரசபதவி  கிடைத்தது.  அவர்  அயோத்தியின்  வலிமையான  பேரரசர்  ஆகியிருக்க முடியும்.  ஆனால்  அவர்  அரசபதவியை ஏற்கவில்லை. அரசபதவியை நிர்வகிப்பதற்கு  அவரிடம்  அனைத்து திறமைகளும்  இருந்தபோதிலும்  அவர் அதில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இது ஒரு உச்சக்கட்ட  வைராக்கியத்தின் அடையாளமாகும்.  இத்தகைய  வைராக்கியம்  தெய்வங்களிடத்திலும்  காணப்படாதது.  உதாரணமாக  இந்திரன், தன் மனதில்  இந்திர பதவியின்  மீது எவ்வளவு  ஆசையும், பற்றும்  கொண்டிருந்தான்  என்பது  நாம்  அனைவரும்  அறிந்ததே.  இதனாலேயே  அரசபதவியை  விரும்பாத  பரதனின்  மனவலிமை  எத்தகையது  என்பதை  நாம்  உணர முடியும்.

2. தன்னையே ப்ரபு ஸ்ரீ ராமரின் தாசன் என்று  உரைத்தது

பரதன்  ரகு வம்சத்தின் அரச புத்திரனாகவும்,மற்றும் ப்ரபு ஸ்ரீ ராமரின் இளையோனாகவும் இருந்தபோதிலும், அவர் எப்பொழுதும் தன்னை ப்ரபு ஸ்ரீ ராமரின் சாதாரணத் தொண்டன் என்றே கூறிக்கொள்வார். ஏனெனில்  அவர் ப்ரபு ஸ்ரீ ராமரை தனது  மூத்த  சகோதரனாக கருதுவதற்கு பதில் அவரை பகவானாகவே கருதினார். ஸ்ரீ ராமர் எனது எஜமானர், மற்றும் தான் அவருடைய  பாத சேவை செய்யும் சாதாரணத் தொண்டன் என்ற எண்ணம் பரதனின் மனதில் இருந்தது. இதன் மூலம் பரதனின் மிக உன்னத  தொண்டுள்ளத்திற்கான சாட்சியம் நமக்கு கிடைக்கிறது. இந்த சேவை பக்தியின்  காரணமாகவே  அவர் சித்திரகூடத்திற்குச் சென்று ப்ரபு ஸ்ரீ ராமரிடம் மீண்டும் அயோத்தி திரும்பி அரசாட்சியை எற்றுக் கொள்ளுமாறு  வேண்டுகோள் விடுத்தார். அதற்கு ஸ்ரீ ராமர்,  தான் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை முடித்துவிட்டு  அயோத்தி திரும்பி வரும் போது  அரசபதவியை ஏற்றுக்கொள்கிறேன்  என்றார்.  அப்பொழுது பரதன்  இவ்வாறு கூறினார் , “ப்ரபு ஸ்ரீ ராமர் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில்  ராமருடைய பாதுகைகளை  சிம்மாசனத்தில் வைத்து அதற்கு  தொண்டனாக இருந்து  ராஜ்ஜியத்தை  வழி நடத்துவேன்”.  பரதனின் சேவை, பக்தி  மற்றும் அவரின் அன்பு நிறைந்த பிடிவாதத்தின்  முன் ப்ரபு ஸ்ரீ ராமர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். தனது பாதுகைகளை  பரதனுக்குக்  கொடுத்தார். பிறகு பரதன் ஸ்ரீ ராமரின் பாதுகைகளை, மிகுந்த நன்றி பாவத்தோடு ,எடுத்து தன் தலையில்  வைத்துக் கொண்டு  சித்திரக்கூடத்தில் இருந்து  அயோத்தி திரும்பினார்.  அந்த பாதுகைகளை  அரச சிம்மாசனத்தில்  விதிமுறைப்படி ஸ்தாபித்தார். பரதனின் இந்த முடிவின் மூலம்  அவருடைய உள்ளத்தில் ராமரின் மீதிருந்த அளவு கடந்த, அன்பு நிறைந்த  மரியாதை மற்றும் பக்தி  வெளிப்படுகிறது. நாம்  தாஸ்ய பக்தி  என்ற விஷயத்தைப் பற்றி  கேள்விப் படுகிறோம்.  ஆனால் பரதனோ தனது பணி, சிந்தனை மற்றும் உள்ளுணர்வு  மூலம்   அனைவரின் முன்னிலையிலும்  ஒர் உதாரணமாகத்  திகழ்ந்தார்.

