ராமேச்வரம்: பிரபு ஸ்ரீராமனின் தெய்வீக இருப்பால் புனிதமான இடம் !
திரு. சேத்தன் ராஜ்ஹன்ஸ்
பாரதத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கியமான யாத்திரை ஸ்தலம் ராமேச்வரம்! ஹிந்து தர்மத்தின் பாரம்பரியத்தில் ராமேச்வரம் புனித யாத்திரை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
1. வரலாறு
பத்து தலை பிராமணனான ராவணனை அழித்த பிறகு, அந்த பாவத்தை போக்க, அகஸ்திய முனிவர் பிரபு ஸ்ரீராமருக்கு ஹிந்து பஞ்சாங்கப்படி ஆனி மாத சுக்ல பக்ஷ தசமி அன்று ஒரு நல்ல தருணத்தில் சிவலிங்கத்தை ஸ்தாபிக்கும்படி அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சிக்காக சிவபெருமானின் தெய்வீக லிங்கத்தை பெறுவதற்காக பகவான் ஸ்ரீ மாருதி கைலாச மலைக்குச் சென்றார், ஆனால் அவர் சிவபெருமானை சந்திக்க முடியாததால் அவரை நினைத்து தவம் செய்யத் துவங்கினர். சிறிது காலம் கழித்து சிவபெருமான் தோன்றி தனது தெய்வீக லிங்கத்தை பகவான் ஸ்ரீ மாருதியிடம் ஒப்படைத்தார். இதற்கெல்லாம் காலதாமதமானதால் , பகவான் ஸ்ரீ மாருதியால், நிர்ணயிக்கப்பட்ட சுப முகூர்த்தத்திற்குள் ராமேச்வரம் திரும்ப முடியவில்லை. எனவே சீதை மணலில் ஒரு லிங்கத்தை உருவாக்கினார். அகஸ்தியமுனிவரின் ஆலோசனையின்படி, அந்த லிங்கத்தையே ஸ்ரீராமர் ப்ரதிஷ்டை செய்தார். ராமேச்வரத்தில் உள்ள இந்த லிங்கத்தை உள்ளூர் மக்கள் ராமநாதசுவாமி என்று அழைக்கிறார்கள் .
சிவபெருமான் கொடுத்த தெய்வீக லிங்கத்துடன் வந்த பகவான் ஸ்ரீ மாருதி, ஸ்ரீராமர் ஏற்கனவே ஒரு லிங்கத்தை நிறுவியிருப்பதைக் கண்டு மனமுடைந்து போனார். அதைக் கண்ட ஸ்ரீராமர், ஏற்கனவே பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்திற்குப் பின்னால், சிவபெருமான் கொடுத்த தெய்வீக சிவலிங்கத்தை ஸ்தாபித்தார் , மேலும் ராமேச்வரத்திற்கு தரிசனம் செய்ய வருபவர்களுக்கு இந்த லிங்கத்தையும் வணங்காமல் எந்தப் பலனும் கிடைக்காது என்று பகவான் ஸ்ரீ மாருதியிடம் உறுதியளித்தார். இந்த லிங்கத்திற்கு காசிவிச்வநாதர் அல்லது ஹனுமதிஷ்வர் என்று பெயர்.
2. இந்த புனித இடத்தின் மகத்துவம்
2 அ. காசி யாத்திரையை நிறைவு செய்யும் இடம்
பாரதத்தின் வடக்கே உள்ள காசிக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம், தெற்கே ராமேச்வரத்திற்கு அளிக்கப்படுகிறது . தனுஷ்கோடியில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் சங்கமிக்கும் இடத்தில் நீராடி, கங்கையிலிருந்து கொண்டு வரும் புனித நீரால் ராமேச்வரத்தில் அபிஷேகம் செய்த பிறகே , காசி யாத்திரை நிறைவுற்றதாக வேதம் கூறுகிறது
2 ஆ.புனித யாத்திரை செல்லும் நான்கு புனித ஸ்தலங்களுள் ஒன்று
இந்துக்களின் நான்கு புனிதத் தலங்களில் ராமேச்வரம் தெற்கில் உள்ளது. பத்ரிநாத், துவாரகை, புரி மற்றும் ராமேச்வரம் யாத்திரைக்குப் பிறகுதான் ஹிந்துவின் வாழ்க்கைப் பயணம் நிறைவடைகிறது.
2 இ . பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று
ராமேச்வரம் பாரதத்தின் 12 முக்கிய ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும்.
