விரும்பிய பணிகளை சுபமுஹுர்த்தத்தில் செய்வதன் முக்கியத்துவம்

Article also available in :

பண்டைய காலங்களிலிருந்து, இந்தியாவில் சுபமுஹுர்த்ததில் முக்கிய பணிகளைச் செய்வது வழக்கம். இது நமது அன்றாட வாழ்விலும் கூட  பல்வேறு நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. அதை பற்றிய ஆரம்ப தகவல்களை இப்போது புரிந்து கொள்வோம்.

1. முஹுர்த்தம் என்றால் என்ன?

ஜோதிட சாஸ்திரப்படி, முஹூர்த்தம் என்பது 48 நிமிடங்களுக்கு சமமான கால அளவு. இருப்பினும், நடைமுறையில் உள்ள பொருள் ‘சுப அல்லது அசுபமான காலம்’. இந்தக் கட்டுரையின் குறிப்பிட்டுள்ள  முஹூர்த்தம் என்பது சுப வேளையை (மங்களகரமான நேரத்தை) குறிக்கும். இந்தியாவில், வேத காலத்திலிருந்தே, சுப வேளையில் முக்கியமான பணிகளைச் செய்வது பாரம்பரியமாக வந்துள்ளது. ச்ரௌத, க்ருஹ்ய மற்றும் தர்மசூத்திரம் ஆகிய நூல்கள், தார்மீக விதிகளை மற்றும் ஸன்ஸ்காரங்களை செய்ய வேண்டிய சுப வேளையை பரிந்துரைக்கின்றன. முஹூர்த்தங்களுக்கு பல புனித நூல்கள் உள்ளன, மேலும் அவை எந்தெந்த முஹூர்த்தங்களில் எந்தெந்த முக்கியமான பணிகளைச் செய்ய வேண்டும் என்பதை விரிவாக விவரிக்கின்றன. ஜோதிடம் என்பது காலத்தை அளவிடும் மற்றும் விவரிக்கும் விஞ்ஞானமானதால் ‘முஹூர்த்தத்தை நிர்ணயிப்பது’ என்பது ஜோதிட சாஸ்திரத்தால் மட்டுமே சாத்தியம். மேலும் இது ஆறு உப-வேதங்களில் ஒன்றாகும். ஏனெனில் காலத்தைப் புரிந்து கொண்டால்தான் வேதங்களில் சொல்லப்பட்ட செயல்களைச் செய்ய முடியும்.

திரு. ராஜ் கார்வே

 

2. முஹூர்த்தம் பார்த்து காரியங்களை ஆரம்பிப்பதன் நோக்கம்

பிரபஞ்சத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடக்கிறது, அதாவது ஒவ்வொரு நிகழ்வும் இடம் மற்றும் காலத்தால் பிணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பணியும் வெற்றியடைய காலமும் இடமும் ஸாதகமாக இருக்க வேண்டும். மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ள பின்வரும் வசனம் இது சம்பந்தமாக வழிகாட்டியாக உள்ளது.‘

 ‘नादेशकाले किञ्चित्स्यात् देशकालौ प्रतीक्षताम् ।’ – (महाभारत, वनपर्व, अध्याय २८, श्लोक ३२)

‘நாதேசகாலே கிஞ்சித்ஸ்யாத் தேசகாலௌ ப்ரதீக்ஷதாம் |’
–  (மகாபாரதம், வனபர்வ, அத்தியாயம் 28, ஸ்லோகம் 32)

பொருள்: நேரமும் இடமும் ஸாதகமாக இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது. எனவே, அவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஹிந்து தர்மம், மகத்துவபூர்ண காரியங்களை அனுகூலமான காலம் பார்த்து செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறவில்லை, மாறாக, ‘எந்த யுகத்தில் எந்த ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்’, வாழ்க்கையின் எந்தக் காலகட்டத்தில் எந்த புருஷார்த்தத்தைப் பின்பற்ற வேண்டும், தினசரி நித்ய கர்மாக்களை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் போன்ற அம்சங்களையும் விரிவாகக் கூறுகிறது. சுருக்கமாகச் சொன்னால், காலத்திற்கு ஏற்ப வாழ ஹிந்து தர்மம் நமக்குக் கற்றுத் தருகிறது.

3. முஹுர்த்தத்தை தீர்மானிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்

முஹூர்த்தத்தைக் கணக்கிடுவதற்குரிய ஐந்து முக்கிய அம்சங்களாவது திதி, நட்சத்திரம், நாள், யோகம் மற்றும் கரணம். அவசியமானால் மாதம், அயனம் (உத்தராயணம் மற்றும் தக்ஷிணாயனம்) மற்றும் ஆண்டு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.  முஹுர்த்ததை தீர்மானிக்கும்போது, செய்ய வேண்டிய பணியின் தன்மையை பொருத்து அதற்கேற்ற குணதர்மமுள்ள திதி, நக்ஷத்திரம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உதா., பயணத்தைத் தொடங்கும்போது, முழுமையான வாயு தத்துவத்துடன் தொடர்புடைய அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை ஆகிய நக்ஷத்ரங்கள் ஏற்றதாக உள்ளன. அமாவாசை மற்றும் தாழ்வைக் குறிக்கும் திதிகளை (சதுர்த்தி, நவமி மற்றும் சதுர்த்தசி ஆகியவை) திருமண விழாவிற்கு தவிர்க்க வேண்டும். வித்யையைப் பெறுவதற்கு அஸ்வினி, பூசம், ஹஸ்தம், ரேவதி போன்ற தெய்வீக நக்ஷத்திரங்கள் (ஸத்வ குண நக்ஷத்திரங்கள்) பொருத்தமானவை. தெய்வ மூர்த்திகளை ப்ரதிஷ்டாபனம் செய்வதற்கு உத்தராயணப் புண்யகாலம் உகந்தது.

4. ஒரு சுப வேளையில் விரும்பிய பணியை செய்ய முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

சில சமயங்களில் சுப வேளையில் பணிகளைத் தொடங்குவது ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருக்காது, உதாரணமாக, தேர்வுகள், பொதுப் போக்குவரத்து மூலம் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வது போன்றவை. அப்படிப்பட்ட சமயங்களில் ஒருவர் அவர் வழிபடும் தெய்வத்திடம், ஆன்மீக உணர்வுடன், பணிகளைச் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளை நீக்கி, எந்தச் சிக்கலும் இல்லாமல் பணியை முடிக்க அருள வேண்டும்  என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்

  5. மஹான்கள் நிர்ணயிக்கும் காலத்திற்கு பின்னால் அவர்களின் ஸங்கல்ப சக்தி உள்ளதால் அதுவே முஹூர்த்தம் ஆகிறது

ஒரு மஹான் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பணியைச் செய்யுமாறு நமக்கு அறிவுறுத்தியிருந்தால், வேறு முஹூர்த்த நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. மஹான்கள் கடவுளின் அம்சம் ஆவார்கள், கடவுளானவர் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவர். அதனால் மஹான்கள் ஒரு காரியத்தை ஆரம்பிக்க  நிர்ணயிக்கும் நேரத்திற்கு பின்னால் அவர்களின் ஸங்கல்ப சக்தி இருப்பதால், அதுவே ஒரு சுபமுஹுர்த்த வேளையாகிறது.

– திரு. ராஜ் கர்வே, ஜோதிஷ விஷாரத், கோவா (10.12.2022)

 

 

 

 

Leave a Comment