குமாரி மதுரா போஸ்லே

3. ஹிந்து தர்ம சாஸ்திரத்தை தீவிரமாகப் பின்பற்றுதல்

சித்திரகூடத்தை அடைந்தவுடன்  ப்ரபு ஸ்ரீ ராமர்  லக்ஷ்மணர் மற்றும் அன்னை சீதாவுக்கு  தசரத மன்னரின் மறைவுச்  செய்தி  தெரிய வந்தது.  .அவர்கள்  மிகுந்த சோகம் அடைந்தார்கள். குலகுரு  வசிஷ்டரின்  அறிவுரைப்படி  ஸ்ரீராமர்,லக்ஷ்மணன், பரதன் மற்றும் சத்ருக்னன்  ஒன்று சேர்ந்து  மந்தாகினி  நதியில்  தசரத மன்னரின்  ஆத்மா சாந்தி அடையும் பொருட்டு தர்ப்பணம்  செய்தார்கள்.  பிறகு பரதன்  ப்ரபு ஸ்ரீ ராமரின் சார்பாக  அயோத்தியின்  அரசாட்சியை ஏற்றுக் கொண்டபின்  கடுமையான ப்ரஹ்ம்மசர்ய விரதம்  ஏற்று தவக்கோலம்  பூண்டு  அரண்மனை  வாழ்க்கை  மற்றும்  ராஜ  சுகங்களையும்   துறந்து  நந்திகிராமம்  என்ற இடத்தில்  ஒரு குடில் அமைத்து  தவ வாழ்க்கை  மேற்கொண்டார்.  அவர் பதினான்கு  வருட தவ வாழ்க்கையை  ஏற்றுக்கொண்டு ,  ஒரு தலைசிறந்த  மன்னருக்கான  அனைத்து  கடமைகளையும் நிறைவேற்றினார்.  மிகவும்  தெளிவாகச் சொல்வதென்றால்  அவர்  தர்மம், அர்த்தம், காமம்  மற்றும் மோட்சம் என்ற நான்கு  புருஷார்த்தங்களையும்  உறுதியாகப்  பின்பற்றினார்.  அதனாலேயே பரதனும்  ஜனக மன்னரைப்போலவே  ஒரு ராஜரிஷியாக  இருந்தார்.

4. ப்ரபு ஸ்ரீ ராமரின் கட்டளையை அப்படியே பின்பற்றி அரசாட்சி செய்தார்

எப்பொழுது  ப்ரபு ஸ்ரீ ராமர்  பரதனிடம்  பதினான்கு  வருடங்கள்  ராஜ்யத்தை  ஆள்வாயாக  என்று  கூறினாரோ,  அப்பொழுது  பரதன் ஸ்ரீ ராமரிடம் “ என் வயது, அறிவு மற்றும்  அனுபவம்  ஆகியவற்றில்  தங்களைவிட  நான்  மிகச்  சிறியவன்.  நான்  எவ்வாறு   இப்பெரும் பொறுப்பை நிறைவேற்றுவேன்?”  என்றார். அதற்கு  ஸ்ரீ ராமர்   “நீ   ராஜகுருவாகவும்,  குலகுருவாகவும்  விளங்கும்  வசிஷ்டர்,  சுமந்திரர்  போன்ற  அமைச்சர்கள்   மற்றும் தந்தைக்கு நிகரான  ஜனகமன்னர் ,  இவர்களின்  வழிகாட்டுதலின்படி  ராஜ்ஜியத்தை  ஆள்வாயாக “ என்று  கூறினார்.  அதன்படியே  பரதனும்   அவர்களின்  ஆலோசனைப்படி  தர்ம சாஸ்திரத்தைப்   பின்பற்றி  கடுமையான  ஒழுக்க   நெறிமுறைகள்  மூலம்  சிறப்பாக   ஆட்சி  புரிந்தார்.  பரதன் தனது இதய சிம்மாசனத்தில்  ஸ்ரீ ராமரின்  பாதுகைகளை  நிறுவியதால்  அவரது  உடலும், இருப்பும்  ராமமயம்  ஆனது.  இவ்வாறு  அனைத்துமே  ராமமயமான  பரதனின்  அரசாட்சி ,  உண்மையில்  ராமரின்  ஆட்சியாகவே  இருந்தது.  பரதனுடைய  ராஜ்ஜியத்தில்  எவருமே  வறுமையிலோ   துக்கத்திலோ  வாடவில்லை.  பரதன் ஒரு தந்தையைப்  போன்று  அன்புடன்  மக்களைப்  பாதுகாத்தார்.

