சதுர்த்தி வரலாறு
எந்த நாளன்று கணேசனின் அதிர்வலைகள் முதன் முதலாக பூமியில் வந்தனவோ, என்று கணேசனின் பிறப்பு ஏற்பட்டதோ அந்த நாளையே மாசி சுத்த சதுர்த்தி என்கிறோம். அன்றிலிருந்து தான் கணபதிக்கும், சதுர்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டது.
கணேச ஜயந்தி
மாசி சுத்த சதுர்த்தியே கணேச ஜயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த திதியின் சிறப்பு என்னவென்றால் மற்ற தினங்களைக் காட்டிலும் அன்று கணேசரின் தத்துவம் ஆயிரம் மடங்கு அதிக செயல்பாட்டில் உள்ளது.
சந்திர தரிசனத்தை தவிர்ப்பதன் காரணம்
அன்று சந்திரனைக் பார்க்கக் கூடாது ; சந்திரன் மனநிலையைக் குறிப்பவன்; ஆனால் ஸாதகன் மனதை ஒரு லயத்திற்குக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியவன்; இந்த நிலையைப் பெறுவதே ஸாதகனுக்கு உத்தமமான விஷயம்.
கிரகங்கள் வரிசையில் சந்திரன் சஞ்சலமானவன். அவன் உருவம் கூடியும், குறைந்தும் இருக்கும் தன்மை உள்ளது. அதைப் போல உடலில் மனம் சஞ்சலமானது. மனதைத் தாண்டிச் சென்றாலே துரீய நிலை கிடைக்கிறது. விழித்திருத்தல், கனவு காணுதல், ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டதே துரீயநிலை. சங்கடஹர சதுர்த்தியன்று நாள் முழுவதும் ஸாதனை செய்து இரவு சந்திர தரிசனம் செய்வது என்பது ஒரு விதத்தில் ஸாதனை காலம் முடிந்து மனம் மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்புதல் ஆகும்.
இதன் தொடர்பாக புராணங்களில் ஒரு கதை பின்வருமாறு உள்ளது. ஒரு நாள் சந்திரன் கணபதியைப் பார்த்து கேலி செய்தான். ‘கணபதி! உன்னுடையது பெரிய வயிறு, முறம் போல காது, பெரிய துதிக்கை, சின்னச் சின்ன கண்கள்!’ இதைக் கேட்டு கணபதி, சந்திரனுக்குச் சாபமளித்தார். இன்றிலிருந்து, உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள். தப்பிப் போய் பார்த்தால், அவர் மீது திருட்டுப்பழி (வீண் அபவாதம்) வரும். இதற்குப் பிறகு சந்திரனை யாரும் அருகில் நெருங்குவதில்லை. அதனால் சந்திரனால் எங்கும் நடமாட முடியவில்லை. வாழ்க்கை மிகவும் கடினமாயிற்று. சந்திரன் தவமிருந்து, கணபதியை மகிழ்வித்து, சாப விமோசனம் வேண்டினான். கணபதி யோசித்தார். சாபத்தைப் பூரணமாக திரும்பப் பெற முடியாது. சாபத்தின் உணர்வும் இருக்க வேண்டும். சாப பரிகாரமும் அளிக்க வேண்டும். சாபமும் விலகாமல், பரிகாரமும் இருக்குமாறு செய்யத் தீர்மானம் செய்தார். கணபதி சொன்னார் ‘கணேச சதுர்த்தி/விநாயக சதுர்த்தியன்று உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள். ஆனால் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று, உன்னைப் பார்க்காமல் யாரும் உணவு உண்ண மாட்டார்கள்.’ இவ்வாறு சாப பரிகாரம் பற்றி சந்திரனிடம் தெரிவித்தார் கணேசர்.