ஹனுமான் – ‘ராமரைக் காட்டிலும் ராமநாமம் பெரியது’ என்பதை நிரூபித்த அதி உன்னத பக்தர்!

Contents

1.     ஸ்ரீராமர்  ஹனுமாருக்கு வரம் அருளுதல்

ஹனுமாரின் அதி உன்னத பக்தியால் மகிழ்வுற்று பிரபு ஸ்ரீராம் அவரிடம் ஒரு வரம் கேட்குமாறு கூறினார். ஹனுமார் பணிவுடன் ‘பிரபு ஸ்ரீராமரின் நாமத்தைத் தொடர்ந்து நினைவுகூரும் பக்தருக்கு ஹனுமாரின் பாதுகாப்பு கவசம் கிடைக்க வேண்டும். அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படக் கூடாது’ என வேண்டினார். பிரபு ஸ்ரீராம் உடனே அவ்வரத்தைத் தந்தருளினார்.

2.     பிரபு ஸ்ரீராமரை சந்திக்க வேண்டி கிளம்பிய
மகரிஷி விஸ்வாமித்ரர் மற்றும் காசி ராஜன்
சௌபத்ரா சிவன் கோவிலில் சந்திக்கின்றனர்

திரேதாயுகத்தில் அயோத்யாவை பிரபு ஸ்ரீராமர் ஆட்சி புரியும் காலத்தில் காசியின் ராஜாவான சௌபத்ராவுக்கு ராமரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதே சமயம் ராமரை சந்திக்கும் ஆர்வம் மகரிஷி விச்வாமித்ரருக்கும் ஏற்பட்டது. இருவரும் அயோத்யாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் சமயத்தில் சிவன் கோவிலில் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். மகரிஷியின் சிஷ்யர்கள் கோவிலுக்குள் மகரிஷியைப் போற்றி கோஷங்கள் எழுப்பினர். சிவன் கோவிலில் சிவனை மட்டுமே போற்ற வேண்டும், இல்லையேல் அது சிவனை அவமதிப்பதாகும் என்று ராஜா சௌபத்ரா நினைத்தார். அதனால் மகரிஷியைப் போற்றுவதை அவர் எதிர்த்தார். அதன் பலனாக மகரிஷி விச்வாமித்ரருக்கு கோபம் வந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

3.     மகரிஷி விச்வாமித்ரருக்கும் ராஜா
சௌபத்ராவுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தின்
தீர்ப்பு மறுநாள் நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும்
என்று பிரபு ஸ்ரீராமர்  அறிவித்தார்

மகரிஷி விச்வாமித்ரரும் ராஜா சௌபத்ராவும் அயோத்யாவை அடைந்த பின்னர் பிரபு ஸ்ரீராமர் இருவரையும் ஒரே சமயம் சந்தித்தார். ராஜா சௌபத்ராவுக்கு கடும் தண்டனை வழங்குமாறு மகரிஷி விஸ்வாமித்ரர் ராமரிடம் கூறினார். அப்போது பிரபு ஸ்ரீராமர் இவ்வழக்கின் தீர்ப்பு மறுநாள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் என்று கூறினார்.

4.     நாரதரின் அறிவுரைப்படி ராஜா சௌபத்ரா
ஹனுமாரின் தாயாரான அஞ்சனையிடம் சரண் புகுவது,
அஞ்சனா மாதா சௌபத்ராவை காப்பாற்றும் பொறுப்பை
ஹனுமாரிடம் அளித்தல்

மகரிஷி விச்வாமித்ரரின் அறிவுரைப்படி பிரபு ஸ்ரீராமர் தனக்கு கடும் தண்டனை வழங்கப் போகிறார் என்ற எண்ணத்தால் சௌபத்ரா கலக்கமடைந்தார். அந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்து சௌபத்ராவிடம் ஹனுமாரின் தாயாரான அஞ்சனையிடம் சரண் புகுமாறு கூறினார். அதன்படி ராஜா சௌபத்ரா சுமேரு மலைக்கு சென்று அங்கு அஞ்சனையின் பாதங்களில் வீழ்ந்து அவரை சரணடைந்தார். அஞ்சனா மாதா நடந்த அனைத்தையும் உணர்ந்து சௌபத்ராவைக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தாள். ராஜா சௌபத்ராவைக் காப்பாற்றும் பொறுப்பை ஹனுமாரிடம் ஒப்படைத்தார். ஹனுமார் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு ராஜாவை கூட்டிக் கொண்டு மறுநாள் அயோத்யாவிற்கு பறந்து சென்றார். அவர் சௌபத்ராவிடம் தைரியத்தைக் கைக்கொண்டு சரயு நதிக்கரையில் அமர்ந்து ஸ்ரீராம நாமத்தை அகண்டமாக ஜெபிக்கும்படி கூறினார்.