5. வசிஷ்டரால் புகழப்பட்ட பரதன்

‘’பரதன் அரச பதவியினால் ஏற்படும் , பெருமைகளையும், பேரின்பங்களையும் , தியாகம் செய்து வாழ்ந்தது, ஒர் அரிய செயல். இதனாலேயே பரதன், ஒரு சாமானியனாக அறியப்படாமல், மகாத்மா என்று போற்றப்படுவான்.  ஆகையால், ப்ரபு ஸ்ரீ ராமருக்கு முன்பாகவே, பரதனின் பெயர் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும். பரதனின் உள்ளம், கபடமில்லாமலும், சுய நலமில்லாமலும் , மிகவும் தூய்மையானதாகவும் உள்ளது. ராம பக்திக்கு ஒர் உதாரணமாக பரதனைப் பற்றி  குறிப்பு எழுதப்படும். மற்றும் , பரதனுக்கு செய்யும் வணக்கம் , ப்ரபு ஸ்ரீ ராமரை சென்றடையும்’’ என்று  உரைத்து வசிஷ்ட மகரிஷி, பரதனை கௌரவித்தார்.

6. எப்பொழுது பரதன் ராமரின் பாதுகைகளை எடுத்து தன் சிரத்தில் வைத்துகொண்டானோ, அப்பொழுதே, அகில உலகங்களிலும் உள்ள ரிஷி- முனிவர்கள், மற்றும் தெய்வங்கள் பரதன் மீது மலர் மழை பொழிந்து ஆசீர்வதித்தனர்

பரதன் ஸ்ரீ ராமரிடமிருந்து   உடலால் வெகு  தூரம்  பிரிந்து இருந்தாலும்  தனது உள்ளத்தால் ப்ரபுவின் அருகிலேயே இருந்தார்.   எப்பொழுதும்  ஸ்ரீ ராமரை நினைத்துக் கொண்டு  ராஜ்ஜியத்தை ஆண்டார். பரதனின் மனதில்  ஸ்ரீ ராமரின் பாதுகைகளும்,  நாவில்  ‘ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்ற புனித ஜபமும்  இடைவிடாது  நடந்து கொண்டிருந்தது.  அவர்  தனது உள்ளத்தில்  நிறுவிய  ப்ரபு ஸ்ரீ ராமரின் பாதுகைகளை  ஆத்மார்த்தமாக  பக்தியுடன்  பூஜை செய்தார்.  இதனாலேயே  மிகவும் சூட்சமமான முறையில் ஸ்ரீ ராமரின் ஸாந்நித்யம்  பரதனுக்கு அருகில் செயல்பாட்டில் இருந்தது.  இப்படி  முழு ராமமயமாகிய  பக்தர்களின் தலைவரும்  மற்றும்  ராஜரிஷியாகவும்  திகழும்  பரதனின் பாதங்களுக்கு  நமது கோடானுகோடி  வணக்கங்கள் .  ராம பக்த பரதனின்  இந்த  உன்னத  பக்திக்கு  முன்னால்  அனைத்து உலகங்களின்  ஐஸ்வர்யங்களும்  மற்றும்  அனைத்து  புண்ணிய ஆத்மாக்களின் புண்ணியங்களும்  ஈடாகாது.  இதனாலேயே  பரதன் சித்திரகூடத்தில்  ஸ்ரீ ராமரின்  பாதுகைகளைத்  தன் சிரத்தில்  தரித்தபோது  அனைத்து ப்ரம்மாண்டங்களில்  உள்ள  பல்வேறு  உலகங்களில்    வாசம்  செய்யும்  புண்ணிய ஆத்மாக்கள், தெய்வீக  ஆத்மாக்கள், ரிஷிகள்,  சித்தர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும்  தேவர்களும்  மிக்க மகிழ்ச்சியுடன்  பரதனை  ஆசீர்வாதம்  செய்து  மலர்மழை  பொழிந்து  அவனுக்கு  மரியாதை  செலுத்தினார்கள்.

