‘சூட்சும’ என்ற வார்த்தையுடன் சம்பந்தப்பட்ட சில சொற்களின் பொருள்
‘சூட்சும’ என்பது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. பல்வேறு புனித கிரந்தங்களில் சூட்சும ஞானத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது; உதாரணத்திற்கு,
भगवतो नारायणस्य साक्षान्महापुरुषस्य स्थविष्ठं रूपम् आत्ममायागुणमयम् अनुवर्णितम् आदृतः पठति शृणोति श्रावयति स उपगेयं भगवतः परमात्मनः अग्राह्यम् अपि श्रद्धाभक्तिविशुद्धबुद्धिः वेद ।
பகவதோ நாராயணஸ்ய ஸாக்ஷான்மஹாபுருஷஸ்ய ஸ்தவிஷ்டம் ரூபம் ஆத்மமாயாகுணமயம் அனுவர்ணிதம் அத்யத: படதி ச்ருணோதி ச்ராவயதி ஸ உபகேயம் பகவத: பரமாத்மன: அக்ராஹ்யம் அபி ச்ரத்தாபக்திவிஷுத்தபுத்தி: வேத | – ஸ்ரீமத்பாகவதம், ஸ்காந்தம் 5, அத்யாய 26, சூத்ர 38
பொருள்: உபநிஷத்துகளில் கூறியுள்ளபடி நிர்குண நிலையில் உள்ள கடவுளின் வடிவமானது மனம் மற்றும் புத்தியின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. இருந்தபோதிலும், கடவுளின் உருவ அமைப்பைப் பற்றி படிக்கும்போது, கேட்கும்போது அல்லது விவரிக்கும்போது ஒருவரின் புத்தி, அவரது நம்பிக்கை மற்றும் பக்தியின் காரணமாக தூய்மையாகிறது, மேலும் அவர் கடவுளின் சூட்சும வடிவத்தைப் பற்றிய ஞானத்தையோ அல்லது அதன் ஆன்மீக அனுபவத்தையோ பெறுகிறார்.
ஸாதனைவின் காரணமாக, ஸனாதனின் ஸாதகர்களின் நம்பிக்கையும் பக்தியும் வளர்ச்சியடைந்து, கடவுளின் சூட்சுமநிலையைப் பற்றிய ஞானத்தைப் அவர்கள் பெறுகிறார்கள் அல்லது சூட்சுமநிலையில் ஆன்மீக அனுபவங்களைப் பெறுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், ஸனாதனின் ஸாதகர்கள் நமது புனித கிரந்தங்களில் கூறியுள்ளபடி சத்திய அனுபவத்தைப் பெறுகிறார்கள். இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட விஷயங்களில் சில இடங்களில் ‘சூட்சுமம்’ என்ற வார்த்தையுடன் சம்பந்தப்பட்ட சில சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. சூட்சும உலகம்
ஐம்புலன்களால் (மூக்கு, நாக்கு, கண், தோல் மற்றும் காது) புரிந்து கொள்ள முடியாத, ஆனால் ஸாதனை செய்பவர்களால் எதன் இருப்பு புரிந்து கொள்ளப்படுகிறதோ அதுவே ‘சூட்சும உலகம்’ என்று அறியப்படுகிறது.
2. சூட்சுமநிலையில் பார்ப்பது, கேட்டல் போன்றவை (ஐந்து சூட்சும புலன்கள் மூலம் ஞானத்தைப் பெறுதல்)
சில ஸாதகர்களுக்கு சூட்சும பார்வை விழிப்படைந்துள்ளது, அதாவது, கண்களால் பார்க்க முடியாததை அவர்களால் உணர முடிகிறது, அதேபோல் சிலரால் சூட்சுமமான ஒலிகள் அல்லது வார்த்தைகளைக் கேட்க முடிகிறது.
3. சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடம்
சில ஸாதகர்களால், குறிப்பிட்ட ஒரு அம்சத்தை தங்களின் சூட்சும பார்வையின் மூலம் உணர முடிகிறது, பார்க்க முடிகிறது; ஒரு படத்தின் வடிவில் காகிதத்தில் அதை வரையும்போது ‘சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடம்’ என்று அது அழைக்கப்படுகிறது.
4. சூட்சும – பகுப்பாய்வு
‘சூட்சும நிலையில் பகுப்பாய்வு’ என்பது ஒரு நிகழ்வு அல்லது செயல்முறையைப் பற்றி சித்த நிலையில் (ஆழ் மனதில்) புரிந்துகொள்வது.
5. சூட்சும ஞானம் பற்றிய பரிசோதனைகள்
சில ஸாதகர்கள் ‘மனம் மற்றும் புத்தியின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருளைப் பற்றி அவர்கள் என்ன உணர்கிறார்கள்’ என்று பரிசோதனை செய்வதன் மூலம் சூட்சும பரிமாணத்தைப் புரிந்து கொள்ளும் திறனைப் பயில்கிறார்கள். இது ‘சூட்சும ஞான பரிசோதனை’ என்று அழைக்கப்படுகிறது.
