ஸமாதி மற்றும் ஸஹஜஸமாதி

‘ஸமாதி’ என்ற உடனேயே ஞாபகத்திற்கு வருவது மகரிஷி பதஞ்சலியின் ‘யோகதரிசனம்’ என்ற நூல். பதஞ்சலி மகரிஷியின் அஷ்டாங்க யோகம் எட்டு அங்கங்களை உடையது – யம, நியம, ஆசன, பிராணாயாம, ப்ரத்யாஹார, தாரண, தியான, ஸமாதி. முதல் ஐந்து அங்கங்கள் மற்ற மூன்று அங்கங்களின் முன் தயாரிப்பு ஆகும். முதல் ஐந்து அங்கங்களைக் காட்டிலும் தாரண, தியான, ஸமாதி அதிக அந்தரங்க ஸாதனை ஆகும். தாரண, தியான, ஸமாதியிலும் பல வகைகள் உண்டு; இருந்தாலும் ஸவிகல்ப ஸம்ப்ரஞாத் ஸமாதி, நிர்விகல்ப ஸம்ப்ரஞாத் ஸமாதி, மற்றும் அஸம்ப்ரஞாத் நிர்பீஜ ஸமாதி ஆகியவை முக்கிய வகைகள் ஆகும். ‘யோகதரிசனம்’ நூலின் விஷயங்களைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். விஷயங்களை விடுங்கள், ஒவ்வொரு வார்த்தையையும் கவனம் செலுத்தி புரிந்து கொள்ள வேண்டும். அதற்குள் ஆழமாக செல்லாமல் யோகம் சம்பந்தமான சில விஷயங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்.

அ. ஸமாதி என்பதும் ஸுஷுப்தியைப் போல காரண தேஹத்துடன் சம்பந்தப்பட்டது.

ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டவுடன் காரண தேஹத்தைத் தாண்டி மஹாகாரண தேக நிலை ஏற்படுகிறது. ஆத்மஞானம் கிடைத்த பிறகு, சாக்ஷி உணர்வு ஏற்பட்ட பின் இந்நிலை சித்திக்கிறது. இந்நிலையில் ஸமாதி நிலைக்கு செல்ல வேண்டும் என்ற இச்சையும் இருப்பதில்லை, அவசியமும் இல்லை.

ஆ. பதஞ்சலி யோகத்தின் முக்கிய சூத்திரம்

‘யோகஷ்சித்தவிருத்திநிரோத: |’ ஸமாதிபாத சூத்திரம் – 2.

இதன் அர்த்தம் – சித்தத்தின் இயல்பை தடுத்து நிறுத்துவதே யோகமாகும். பிறகு இதன் பலனும் கூறப்பட்டுள்ளது –

‘ததா த்ரஷ்டு: ஸ்வரூபேவஸ்தானம்’ ஸமாதிபாத சூத்திரம் – 3. அதாவது எப்போது சித்தத்தின் இயல்பு நிற்கிறதோ அப்போது பார்ப்பவர் தன் சுய ரூபத்தில் நிலைத்திருக்கிறார்.

இ. பதஞ்சலி யோகதரிசனப்படி அஸம்ப்ரஞாத் நிர்பீஜ ஸமாதியில் சுய ரூபத்தில் லயித்து கைவல்யம் சித்திக்கிறது.

ஈ. பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் இவ்வழி பற்றி கூறியுள்ளார் –

யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோக-சேவயா |
யத்ர சைவாத்மனாத்மானம் பச்யன்-னாத்மனி துஷ்யதி || – அத்தியாயம் 6 ஸ்லோகம் 20

தம் வித்யாத்-து:க்க-ஸம்யோக: வியோகம் யோகஸம்ஜ்ஞிதம் |
ஸ நிச்சயேன யோக்தவ்யோ யோகோநிர்விண்ணசேதஸா || அத்தியாயம் 6 ஸ்லோகம் 23

அர்த்தம் :  யோக ஸாதனத்தால் தெளிவடையும் மனம் ஆத்ம ஸ்வரூபத்தை நன்கறியும்; ஆத்ம ஞானமே ஆத்ம திருப்தியை அளிக்கவல்லது. உண்மையில் மனிதன் ஆனந்த ரூபன். அறியாமையினால் துக்கத்தில் ஆழ்கிறான்; அந்த துக்கத்தை விலக்கிவிட்டால் உண்மை ஸ்வரூபத்தை உணர்வானே! துன்ப உணர்ச்சியினின்று பிரிதலே யோகம்.

