திரு. துர்கேஷ் பருள்கர்
சந்த்ரயான் – 3 ஹிந்துஸ்தான கண்ணோட்டத்தில் சிந்தனை செய்தால் 23 ஆகஸ்ட் 2023 என்ற இந்நாளை ‘சரித்திரம் படைத்த தினம்’ எனக் கூறலாம். இத்தினத்தில் ஹிந்துஸ்தானத்தின் சந்த்ரயான்–3-ன் ‘விக்ரம் லாண்டர்’ சந்திர பூமியில் தரையிறங்கியது. இதுவரை உலகின் எந்த நாடும் சந்திரனின் தென் துருவத்தில் கால் வைத்தது இல்லை. ஹிந்துஸ்தானத்திற்கே இந்த சிறப்பு கிட்டியுள்ளது. தேச மக்கள் அனைவருக்கும் இதனால் பெருமை. இந்த பொன்மயமான கணம் ஹிந்துஸ்தானத்தின் அம்ருத மஹோத்ஸவ வருடத்தில் வருகிறது என்பது நாம் செய்த பாக்கியம். என்று சந்த்ரயான் சந்திரனில் இறங்கியதோ அன்று நம் தேசத்தின் பிரதமமந்திரி அயல்நாட்டில் இருந்தார். அதனால் அவரால் நம் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்க முடியவில்லை. ஆனால் அவர் அயல்நாட்டிலிருந்து திரும்பி ஹிந்துஸ்தான பூமியில் காலடி எடுத்த வைத்த உடனேயே காலை 6 மணிக்கு விஞ்ஞானிகளை நேரில் சந்தித்தார். அவர்களைப் பாராட்டினார், வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் ஆகஸ்ட் 23-ஐ ‘தேசீய விண்வெளி தினம்’ என அறிவித்தார். அதோடு சந்த்ரயான்–3-ன் ‘விக்ரம் லாண்டர்’ சந்திரனில் தரையிறங்கிய ஸ்தானத்தை ‘சிவசக்தி’ என பெயரிட்டுள்ளார். ஏன் இவ்வாறு பெயர் வைக்கப்பட்டது என்பதை விளக்கும் முகமாக பிரதமமந்திரி திரு. நரேந்திர மோடி அவர்கள் ‘சிவசங்கல்பசூக்த’த்தின் இரண்டாவது ருசாவை உச்சாரணம் செய்தார். அது இவ்வாறு, யேன கர்மாண்யபஸோ மனீஷிணோ – யஜுர்வேதம், அத்யாயம் 34, கண்டிகா 2 உள்ளர்த்தம் : யக்ஞ காரியத்தில் மிகத் திறனுள்ள தைரியவானாக மனன சக்தியுள்ளவனாக உள்ள வித்வான்கள், புத்திமானான மக்கள், மனதின் ஊக்கத்தால் எல்லாக் காரியங்களையும் சிறப்பாக செய்யக் கூடியவர்கள். எப்படி இந்த மனம் உயிரினங்களின் உள்ளே ஹ்ருதயத்தில் வாசம் செய்கிறதோ அப்படியே இந்த மனம் பூஜிக்கத் தக்க காரியங்களை , அற்புத, ஈடு இணையில்லாத காரியங்களை செய்கிறது; அதனால் அவை சுந்தரமாகத் தெரிகின்றன. என்னுடைய மனமும் மங்களகரமாகத் திகழவும் சுப சங்கல்பத்துடன் சுந்தரமான பவித்ரமான சிந்தனைகளால் நிறையவும் சிவனிடம் மனதை ஒருமைப்படுத்துகிறேன். மொத்த ‘சிவசங்கல்பசூக்த’மும் 6 ருசாக்களைக் கொண்டது. இந்த சம்பூர்ண சூக்தத்தில் மனதின் உண்மை நிலையின் வர்ணனை மிகத் தெளிவாக, வெளிப்படையாக. அர்த்தங்கள் செறிந்த வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டுள்ளது. |
1. மனதில் மங்களகர ஸன்ஸ்காரங்களை ஏற்படுத்துவதன் மகத்துவம் !