7. ப்ரபு ஸ்ரீ ராமருக்கு  கொடுத்த  வாக்குறுதியை   அப்படியே  பின்பற்றியது

ப்ரபு ஸ்ரீ ராமரின்  உத்தரவின்படி  ராஜ்ஜியத்தை  ஆள  பரதன் சம்மதித்தார்.  அவர் ராமரிடம் இவ்வாறு  கூறினார்,  “ ஒரு  நிபந்தனையுடன்  அரச பதவியை ஏற்கிறேன்.  நீங்கள்  பதினான்கு  வருடங்கள்  வனவாசம்  முடிந்தவுடன்  அயோத்தி  திரும்பினால்  நன்று.  ஒரு வேளை  அப்படி திரும்புவதில்  தாமதம் ஏற்பட்டால்  நான்  அக்னி ப்ரவேசம்  செய்வேன்”.  இந்த  சபதத்தைக்  கேட்ட அனைவரும்   ஆச்சர்யமும், அதே  சமயம்  கவலையும்  அடைந்தனர்.  ப்ரபு ஸ்ரீ ராமர்  பரதனிடம்  பதினான்கு  வருடங்கள் முடிந்தவுடன்  உடனடியாக  அயோத்தி திரும்புவதாக  உறுதி  அளித்தார்.  இராவண  வதத்திற்குப்  பிறகு  பதினான்கு   வருடங்கள்  முடிந்தவுடனேயே  ப்ரபு ஸ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணர், அனுமன்  மற்றும்  வானர வீரர்களுடன் புஷ்பக விமானத்தில் அமர்ந்து  இலங்கையிலிருந்து  பாரதத்தை  நோக்கி  புறப்பட்டார்கள்.  அயோத்தி  திரும்புவதில்  எந்த ஒரு தாமதமும்  ஏற்படலாகாது  மற்றும்  பரதன்  அக்னி ப்ரவேசம் செய்யலாகாது என்பதால்  ப்ரபு ஸ்ரீ ராமர்  தான் வரும் செய்தியை  தெரிவிக்க  அனுமனை  அயோத்திக்கு தங்களுக்கு முன்பே  செல்லுமாறு  பணித்தார்.  குறித்த சமயம்  முடிந்தது.  ஸ்ரீ ராமரின்  அயோத்தி  திரும்புவது பற்றி  ஒரு செய்தியும்  இல்லை.  பரதன்  அக்னி ப்ரவேசம்   செய்வதற்கு  தயாரான  நிலையில்  ராமரின் வருகைச் செய்தியை எடுத்துக் கொண்டு  அனுமன்  அங்கு  சென்றடைந்தார்.  இதனால்  பரதனுக்கு  அளவிலா  ஆனந்தம்  உண்டானது.  பரதன்  அக்னி ப்ரவேசம் செய்யும் முடிவைக்  கைவிட்டான்.  மேலும் ஸ்ரீ ராமரை  வரவேற்பதற்காக  அயோத்தி நகரை  அலங்கரித்தார்.  தன்னுடைய  அனைத்தையும்  ப்ரபு ஸ்ரீ ராமரின் பாதங்களில்  அர்ப்பணம்  செய்யும்  அளவிற்கு  பரதனுக்கு  ராமரின் மேல்  தீவிர பக்தி இருந்தது.  அதைக்காட்டிலும்  ப்ரபு ஸ்ரீ ராமரின் பிரிவு  தாங்காது  உயிரையும் விடவிருந்தார்.   இதனால் உயிரைக் காட்டிலும், கொடுத்த வாக்கே முக்கியம் என்ற ரகு வம்ச சம்பிரதாயம் வழி வழி வந்து கொண்டு இருக்கிறது.  சிறிது நேரமும் வீணாக்காது, தன்னிடம் உள்ள அனைத்தையும் பகவான் ஸ்ரீ ராமரின் திருவடிகளில், புன்னகையுடன் சமர்ப்பிக்கும் பரதனின் குண நலன்களை  எத்துணை புகழ்ந்தாலும் அது குறைவே. ப்ரபு ஸ்ரீ ராமர், சீதையுடன் புஷ்பக விமானத்தில் அயோத்தி வந்தவுடன், ராமர், மற்றும் பரதனிடையே சந்திப்பு நிகழ்ந்தது. பதினான்கு ஆண்டுகள் பிரிவிற்கு பிறகு நிகழும் இந்த அரிய சந்திப்பை காண்பதர்க்கு, அயோத்தி நகர மக்கள் மட்டுமல்ல, இந்த படைப்பிலுள்ள அனைத்து உயிர்களுமே மிக ஆர்வமாக இருந்தன.