‘ஸாதகர்களுக்கு கஷ்டங்களை கொடுக்கும் தீய சக்திகள்’ என்றழைப்பதன் பொருள்
स्तुवानमग्न आ वह यातुधानं किमीदिनम् ।
त्वं हि देव वन्दितो हन्ता दस्योर्बभूविथ ।।
ஸ்துவானமக்ன ஆ வஹ யாதுதானம் கிமீதினம் |
த்வம் ஹி தேவ வந்திதோ ஹந்தா தஸ்யோர்பபூவித ||
– அதர்வவேதம், கண்டம் 1, ஸுக்தம் 7, காண்டம் 1
சுற்றுச்சூழலில் நல்ல மற்றும் தீய சக்திகள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஸாதனை மூலம் நல்ல சக்திகள் ஸாதகர்களால் ஈர்க்கப்படுகின்றன. மேலும் ஸாதனையால் சுற்றுச்சூழலில் நல்ல சக்திகளின் ஆற்றல் அதிகரித்து தீய சக்திகளின் ஆற்றல் குறைகிறது. இதைத்தடுக்க தீய சக்திகள் ஸாதகர்களின் ஸாதனையில் தடைகளை உருவாக்குகின்றன. பண்டைய காலத்தில் முனிவர்கள் மற்றும் அந்தணர்கள் செய்த யாகங்களில் அசுரர்கள் தடைகளை உண்டாக்கியது பற்றி பல கதைகள் அதர்வண வேதத்தில் உள்ளன. ‘அதர்வண வேதத்தில் பல இடங்களில் அசுரர்கள், பிசாசுகள் (இறந்த நபரின் ஆவி) போன்றவற்றை முறியடிக்க மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.’ (குறிப்பு 1) ஒரு மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொருள் : ஹே அக்னி பகவானே! நெருப்பு வடிவில் அனைத்து உயிரினங்களின் வயிற்றினுள்ளும் வசிக்கும் இறைவா! நீங்களே உலகை மின்னல் வடிவில் சூழ்ந்துள்ளீர்கள். அனைத்து யாகங்களிலும் நீங்களே முதன்மையாக உள்ளீர்கள். நாங்கள் வணங்கும் தெய்வங்களுக்கு இந்த காணிக்கைகளை ஸமர்ப்பியுங்கள்! நாங்கள் ஸமர்ப்பிக்கும் ஆஹுதியால் மகிழ்ச்சி அடையும் தெய்வங்களுக்கு அருகில் எங்களை அழைத்து செல்லுங்கள். அதோடு எங்களை அழிப்பதற்காக சூட்சும நிலையில் எம்மை சுற்றி இருக்கும் ஒரு வகையான தீய பிசாசை அகற்றுமாறு வேண்டுகிறோம். அனைத்தையும் காக்கும் குணமுடைய இறைவா ! உம்மை வணங்குபவர்களை தீய சக்திகளிடமிருந்து காக்கும் இறைவா ! எங்களை அழிக்க நினைக்கும் தீய சக்திகளை அழைத்து, இந்த அக்கினி குண்டத்தில் தள்ளி அழித்து எம்மை காத்து அருள் புரிவாய் இறைவா !
சுருக்கமாக, தீய சக்திகள் ஸாதனை செய்பவர்களுக்கு பல்வேறு கஷ்டங்களைக் கொடுக்கின்றன. வேதம் சம்பந்தப்பட்ட பல்வேறு நூல்களில் இத்தகைய துன்பங்களைத் தடுக்க ஆன்மீக நிவாரணங்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. இந்த இணையதளத்தின் உள்ளடக்கத்தில், சில இடங்களில் ‘தீய சக்திகள்’ அல்லது ‘ஆன்மீக கஷ்டங்கள்’ என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளக்கத்தின்படி அவை பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பு 1 : தகவல் : மராட்டி விச்வகோஷ், பாகம் 1, வெளியிட்டவர் : மஹாராஷ்ட்ரா ராஜ்ய ஸாகித்ய ஸன்ஸ்க்ருதி மண்டல், சசிவாலயா, மும்பை – 400 032, பதிப்பு 1 (1976), பக்கம் 194.
இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ள சில சொற்கள் வாசகர்களுக்குப் புரியவில்லையெனில் தயவு செய்து எங்களுக்கு எழுதவும். அவை இந்த இணையதளத்தில் புதுப்பிக்கப்படும்.
இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கருப்பு சக்தி, கஷ்டம் தரும் / மாயாவி / தீய சக்தி’ போன்றவை ‘தம’ அல்லது ‘தம கூறு’ ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டவை. (ஸ்ரீமத்பகவத்கீதை போன்ற நமது கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) ‘கருப்பு படலம், அலைகள் / அதிர்வலைகள் / துகள்கள்’ போன்ற சொற்கள் ‘தம ஆவரணம் / அதிர்வலைகள் / துகள்கள்’ ஆகியவற்றைக் குறிக்கிறது. சம்ஸ்க்ருதத்தில் ‘தம’ என்பதற்கு இருள் என்று பொருள். இருள் கருப்பு என்பதால், தம கூறுகள் கருப்பு என்று விவரிக்கப்பட்டுள்ளன.