3. கோவிலுக்குள் உள்ள முக்கிய இடங்கள்
3 அ . ராமேச்வர் (ராமநாதசுவாமி)
மணலில் இருந்து சீதை உருவாக்கிய இந்த சிவலிங்கம்தான் வழிபாட்டின் முக்கிய இடமாகும்.
3 ஆ விஸ்வநாதர் (ஹனுமதிஷ்வர்)
இது ஸ்ரீ ஹனுமாரால் கொண்டு வரப்பட்ட சிவனின் ஆத்மலிங்கம்.
3 இ . ஆத்மலிங்கேஷ்வர்
பிரபு ஸ்ரீராமருக்கு லிங்கம் வேண்டும் என்று சிவபெருமானிடம் கேட்டபோது, ஸ்ரீ ஹனுமார் தனக்காகவும் ஆத்மலிங்கேஷ்வர் என்று அழைக்கப்படும் ஒரு லிங்கத்தைக் கேட்டார்.
3 ஈ . நந்திதேவர்
ராமேச்வர லிங்கத்திற்கு எதிரே களி மண்ணால் செய்யப்பட்ட நந்தியின் பிரம்மாண்டமான வெள்ளை சிலை உள்ளது. இது 22 அடி உயரமும் 17 அடி அகலமும் கொண்டது. இது கோவிலின் பந்தலின் கீழ் உள்ளது. நாளுக்கு நாள் உயரம், நீளம், அகலம் என வளர்ந்து வரும் இந்த நந்தி தற்போது பந்தலின் கூரையைத் தொட்டு நிற்கிறது. 1974ல் இந்த நந்தி 13 அடி உயரமும் 8 அடி நீளமுமாக இருந்தது
3 உ . கருடஸ்தம்பம் (கருட தூண்)
நந்தி தெய்வத்திற்கு அருகில் தங்கத் தகடுகளால் மூடப்பட்ட கருடத் தூண் உள்ளது.
3 ஊ . ஆஞ்ஜநேயர் கோவில்
இங்கு,இயற்கையாய் தோன்றிய ( சுயம்பு) ஸ்ரீ ஹனுமார் சிலை 16 அடி உயரத்தில் உள்ளது. இதன் 8 அடி கீழ்பாகம் இந்தியப் பெருங்கடலில் மூழ்கி, 8 அடி மேல் பாகம் வழிபாட்டிற்கு ஏற்றவாறு உள்ளது. (கோயில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளதால் கோயிலின் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் உள்ளது.)
3 எ . 22 வழிபாட்டு ஸ்தலங்கள்
ராமேச்வரத்தில் 22 வழிபாட்டு ஸ்தலங்கள் உள்ளன, அவற்றில் 6, வெளிப்புறமுள்ள மூன்று மண்டபங்களில் உள்ளன. இந்த வழிபாட்டு ஸ்தலங்கள் அனைத்திலும் நீராடிய பிறகே ராமேச்வரரை வழிபட வேண்டும்.
3 ஏ . ராமகுண்டம் , சீதாகுண்டம் மற்றும் லக்ஷ்மண குண்டம்
இந்த ஏரிகள் கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ளன, இங்குதான் யாத்ரீகர்கள் குளித்து, சிரார்த்தம் (இறந்தவர்களுக்கான சடங்குகள்) போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள்.
4. புனித யாத்திரையின் சடங்குகள்
பக்திமிக்க யாத்ரீகர்கள் இந்த அனைத்து தீர்த்த கிணறுகளிலும் வரிசையாக நீராடி பின்னர் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரைக் கொண்டு ராமேச்வரத்தை புனிதப்படுத்துகிறார்கள். ராமேச்வரம் கோவிலில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள ராமசேதுவில் இருந்து மணல் எடுக்கப்பட்டு, ராமேச்வரம் கோவிலில் உள்ள ஸ்ரீராமரின் சிலைக்கு அருகில் வைத்து பூஜிக்கப்படுகிறது. பின்பு மூன்று நதிகள் சங்கமிக்குமிடமான பிரயாகையில் இந்த பூஜிக்கப்பட்ட மணலைக் கரைக்கும்போதுதான் உண்மையில் புனித யாத்திரை முழுமை அடையும் என்பது ஐதீகம்.