மனிதர்களின் மனம் அதிக சஞ்சலத்தை உடையது. மனிதர்கள் விழிப்பு நிலையில் பல்வேறு காரியங்களை செய்கின்றனர். அதேபோல் பல வேண்டாத விஷயங்களின் சம்பந்தமும் ஏற்படுகிறது.இவை எல்லாவற்றின் பரிணாமமும் அவர்களின் மனதில் ஏற்படுகிறது. இத்தகைய மனதின் மீது மனிதர்களுக்கு பூரண கட்டுப்பாடு உள்ளது என்பதும் இல்லை. அவர்கள் உறங்கும்போதும் கூட மனம் பல்வேறு திசைகளில் அலைகிறது. இத்தகைய மனமே எல்லா இந்த்ரியங்களுக்கும் வெளிச்சத்தை தர வல்லது. அதனால் இந்த மனதில் மங்களகர ஸன்ஸ்காரங்கள் பதிவது மிக மிக அவசியமாகிறது.
சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எங்கும் பரவுகின்றன. அதனால் அந்தக் கிரணங்களின் தேஜ சக்தி வெகுவாகக் குறைகிறது. அதே கிரணங்களை ஒருங்கிணைத்து ஓரிடத்தில் மையப்படுத்தும்போது அதன் தேஜ சக்தி அதிக வீரியத்துடன் செயல்படுகிறது. மனிதனின் மனமும் இதுபோல் தேஜசுடனும் சக்தியுடனும் இருக்க வேண்டும். எப்போது மனம் சுப சங்கல்பத்துடன் சுப சிந்தனைகள் நிரம்பியதாக உள்ளதோ அப்போதே சம்பூர்ண படைப்பிற்கு நலன் அளிக்கும் விதத்தில் மனிதபுத்தி செயல்படும். இந்த்ரியங்களைக் காட்டிலும் மனம் உயர்ந்தது, மனத்தைக் காட்டிலும் புத்தி உயர்ந்தது. மனதில் நல்ல ஸன்ஸ்காரங்கள் இருந்தால் மனம் இந்த்ரியங்களை கட்டுக்குள் வைத்திருக்கும், அதோடு புத்தியின் ஆணைக்குக் கீழ்ப்படியும். இதற்கு மனம் சுப சங்கல்பம் நிரம்பியதாக இருப்பது அவசியமாகிறது.
2. மனம் சுப சங்கல்பம் நிரம்பியதாக இருப்பதன் அவசியம் என்ன?
சிவன் என்ற பெயருக்கே மங்களமானவன், மங்களங்களை அருளுபவன் என்று பொருள். அதனால் மனம் சிவனிடம் ஆகர்ஷிக்கப்பட வேண்டும். சிவனிடம் ஆகர்ஷிக்கப்படும் மனதிற்கு சிவனின் சக்தி கிடைக்கிறது. அதனால் மனிதகுலம் மற்றும் படைப்பிற்கு நலம் அளிக்கக் கூடிய காரியங்களை மனிதனால் செய்ய முடிகிறது. மிருக இயல்பு, சுப மற்றும் மங்களகர சங்கல்பத்தின் அருகில் கூட வர முடியாது. மனம் ஞானம் நிரம்பியதாக, சிந்தனை வளம் செறிந்ததாக, தைரியம் மிக்கதாக இருக்க வேண்டும். அப்போதே அதனால் எல்லா உயிரினங்களில் அந்தர்யாமியாய் உள்ள, அவினாசியான அத்தகைய அம்ருதமய ஜோதி ரூபத்தில் நிலைத்திருக்க முடியும். மனிதனால் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் மனதின் சம்மதம் இல்லாமல் செய்யப்படுவது இல்லை. அதனாலேயே மனம், சுப சங்கல்பம் நிரம்பியதாக இருப்பது அவசியம். மனதில் சுந்தரமான பவித்ரமான சிந்தனைகள் நிரம்புவதற்கு மங்களகர சிவனிடம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
3. மனதை சிவத்துடன் இணைக்க வேண்டும்!