இங்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணன் சித்தத்தை அடக்குவதை யோகம் எனக் கூறாமல் துக்க உணர்ச்சியினின்று விலகி இருப்பதே யோகம் என்கிறார். காரணம் எப்போது துக்கமய சம்சாரத்தில் மனமும் புத்தியும் மூழ்காமல் தனித்து இருக்கிறதோ அப்போது யோகம் கைகூடுகிறது.

உ. பக்தி மற்றும் பதஞ்சலி யோகம் 

பதஞ்சலி அஷ்டாங்க யோகத்தால் எது சாத்தியமோ அது இறைவனை பூரணமாக சரணடைவதாலும் கிடைக்கிறது என்று பதஞ்சலி யோகதரிசனத்தில் கூறப்பட்டுள்ளது – ‘ஈச்வரப்ரணிதாநாத்வா’ – ஸமாதிபாத சூத்ரம் 23.

அதாவது பக்தி மூலம் இறைவனை பூரண சரணாகதி செய்தால் அஸம்ப்ரஞாத் ஸமாதி சித்திக்கிறது மற்றும் அதனால் கைவல்யம் கிடைக்கிறது.

ஊ. ஞானம் மற்றும் பதஞ்சலி யோகம்

பதஞ்சலி யோகதரிசனம் கூறுகிறது – ‘யோகாங்கானுஷ்டாநாதசுத்திக்ஷயே ஞானதீப்திராவிவேகக்யாதே: | ஸாதனாபாத சூத்ரம் 28

அர்த்தம் : யோகத்தின் அங்கங்களை அனுஷ்டிக்கும்போது அவற்றை வழக்கத்தில் கொண்டு வரும்போது சித்தத்தின் மலங்கள் அழியும்போது ஞானஒளி படர்ந்து விவேக வைராக்கியங்கள் கைகூடுகின்றன. அதாவது இந்த்ரியங்கள், மனம், புத்தி மற்றும் அஹம்பாவம் ஆகியவற்றிலிருந்து பூரணமாக விலகி ஆத்ம ஸ்வரூபம் பளிச்சிடுகிறது.

2. பக்தி, ஞானம் மற்றும் பதஞ்சலி யோகம்

2 அ. பக்திமார்க்கத்தில் மனம் இறைவனை நாடுகிறது. நவவித பக்தியில் இறுதியான வகை பக்தி ஆத்ம நிவேதன பக்தி, அதாவது சம்பூர்ண சரணாகதி செய்வது. சித்தசுத்தி ஏற்பட்டுவிட்டால் இத்தகைய பக்தியால் ஸாயுஜ்ய முக்தி கிடைக்கிறது.

2 ஆ. ஞானமார்க்கத்தில் சித்தத்தை தூய்மையாக்கி ஆத்ம ஞானம் கிடைக்கப் பெற்று பற்றற்ற நிலையடைந்து சித்தத்தை பிரம்மத்தில் ஒன்ற வைக்க முடிகிறது. அதாவது மோக்ஷம் கிடைக்கிறது.

2 இ. பதஞ்சலி யோகத்தில் சித்தத்தின் இயல்பை அடக்குவதற்கு அதாவது மனதை காலியாக வைத்திருப்பதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பதஞ்சலி யோகப்படியான அஷ்டாங்க ஸாதனை மூலம் சித்தம் முழுவதுமாக தூய்மையாகி விட்டால், இயல்பு சூன்ய நிலைக்கு அதாவது எதுவும் இல்லாத வெற்றிட நிலையை எய்திவிட்டால் அத்தகைய சுத்தமான வெற்றிடமான சித்தத்தில் சுய ஸ்வரூப ஞானம் உதயமாகி, விவேக வைராக்கியங்கள் ஏற்பட்டு முக்குணங்கள் எதிலிருந்து உண்டானதோ அதிலேயே லயமாகி கைவல்யம் கிட்டுகிறது.

3. ஸஹஜஸமாதி

3 அ. ‘ஸமாதி’ வார்த்தையின் உற்பத்தி 

‘ஸமாதி’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தை ஸம் + ஆ + தா என்பதிலிருந்து உருவாகியுள்ளது. ‘ஸம்’ என்பதன் பொருள் ‘சரியான முறையில்’, ‘ஆ’ என்பதன் பொருள் ‘வரை’ மற்றும் ‘தா’ என்பதன் பொருள் ‘வைத்திருத்தல்’ ஆகும்.  ஸம்ஸ்க்ருத இலக்கணப்படி தா என்பது தி ஆக மாறும். ‘ஸமாதி’ வார்த்தையின் உற்பத்தி இவ்வாறு ஏற்பட்டுள்ளது – ‘ஸம்யக் ஆதீயதே மன: யஸ்மின் |’ அதாவது எந்நிலையில் மனம் சரியான முறையில் ஸ்திரமாக உள்ளதோ அதுவே ஸமாதி.