8. பரதன் மனதளவில் இல்லாமல் ஆன்மீக நிலையில்  அதி உன்னத இடத்தில் இருந்துகொண்டு ஒர் உதாரண புருஷராக வாழ்ந்தார்

அன்னை கைகேயி ப்ரபு ஸ்ரீ  ராமருக்கு  பட்டாபிஷேகம் நடத்த விடவில்லை. அன்றியும், அவரைக் காட்டிற்கு அனுப்பினாள். இதனால் பரதன் மிகவும் துயர் அடைந்தான். ஏனெனில், பரதன்  மற்றும் ராமரிடையே சகோதர பிணைப்பு இல்லாமல், பகவான், பக்தன் என்ற பிரிக்க முடியாத உறவே இருந்தது.  அவர்  அன்னை  கைகேயியின்   மீது  மிகுந்த கோபம்   கொண்டார்.  மற்றும்  அவளுடைய  முகத்தையும்   காண மாட்டேன் என்ற உறுதியை  எடுத்தார்.  ப்ரபு ஸ்ரீ ராமர்  பதினான்கு   வருட  வனவாசத்தை   நிறைவு செய்து  அயோத்தி  திரும்பியவுடன்  பரதனை  சமாதானப்படுத்தி   அன்னை  கைகேயியை  மன்னிக்குமாறு  செய்தார்.  அதன் பிறகு பரதன் தன் அன்னையுடன்  பேச  ஆரம்பித்தார்.  பரதனும்,  ஸ்ரீ ராமரும் ஒரு  விதத்தில்  மாற்றான்  தாய்  சகோதரர்களாய்  இருந்தாலும் ,  பரதன்  உன்னத  ஆன்மீக  நிலையில்  இருந்ததால்  அவர்  ப்ரபு ஸ்ரீ ராமரை  கடவுளாகவே  கண்டார்.  மேலும்  உயிரினும்  அதிகமாக  நேசித்தார்.  பரதன்  எப்போழுதுமே  நடைமுறை  வாழ்க்கை  சிந்தனையற்று,  ஆன்மீக சிந்தனையில்  இருந்துகொண்டு  மிக  உன்னத நிலையில்  வாழ்ந்தார்  என்று  இதனால்  தெரிய  வருகிறது.