மனிதனின் மனம் அவினாசியானது. இந்த மனம், இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் எல்லா விஷயங்களையும் தன்னுள் கொண்டது. அதனால் மனம் சிவ சங்கல்பமுடையதாக இருத்தல் அவசியம். மனம் சிறிது பவித்ரமில்லாமல், சுத்தமில்லாமல் தகுதியில்லாமல் இருக்குமானால் அந்த சரீரத்தின் மூலம் உலக காரியங்கள் சரியான முறையில் நடைபெறாது. அதனால் மனதை சிவத்துடன் இணைக்க வேண்டும். ரதத்திற்கு சக்கரங்கள் உள்ளன. அந்த சக்கரங்களின் மத்தியில் உள்ள அச்சு ஸ்திரமாக உள்ளது. அதேபோல் நம் மனங்களில் ருக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதத்தின் ருசாக்கள் ஸ்திரமாக நிலைத்திருக்க வேண்டும், அப்போதே மனதில் உயிரினங்களின் மீது கருணை, அன்பு, நெருக்க உணர்வு ஆகியவை ஏற்படும். இத்தகைய நேர்மறை உணர்வுகள் நிரம்பிய மனம் சுப சங்கல்பம் நிரம்பியதாக உள்ளது. ரதத்தின் அச்சு முறிந்தால் ரதத்தால் மேற்கொண்டு சரியான திசையில் செல்ல முடியாது, அதோடு ரதத்தில் வீற்றிருப்பவர் தான் போய்சேர வேண்டிய இடத்திற்கு போக முடியாது. அதேபோல் மனதில் சுப சங்கல்பம் நிறைந்திருந்தால் அது அங்கும் இங்கும் அலையாது. அது சரியான திசையில் சென்று தான் போய்ச்சேர வேண்டிய இலக்கை சென்று அடையும். இதன் பரிணாமமாக சம்பூர்ண படைப்பிற்கும் நலன் அளிக்கும் மகோன்னத காரியம் நம் கைகளால் பரிபூரணமாக நடைபெறும். அதனால் மனதை சிவத்துடன் இணைக்க வேண்டும்.
சிவத்துடன் இணைந்த மனதிற்கு சக்தி கிடைக்கும். ஆற்றல் மிகுந்த ஸாரதி எப்படி வேகம் மிகுந்த குதிரைகளை சரியான திசையில் செலுத்துகிறாரோ அதுபோல் மனதும் இங்கும் அங்கும் அலையாமல் புத்தியின் வழிகாட்டுதலின்படி சரியான வழியில் நேராக செல்லும். அதற்கு மனிதர்கள் தங்களின் மனதை சுப சங்கல்பம் நிறைந்ததாக ஆக்குவதற்கு சிவனிடம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். இத்தகைய சுப சங்கல்பம் மனித மனதை வேறெங்கும் அலையாமல் காப்பாற்றுகிறது. இலக்கை அடைவதற்கும் தன் கைகளால் நல்ல காரியங்கள் நடப்பதற்கும் மனதை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கும் புத்திக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.
4. ஹிந்து கலாச்சாரத்தின் மகத்துவம் !
விஞ்ஞானம் என்பது இருமுனை வாள் போன்றது. நல்லது, கெட்டது ஆகிய இரண்டிற்கும் அதை உபயோகப்படுத்தலாம். சஞ்சலமாக வேகமாக உள்ள மனதின் பல்வேறு வகை ஆசைகளால், கவர்ச்சிகளால் அது வேண்டாத இயல்புகளை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இவ்வாறு பார்த்துக் கொண்டே இருக்கும்போது அது ராக்ஷச இயல்பை எப்போது அடைகிறது என்பது அதற்கே தெரிவதில்லை. நமக்குக் கிடைத்துள்ள விஞ்ஞானத்தை மனிதகுல நலனுக்காக உபயோகிக்க வேண்டும். ஆனால் அதே விஞ்ஞானத்தை மனிதகுல அழிவிற்கு பயன்படுத்தினால் எங்கும் பயங்கரமும் துக்கமுமே மிஞ்சும். படைப்பின் சமநிலை பாதிக்கப்படும். அதனால் நம் மூலமாக எந்த விதமான தீய காரியங்களும் நடக்கவில்லை என்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதோடு முழு உணர்வுடன் தன்னை சிவசக்தியுடன் இணைக்க வேண்டும் என்ற மகத்துவபூர்ண செய்தியை பிரதமமந்திரி மோடிஜி இந்த ருசா மூலமாக சம்பூர்ண உலகிற்கு தெரிவித்துள்ளார்.
ஹிந்து கலாச்சாரத்தின் வியாபகத்தன்மை மற்றும் வேதங்களின் வியாபகத் தன்மையை உலகிற்கு தெரிவிக்கும் வாய்ப்பை பிரதமமந்திரி மோடிஜி அழகாக பயன்படுத்தியுள்ளார். அதோடு அவர் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்.திற்கும் உள்ள தொப்புள்கொடி உறவை போகிற போக்கில் மிக சஹஜமாக வெளிப்படுத்தியுள்ளார். அதனால் அவரின் இவ்வுரையை நாம் முழு கவனத்துடன் பார்த்துப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
– திரு. துர்கேஷ் ஜெயந்த் பருள்கர், ஹிந்துப்பற்றுடைய சொற்பொழிவாளர் மற்றும் எழுத்தாளர், டோம்பிவலி. (1.9.2023)