யோக சாஸ்திரப்படி ‘ஸமாதி’ என்ற வார்த்தை சித்தத்தின் ஒருமைப்பாடு மற்றும் சித்தத்தின் இயல்பை தடுத்து நிறுத்துதல் என இரு அர்த்தங்களில் கூறப்பட்டாலும் சாதாரண வழக்கில் ‘ஸமாதி’ என்ற வார்த்தை சித்தத்தின் ஒருமைப்பாடு என்ற முறையிலேயே அதிகமாக வழங்கப்படுகிறது. (குறிப்பு)

குறிப்பு – ஸமாதி வார்த்தையின் உற்பத்தி மற்றும் விளக்கங்களை திரு. மேகராஜ் பராட்கர் அவர்கள் வழங்கியுள்ளார்.

3 ஆ. பக்திமார்க்கப்படி ஸஹஜஸமாதி

இந்த முழு பிரபஞ்சம், உலகம், பிரம்மாண்டம் இறைவனிடமிருந்தே உருவானது என்பதை நாம் அறிவோம். அசைவது-அசையாதது, காணப்படுவது, காண முடியாதது, ஸ்தூலமானது – சூட்சுமமானது, உயிருள்ளது – உயிரில்லாதது  ஆகிய அனைத்தும் இறைவனே. அர்ஜுனன் கேட்கிறான் ‘நான் சிந்தனை செய்யும்படியாக நீ எந்தெந்த பொருட்களில் உள்ளாய்?’ (கீதை 10.17). இக்கேள்விக்கான பதிலை பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தருகிறான், ‘நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே |’ (கீதை 10.19)

அர்த்தம் – ‘என்னுடைய விஸ்தீரணத்திற்கு எல்லையே இல்லை.’ மேலும் அர்ஜுனனுக்கு ஒவ்வொரு படைப்பிலும் சிறந்ததைக் (யானைகளில் கஜேந்திரன்) கூறி பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பதிலளிக்கிறார் – ‘விஷ்டப்யாஹ-மிதம் க்ருத்ஸ்ன-மேகாம்சேன ஸ்திதோ ஜகத் ||’ கீதை 10.42

அர்த்தம் – எனது ஒரு கலையால் மட்டுமே அண்ட சராசரங்களைத் தாங்கி உள்ளேன்.

மீண்டும், கீதை 7.19-ல் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார், ‘வாஸுதேவ ஸர்வம்’ எல்லாமே வாஸுதேவன், இறைவனே.

இதன் தாத்பர்யம் எதெல்லாம் உள்ளதோ, பார்க்க முடிகிறதோ உணர முடிகிறதோ அவை எல்லாம் இறைவனின் ஸ்தூல-சூட்சும ரூபங்களே.

ஆதிசங்கரர் கூறுகிறார், ‘சித்தைகாக்ரயம் ஸமாதி:’, அதாவது சித்தத்தின் ஒருமைப்பாடே ஸமாதி ஆகும். (முன்பு கூறிய ஸமாதி வார்த்தையின் உற்பத்தி மற்றும் ஆதிசங்கரர் கூறியுள்ள அர்த்தமும் தத்துவப்படி ஒன்றேயாகும்.)

எங்கும் பகவானே நீக்கமற நிறைந்துள்ளான் எனும்போது மனிதன் என்ன, மலை என்ன, மரம் என்ன, எல்லாமே ஈச்வரமயமாகிறது. எங்கும் எதிலும் பகவானின் இருப்பை உணரும் நிலை ஏற்பட்டால் பார்வை எங்கு செல்கிறதோ மனது எங்கு நிலைக்கிறதோ அங்கு இறைவனை உணர முடிவதால் சித்தம் ஈச்வரனிடம் லயமாகிறது! தினசரி காரியங்கள் தானே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் சித்தம் மட்டும் பகவானிடத்தில் லயித்திருப்பதே ஸஹஜஸமாதி, ஸஹஜஸ்திதி, ஸஹஜாவஸ்தா (ஸஹஜ நிலை) ஆகும்.