9. பரதனின் சீரிய  அரசாட்சி  – ஓர்  ராம  ராஜ்ஜியமே

பரதனுக்கு  அரசியல்  மற்றும்  நீதி  சாஸ்திரத்தில்  நல்ல ஞானம்  இருந்தது.  அவர்  ப்ரபு ஸ்ரீ ராமரை  பிரிந்து  இருந்தாலும்  மொத்த  ராஜ்ஜிய  பாரத்தையும்  மிகச்  சிறந்த  முறையில்  கையாண்டார். பரதனின்  இந்த  தூய  நடத்தையைக்  கண்ட  மக்கள்  அவரை  ப்ரபு ஸ்ரீ ராமரின்  மறு  உருவமாகக்  எண்ணி  ச்ரத்தையுடனும், பக்தியுடனும்   அற வாழ்க்கை  நடத்தினார்கள்.  பரதனின்  சீரிய  ஆட்சியால் ,  எதிரிகள்  எப்பொழுதுமே  அயோத்தியைக்  கைப்பற்ற  முயலவில்லை.  இதனால்  அயோத்தி  நகர மக்களும்  அறவழி  நின்று  உயர்ந்த  வாழ்க்கையை  நட்த்தினார்கள்.  இதன்  காரணமாக  எந்த  ஒர்  உயிருக்கும்  துக்கம்/ கஷ்டம்  என்பதே  ஏற்படவில்லை.  அயோத்தியிலும்  கூட  எந்தவிதமான  இயற்கை  மற்றும்  மனிதனால்  ஏற்படும்  துன்பங்கள்  நிகழவில்லை.  இப்படியாக  பரதன்  சிறந்த  முறையில்  ஆட்சி  செய்து  ராம  ராஜ்ஜியத்தை  ஏற்படுத்தினார்.

10. பரதனுக்கு  ராஜ்ஜியத்தின்   மீதான  பற்றின்மை

ப்ரபு ஸ்ரீ ராமர் பதினான்கு  ஆண்டுகளுக்குப்  பிறகு  அயோத்தி  திரும்பியவுடன்  பரதன்  ராஜ்ஜியத்தை  அவரிடம்  ஒப்படைத்தார். பரதன்  பதினான்கு  வருடங்கள்  அரசாட்சி  செய்தாலும்  அவருக்கு  அதில்  சிறிதளவும்  பற்றில்லை. ப்ரபு ஸ்ரீ ராமரின்  கட்டளைக்கிணங்க  தன்னலமற்று,  தனிமையில்  இருந்து கொண்டு  ஆட்சி  புரிந்து  தன்  கடமையை  நிறைவேற்றினார்.  பரதன்  ஆசையற்றவராக  இருந்ததால்   ராஜ்ஜியத்தை   அவர் ஆண்டாலும்  வைபவங்கள் மற்றும்  அதிகாரங்களில்  ஈடுபாடு  அற்றவராக  இருந்தார்.

11. கர்மயோகம், பக்தியோகம்,  ஞானயோகம்  மற்றும்  தியானயோகம்  ஆகியவற்றில்  பரதனின்  ஸாதனை

ராம  பக்தனான  பரதன்  அனேக  தெய்வீக  குணங்களின்  உறைவிடமாக  இருந்தார்.  தனிப்பட்ட  மற்றும்  சமூக  ஆகிய  இந்த  இரண்டு  தளங்களிலும்  பரதன்  எல்லாக் கடமைகளையும்  முழுமையாகச்  செய்தார்.  பரதன்  ஒரு  சிறந்த  புத்திரனாகவும், உறவினராகவும், அரசனாகவும்  மற்றும் பக்தனாகவும்  விளங்கி  இந்த எல்லா  நிலைகளிலும்   தன்  கடமைகளை  முழுமையாகச் செய்து   அனைவரின்  முன்னிலையிலும்   கர்மயோகத்திற்கு  ஒர் உதாரண  புருஷராக  விளங்கினார்.  பரதனுக்கு  ப்ரபு ஸ்ரீ ராமரிடத்தில்  எந்தவித  எதிர்பார்ப்பும்  இல்லாத  மிகப்  பணிவான  பக்தி  இருந்தது.  அதனாலேயே  அவருடைய  உள்முகச் ஸாதனை  பக்தியோகத்தை  அனுசரித்தே  நடந்து  கொண்டிருந்தது.  இதைப்போலவே  பரதனுக்கு  ஹிந்து  தர்ம சாஸ்திரத்திலும்   மற்றும்  ஆன்மீக  விஷயங்களிலும்  முழுமையான  ஞானம்  இருந்தது.  ஆகையால்  அவருடைய  நடத்தை   அறநெறிப்படி  இருந்தது.  ராஜ்ஜிய  வேலைகளின்  போது  ஓய்வு  கிடைக்கும்  நேரத்தில் எல்லாம்  அவர்  ப்ரபு  ஸ்ரீ  ராமரை  நினைத்து   தியானம்  செய்தார்.  இவ்வாறாக  பரதன்  கர்மயோகம் , பக்தியோகம் ,  ஞானயோகம்  மற்றும்  தியானயோகம்  என்ற  இந்த  நான்கு   யோக  நிலைகளின்  வழியாகவும்  ஸாதனை புரிந்து  சிறந்த  கர்மயோகி,  மிகச் சிறந்த  ஞானி,  தலைசிறந்த  பக்தர்  மற்றும்  மனதை  வெற்றி  கொண்டவர்  என்று  ஆன்மீகத்தில்  மிக  உயர்ந்த  நிலையை  அடைந்தார்.