5.     பிரபு ஸ்ரீராமர் ராஜா சௌபத்ராவை சூரிய
அஸ்தமனத்திற்குள் வதம் செய்வதாக சபதமேற்றல்

ராஜா சௌபத்ரா அவ்விடத்திலிருந்து ஓடி விட்டார் என தெரிந்ததும் மகரிஷி விச்வாமித்ரரின் கோபம் மேலும் அதிகமாகியது. சௌபத்ராவைக் கொல்லும்படி ஸ்ரீராமனுக்கு ஆணையிட்டார். அதன்படி ஸ்ரீராமரும் மாலை சூர்ய அஸ்தமனத்திற்குள் சௌபத்ராவை வதம் செய்வதாக சபதம் ஏற்றார். பிரபு ஸ்ரீராமரின் சேனை சௌபத்ராவைத் தேடி பல இடங்களுக்கு சென்றன. சௌபத்ரா ஹனுமாருடன் கூட சரயு நதிக்கரை தீரத்தில் ஸ்ரீராம நாம ஜபத்தில் மூழ்கியிருப்பதாக அவர்கள் வந்து ஸ்ரீராமர் மற்றும் மகரிஷி விச்வாமித்ரரிடம் தெரிவித்தனர்.

6.     தர்மசங்கட நிலையில் பிரபு ஸ்ரீராமர்

பிரபு ஸ்ரீராமர் தன் வில், அம்புகளை எடுத்துக் கொண்டு மகரிஷி விச்வாமித்ரருடன் சேர்ந்து சரயு நதிதீரத்திற்கு வந்தார். அங்கு ஹனுமார் முன்னால் அமர்ந்திருப்பதையும் சௌபத்ரா அவருக்குப் பின்னால் அமர்ந்திருப்பதையும் பார்த்தார். இருவரும் ஸ்ரீராம நாம ஜபத்தில் மூழ்கியிருந்தனர். பிரபு ஸ்ரீராமர் ஹனுமாரை நகர்ந்து கொள்ளும்படி கூறினார். அதற்கு ஹனுமார், ஸ்ரீராமர் தனக்கு முன்பு தந்தருளிய வரத்தை நினைவுகூர்ந்தார். சௌபத்ரா மீது அம்பு ஏவும்படி மகரிஷி விஸ்வாமித்ரர் வற்புறுத்தினார். ஹனுமாருக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பதா அல்லது மகரிஷி சொற்படி நடப்பதா என்ற தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டார் ஸ்ரீராமர்.

7.     பிரபு ஸ்ரீராமர் சௌபத்ரா மீது அம்பு எய்தல், ஆனால்
ஹனுமாரின் அருளால் அது சௌபத்ராவை குறி வைக்காதது

இறுதியில் பிரபு ஸ்ரீராமர் தன் குருவான மகரிஷி விச்வாமித்ரரின் சொற்படி சௌபத்ராவை நோக்கி அம்பு எய்தார். ஹனுமாரின் அருளால் சௌபத்ராவை சுற்றி ஸ்ரீராம நாம பாதுகாப்பு கவசம் ஒன்று உருவாகியிருந்தது. அதனால் அம்பு சௌபத்ராவை ஒன்றும் செய்யவில்லை. ஸ்ரீராமர் பல அம்புகளை எய்தார். ஆனால் ஒன்று கூட சௌபத்ராவைத் தொடவில்லை. ஸ்ரீராமரின் அம்புகள் குறி தப்புவதைப் பார்த்த மகரிஷி விச்வாமித்ரருக்கு பெரும் ஆச்சர்யம். இதன் காரணத்தை உள்நோக்கி பார்க்கும்போது பகவானுக்கு தன்னுடைய சபதத்தைக் காட்டிலும் தன் பக்தனுக்கு அளித்த வாக்குறுதியே பெரிது என்பதை உணர்ந்தார். அதனால் ஸ்ரீராமரிடம் தன் சபதத்தை திரும்பப் பெறுமாறு கூறினார். ஹனுமார், ராஜா சௌபத்ராவிடம் மகரிஷி விச்வாமித்ரரை வணங்கி மன்னிப்பு கோருமாறு கூறினார். அதன்படி சௌபத்ராவும் மன்னிப்பு வேண்டினார். மகரிஷியும் மன்னித்தார்.

8.     ‘ராமரைக் காட்டிலும் ராமநாமம் சிறந்தது’ என்ற
பழமொழியை நிரூபித்த அதி உன்னத பக்தன் ஹனுமார்

இது போன்று ஹனுமார் பிரபு ஸ்ரீராமரை தர்மசங்கட நிலையிலிருந்து விடுவித்து அதே சமயத்தில் ராஜா சௌபத்ராவையும் காப்பாற்றினார். சபதத்தின் மீது வரம் பெற்ற வெற்றி இது. இந்த சம்பவத்திலிருந்து ஒரு பக்தன் ராமநாமத்தை தொடர்ந்து உச்சரிக்கும்போது ராமபாணமும் செயலற்றுப் போகும் என்பது தெளிவாகிறது. ‘ராமரைக் காட்டிலும் ராமநாமம் சிறந்தது’ என்ற பழமொழியின் உண்மையை அதி உன்னத பக்தரான ஹனுமார்  நிரூபித்துள்ளார்.

குமாரி மதுரா போஸ்லே, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (தகவல் : ‘ஜெய் ஹனுமான்’ டிவி நிகழ்ச்சி)

 

 

Leave a Comment