இது சம்பந்தமாக பல்வேறு மகான்களின் வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.

3 ஆ 1. ஸந்த் ஏக்நாத் மகாராஜ் : பாகவத தர்மத்தைப் பற்றி கூறும்போது  ஸந்த் ஏக்நாத் மகாராஜ் ஸஹஜ நிலையை இவ்வாறு கூறுகிறார் – ‘ஜம்வ திருஷ்டி தேகே த்ருஷ்யாந்தே | தம்வ தேவசி திசே தேதே ||’ ஏக்னாதி பாகவதம் 2-364. அதாவது பார்வை எங்கு செல்கிறதோ அங்கு இறைவன் தரிசனம் தருகிறான்.

‘ந லகே ஆஸனபோஜன | ந லகே ஸமாதிஸாதன |
மாசியா பிராப்தீஸீ காரண | மாஜி பக்தி ஜாண உத்தவா ||’ – ஏக்னாதி பாகவதம் 11-1495

அதாவது பகவான் ஸ்ரீகிருஷ்ணன் உத்தவரிடம் கூறுகிறான், ‘என்னை அடைவதற்கு ஆசனமிட்டு ஸமாதி நிலைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. தூய்மையான சித்தத்துடன் அசஞ்சல பக்தி செய்தாலேயே என்னை அடையலாம்.

ஸந்த் ஏக்நாத் மகாராஜ் மீண்டும் கூறுகிறார் –

‘ஜயாஸீ மாஜே அபரோக்ஷ ஞான | தேணே காலோனியா ஆஸன |
அகண்ட தரிதா த்யான | அதிக உபேக ஜாண அசேனா ||’ – ஏக்னாதி பாகவதம் 28-327

அதாவது பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார், ‘யாருக்கு என்னுடைய ப்ரத்யக்ஷ ஞானம் கிடைத்துள்ளதோ அவர் ஆசனமிட்டு அகண்ட தியானத்தில் அமர்ந்தாலும் பெரிய பயன் ஒன்றுமில்லை (தேவையில்லை).’

3 ஆ 2. ஸந்த் ஞானேஸ்வர் மகாராஜ் : அவர் கூறுகிறார் – ஜேம் ஜேம் பேடே பூத | தேம் தேம் மாநிஜே பகவந்த | ஞாநேச்வரி அ. 10 ஓவி 118 (எங்கெல்லாம் உயிர்களைப் பார்க்கிறோமோ அங்கெல்லாம் பகவானின் தரிசனம் கிடைக்கிறது)

3 ஆ 3. ஸமர்த்த ராமதாஸ் சுவாமி 

சுவாமி கூறுகிறார் –

களே ஆகளே ரூப தே ஞான ஹோதா |
தோ கே தோசி தோ ராம ஸர்வத்ர பாஹேம் || மனாசே ஸ்லோக, 200

ஸமர்த்தர் கூறுகிறார், ஞானம் கிடைத்த பின் இறைவனின் ரூபம் தெரிய ஆரம்பிக்கிறது. எங்கு காணினும் ராமனே, இறைவனே காட்சி தருகிறார்.

இது வெறும் கற்பனை அன்று. உயர்நிலை மகான்கள் இதை நேரிடையாக அனுபவித்துள்ளனர்.

3 ஆ 4. ஸந்த் ஸாவதா மாளி 

ஸந்த் கூறுகிறார் –

‘காந்தா மூளா பாஜி | அவகி  விடாயி மாஜி ||
லசூன் மிர்ச்சி கொதிம்பிரி | அவகா ஜாலா மாஜா ஹரி ||
ஊன்ஸ் காஜர ரதாளூ | அவகா ஜாலாசே கோபாளூ ||’

இது போன்று குடும்ப கடமைகளை செய்து கொண்டே யாருடைய சித்தம் எப்போதும் பகவானிடம் லயிக்கிறதோ அவர் ஸஹஜஸமாதியில் உள்ளார். இந்நிலையை ‘ஸஹஜாவஸ்தா’ (ஸஹஜ நிலை) என்றும் கூறுகின்றனர்.

3 இ. ஞானமார்க்கத்தில் ஸஹஜஸமாதி

1. சாந்தோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது 

‘ஸர்வ கல்விதம் பிரம்ம’ அ. 3 கண்டம் 14 மந்திரம் 1

அர்த்தம் : இந்த முழு உலகமும் உண்மையில் பிரம்மமே.