12. பரதன் மற்றும் ப்ரபு ஸ்ரீ ராமன் இடையே இருந்த நெருங்கிய ஒற்றுமை

பரதன் ராமரிடம் இத்துணை ஒன்று பட்டகாரணத்தால், அவரும் ஸ்ரீ ராமரைப் போலவே நீல நிறத்தில் ஒளிர்ந்தார். அவரது கண்கள், தாமரை மலர்களைப் போல அழகாக இருந்தன. அதுமட்டுமல்லாமல் அவரது உடலில் இருந்து சந்தனத்தின் தெய்வீக நறுமணம் வீசியது. ராம பக்த பரதனின் அழகுத் தோற்றம் தெய்வீகமானதாகவும் , விசேஷமானதாகவும் இருந்தது.  ப்ரபு ஸ்ரீ ராமனுக்கும், பரதனுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் எந்த அளவு என்றால், மக்கள் பரதனை பார்க்கும்போதெல்லாம், ப்ரபு ஸ்ரீ ராமரைக் கண்டது போன்றே மகிழ்ச்சி அடைந்தார்கள்.  காரணம் என்னவென்றால் பரதன் தோற்றத்தில் மட்டுமல்ல, குணத்திலும் ராமனைப் போலிருந்தான். இதன்படி, ப்ரபு ஸ்ரீ ராமர் மட்டுமல்ல, பரதனுக்கு சமமான அவருடைய அனைத்து பக்தர்களும் வணக்கத்துக்கு உரியவர்களே என்ற மேற்கண்ட சூத்திரம் நமது கவனதிற்கு வருகிறது.

13. நன்றி

பகவானின் அளப்பறிய கருணையால் , மாமனிதர் பரதனைப் பற்றிய மேலே உள்ள கட்டுரை மிகுந்த உற்சாகத்துடன் எழுதப்பட்டது. பகவானே என் மனதில் ஏற்பட்ட எண்ணங்களை சொல் வடிவமாக செய்தார். இதற்காக ப்ரபு ஸ்ரீ ராமனின் திருவடிகளில் எனது கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

–  குமாரி மதுரா போஸ்லே., ஸனாதன் ஆச்ரமம்,  ராம்நாதி, கோவா.

 

 

 

2 thoughts on “தலை சிறந்த ராம பக்தன் பரதனின் ஆன்மீக குணச் சிறப்புகள்”

  1. பரதனின் உயர்வைப் பற்றிய கம்பர் கூறியது:
    தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி போயினை என்ற போது புகழினோய் தன்மை கேட்டால் ஆயிரம் ராமர் நின் கீழ் ஆவரோ! தெரியினம்மா!

    Reply
    • அருமை அருமை ஐயா, பகவானுக்குத் தன் புகழை செவிமடுப்பதைக் காட்டிலும் பக்தனின் புகழை செவிமடுப்பதில் அலாதி ஆனந்தம்!

      Reply

Leave a Comment