5. இந்துக்களின் ஒற்றுமையை உணர்த்தும் புனிதமான இடம்
5 அ . சமய ஒற்றுமையின் வெளிப்பாடு
பாரதத்தில் உள்ள அனைத்து மத ஸ்தலங்களும் சைவ மற்றும் வைணவ பிரிவினர்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. ராமேச்வரம் இதற்கு விதிவிலக்காக உள்ளது, ஏனெனில் இது சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு பிரிவினருக்கும் வழிபாட்டு ஸ்தலமாகும். விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான பிரபு ஸ்ரீராம் உண்மையில் ராமேச்வரத்தை ஸ்தாபித்துள்ளதால், அது சிவனை வழிபடும் இடமாக இருந்தாலும், வைஷ்ணவர்களுக்கும் இது புனிதமானது. இங்குள்ள சிவலிங்கத்தை நிறுவிய பிரபு ஸ்ரீராமரால் ராமேச்வரம் என்ற பெயர் வந்தது.
5 ஆ. தேச ஒற்றுமையின் சின்னம்
இராமாயண காலத்திலிருந்து இன்றுவரை பாரதத்தின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் புனித இடமாக ராமேச்வரம் திகழ்கிறது, ஏனெனில் காசி விச்வேஷ்வரரின் யாத்திரை ராமேச்வரத்தை வணங்காமல் முழுமையடையாது. இதுவே பாரதத்தை ஒன்றிணைக்கும் இந்து தர்மத்தின் தனித்துவமான பாரம்பரியத்தை நிரூபிக்கிறது. இந்த பாரம்பரியம் தான் இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்களின் கூட்டத்திற்கு காரணம். இதனால் தான் பாரதத்தில் பாதுகாப்பற்ற இடமாக இருந்த போதிலும், எண்ணற்ற படையெடுப்புகளுக்கு மத்தியிலும், இது நிலைத்து நிற்கிறது .
6. ராமேச்வரர் கோவில்
6 அ . வரலாறு
இந்த கோயில் முக்கியமாக ராமநாதபுர சேதுபதி அரச வம்சத்தால் கட்டப்பட்டது. தற்போதுள்ள கோயிலின் அடித்தளம் 1414 ஆம் ஆண்டில் லங்காவின் மன்னர் பரராஜேச்வரரின் உதவியுடன் சேதுபதி மன்னரால் அமைக்கப்பட்டது. 350 ஆண்டுகளில் சேதுபதி வம்சத்தின் மன்னர்கள் அதை விரிவுபடுத்தினர். தெய்வத்திற்கான முதல் வழிபாடு இந்த அரச குடும்பத்தால் செய்யப்படும். அதை செய்யும் பூசாரிகள் மகாராஷ்டிர பிராமணர்கள் ஆவார்கள் .
6 ஆ கோவிலின் சிறப்பு
இக்கோயிலுக்கு நிகரான கோவில் பாரதம் முழுவதிலும் இல்லாத அளவுக்கு இக்கோவில் மிகவும் பிரம்மாண்டமானது . இது திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது 15 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்து உள்ளது. உயர்ந்த சுவர்களால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரப்பளவு கிழக்கிலிருந்து மேற்காக 825 அடியும் மற்றும் தெற்கிலிருந்து வடக்கு வரை அகலம் 657 அடியுமாக உள்ளது . கோயிலின் நான்கு பக்கங்களிலும் வாயில்கள் (கோபுரங்கள்) உள்ளன. கிழக்கில் உள்ள கோபுரத்தில் 10 தளங்களும், மேற்கில் 7 தளங்களும் உள்ளன. எண்ணற்ற சிலைகள் 4 கோபுரங்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. உள் பிராகாரத்தில் வரிசையாக கட்டப்பட்ட பெரிய தூண்களால் தாங்கப்பட்ட மூன்று மிகப்பெரிய மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களின் மேற்கூரைகள் மிகவும் உயரமாக இருப்பதால், கோயில் ஊர்வலத்தின்போது யானைகள் அலங்கார பல்லக்குகளுடன் கடந்து சென்றால், மேல்விட்டத்திலிருந்து தொங்கும் குத்துவிளக்குகள் மற்றும் விளக்குகளைக் கூட அது தொடாது. ஒவ்வொரு மண்டபமும் 400 அடி நீளமும் 17 – 18 அடி அகலமும் கொண்டது. இந்த மண்டபங்கள் கட்டப் பயன்படுத்தப்பட்ட கல் சுமார் 40 அடி நீளம் கொண்டது
– திரு. சேத்தன் ராஜ்ஹன்ஸ், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.
ஆதாரம் : தினசரி ஸனாதன் பிரபாத்