இது போன்று யாருக்கு சதாசர்வ காலமும் எங்கும் எதிலும் பிரம்மத்தையே உணர முடிகிறதோ அவர் எதைப் பார்த்தாலும் எதை செய்தாலும் அங்கு அவருக்கு பிரம்மத்தையே உணர முடிவதால் அவரின் சித்தம் பிரம்மத்திலேயே ஒன்றியுள்ளது, அதாவது அவர் ஸமாதி நிலையில் உள்ளார். இத்தகைய ஸஹஜஸமாதியில் உள்ள ஒருவர் மற்றவர் போன்று உலக விவகாரங்களில் ஈடுபட்டாலும் கூட அவர் ஸமாதியிலேயே இருக்கிறார். அவருக்கு ஸமாதி நிலை ஏற்படுதல், மறைதல் ஆகிய எதுவும் இல்லை.

2. பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறான் –

‘பிரம்மார்ப்பணம் பிரம்ம ஹவிபிரம்மாக்நௌ பிரம்மணா ஹுதம் |
பிரம்மைவ தேன கந்தவ்யம் பிரம்மகர்மஸமாதினா ||’ கீதை 4.24

அர்த்தம் : யக்ஞத்தில் அர்ப்பணம் செய்ய பயன்படும் மர கரண்டி பிரம்மமாகும், அக்னியில் அர்ப்பணிக்கப்படும் பொருட்களும் பிரம்மமாகும், எந்த அக்னியில் ஹோமம் நடக்கிறதோ அந்த அக்னியும் பிரம்மமாகும், யார் யக்ஞம் செய்கிறாரோ அவரும் பிரம்மமே. இது போன்று எங்கும் பிரம்மத்தைக் காணும், பிரம்ம ரூப கர்மாவில் சித்தத்தை நிலைக்க வைக்கும் ஒருவருக்கு பிரம்ம நிலை ஏற்படுகிறது.

3.  ஸமர்த்த ராமதாஸ் சுவாமி இந்நிலையை எவ்வாறு விளக்குகிறார் –

சூன்யத்வாதீத சுத்தஞான | தேணேம் ஜாலேம் ஸமாதான |
ஐக்யரூபே அபின்ன | ஸஹஜஸ்திதி || தாஸபோதம் 6-10-39

அதாவது காலியான மனதிற்கு அப்பால் சுத்த ஆத்மஞானம் உள்ளது. அந்த ஞானத்தால் சமாதானம் கிடைக்கிறது. நம் ஆத்மாவும் பரபிரம்மமும்  ஒன்றேயாகும், வேறுபாடு இல்லாத இதை அனுபவிக்கும்போது ஸஹஜஸ்திதி கிடைக்கிறது. இந்நிலையில் எல்லா விவகாரங்களும் நடந்து கொண்டிருந்தாலும் பிரம்மத்துடன் ஏற்பட்ட ஐக்கியம் அப்படியே நிலைத்திருக்கிறது. அதனால் இதுவே ஸஹஜஸ்திதி அல்லது ஸஹஜஸமாதி ஆகும்.

4.   ஆதிசங்கரர் கூறுகிறார் –

‘தேஹாபிமானே கலிதே விஞாதே பரமாத்மனி |
யத்ர யத்ர மனோ யாதி தத்ர தத்ர ஸமாதய: ||’ – வாக்யஸுதா ஸ்லோகம் 30

அர்த்தம் : ‘நான்’ என்ற உணர்வு அகலும்போது, தான் இறைவனிடமிருந்து வேறுபட்டவன் என்ற பிரமை நீங்கும்போது பரமாத்ம ஸ்வரூபம் பளிச்சிடுகிறது. எங்கு எதைக் காண முடிகிறதோ, எதை உணர முடிகிறதோ, எது இருக்கிறதோ அவை அனைத்தும் பரமாத்மாவே என்ற உணர்வு மேலிடும்போது எங்கெங்கு மனம் செல்கிறதோ அங்கங்கெல்லாம் ஸமாதி நிலை ஏற்படுகிறது.

இது போன்று மிகவும் தெளிவாக, சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஆதிசங்கரர் ஸமாதியின் உண்மை நிலை எவ்வாறிருக்கும் என்பதை விளக்கியிருக்கிறார்.

இதுவே ஸஹஜாவஸ்தா அல்லது ஸஹஜஸமாதி!

–    அனந்த் ஆடவலே (7.12.2023)

|| ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து ||

 

Leave a Comment