பரசுராமர், பகவான் விஷ்ணுவின் 6-வது அவதாரம். ப்ருகு வம்சத்தின் ஜமதக்னி முனிவரும் ரேணுகாதேவியும் அவரின் பெற்றோர். ரேணுகாதேவி ஒரு க்ஷத்ரியனின் புதல்வி. இருந்தாலும் ஜமதக்னி பிராம்மணர் என்பதால் பரசுராமரும் பிராம்மணர் ஆவார். நர்மதா நதி தீரத்தில் ஜமதக்னி முனிவரின் ஆச்ரமம் அமைந்திருந்தது. மகாபாரதப்படி த்ரேதா யுகம் மற்றும் த்வாபர யுகத்தின் சந்திக்காலத்தில் வரக்கூடிய பத்தொன்பதாவது த்ரேதா யுகத்தில் பரசுராமரின் அவதாரம் ஏற்பட்டது. ரேணு என்பது பூமித் துகள்களைக் குறிக்கிறது. ஆப தத்துவ ஸாதனையை அதாவது நீர் சம்பந்தப்பட்ட ஆன்மீக பயிற்சியை ரேணுகாதேவி செய்தார். அதனால் அவரால் ஈர மண் பானைகளில் தண்ணீரை நிரப்பி கொண்டு வர முடிந்தது. ஜமதக்னி முனிவர் தேஜ தத்துவ ஸாதனையை செய்தார். ஜமத் என்பது ஒரு வகை அக்னியைக் குறிக்கிறது. அது பூரண விருப்பத்தையும் கூட குறிக்கிறது.
1. பரசுராமரின் பணி
அ. அதர்ம க்ஷத்ரியர்களை வதம் செய்வது
பரசுராமர் எல்லா க்ஷத்ரியர்களையும் வதம் செய்யவில்லை. அதர்மமான தீய க்ஷத்ரியர்களையே வதம் செய்தார். கார்த்தவீரியன் ஜமதக்னி ஆஸ்ரமத்திலிருந்து காமதேனுவையும் அதன் கன்றையும் அபகரித்து சென்றான். பரசுராமர் இல்லாதபோது இது நடந்தது. திரும்பி வந்தவுடன் நடந்ததை அறிந்த பரசுராமர் கார்த்தவீரியனை வதம் செய்யப் போவதாக சூளுரை செய்தார். நர்மதா நதி தீரத்தில் நடந்த யுத்தத்தில் பரசுராமர் கார்த்தவீரியனை வதம் செய்தார். அதன் பிறகு தந்தையின் சொற்படி அவர் நியமங்களை அனுஷ்டிக்க யாத்திரை மேற்கொண்டார்.
பரசுராமர் சென்ற பிறகு கார்த்தவீரியனின் இறப்பிற்கு பழி வாங்குவதற்காக ஹைஹயன் ஜமதக்னி முனிவரின் தலையை வெட்டி வீழ்த்தினான். இச்செய்தி கேட்டு ஆச்ரமத்திற்கு ஓடோடி வந்தார் பரசுராமர். ஜமதக்னி முனிவரின் உடலில் 21 அம்பு காயங்கள் இருப்பதைப் பார்த்தார். பார்த்த பிறகு பூமியை 21 முறை சுற்றி வந்து எல்லா தீய க்ஷத்ரியர்களையும் ஹைஹயனையும் பிரம்மஹத்தி தோஷத்திற்காக தண்டித்து பூமியில் தீய சக்திகள் இல்லாமல் செய்வேன் என்று சூளுரை செய்தார். இந்த சூளுரைப்படி பரசுராமர் அதர்ம க்ஷத்ரியர்களை அழித்து பின்பு மகேந்திர மலைக்கு தவம் புரிய சென்றார். ஆனால் எப்போது தீய க்ஷத்ரியர்களின் கை ஓங்குகிறதோ அப்போது திரும்பி வந்து அவர்களை அழிப்பார். இவ்வாறு 21 முறை இப்பணியை செய்தார். சமந்த-பஞ்சகத்தில் அவர் தன் இறுதி யுத்தத்தை செய்தார். பிறகு க்ஷத்ரியர்களின் ரத்தம் தோய்ந்த தன் கோடரியைக் கழுவி அங்கேயே வைத்து விட்டார்.
ஆ. க்ஷாத்ரபால தேவதைகளின் (எல்லைத் தெய்வங்கள்)
கோவில்களை நிர்மாணித்தல்
பூமியை 21 முறை சுற்றி வரும்போது பரசுராமர் 108 சக்திபீடங்களை அதாவது எல்லை தெய்வங்களின் புண்ணிய ஸ்தானங்களை நிறுவினார். பரசுராமருக்கு முன்பும் இந்த ஸ்தானங்களைப் பற்றி மகான்களுக்கு தெரிந்திருந்தது; ஆனால் யாரும் அங்கு கோவில்களை அல்லது பீடங்களை நிறுவவில்லை.
2. பரசுராமரின் குண இயல்புகள்
அ. க்ஷாத்ரதேஜ் மற்றும் பிராம்மதேஜஸின் உத்தம சங்கமம்
அக்ரத: சதுரோ வேதா: ப்ருஷ்டத: ஸசரம் தனு: |
இதம் பிராம்மணம் இதம் க்ஷாத்ரம் சாபாதபி சராதபி ||
அர்த்தம் : நான்கு வேதங்களிலும் கரை கண்ட பரசுராமர் வீரத்தின் அடையாளமாக தன் முதுகில் வில் அம்புகளையும் சுமந்தார். இதன் மூலம் அவரிடம் பிராம்மதேஜ் மற்றும் க்ஷாத்ரதேஜ் ஒருங்கே இருந்தது என்பது தெரிய வருகிறது. அவரை எதிர்ப்பவர்களை தன் சாபத்தாலோ அல்லது அம்பினாலோ மாய்த்து விடுவார்.
ஆ. தன்னுடைய தேஜசை ராமரிடம் ஒப்படைத்தல்
தசரத புத்திரரான ஸ்ரீராமனின் பராக்கிரமத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பரசுராமர், அவரின் வீரத்தை பரீட்சை செய்ய நினைத்தார். அதனால் ஸ்ரீராமரின் பாதையை வழிமறித்தார். பரசுராமர் தன் வில்லை ராமனிடம் கொடுத்து அதில் நாணேற்றுமாறு உத்தரவிட்டார். ஸ்ரீராமர் அவ்வாறே செய்து அந்த அம்பின் இலக்கு என்ன என்று வினவியபோது பரசுராமர் கஷ்யப பூமியில் உள்ள தனது செயல்களே அதன் இலக்கு என்று பதிலுரைத்தார். பிறகு தன் வில்லை ராமருக்கு அன்பளிப்பாக அளிப்பதன் மூலம் தனது தேஜசை ஸ்ரீராமனிடம் ஒப்படைத்தார்.
இ. சிறந்த வில்வித்தை குரு
தன் ஆயுதங்களை கீழே வைத்த பின் பரசுராமர் க்ஷத்ரியர்களிடம் தனக்குள்ள வெறுப்பை விடுத்து எந்த பாகுபாடும் இன்றி பிராம்மணர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்கும் வில்வித்தை கற்றுத் தர ஆரம்பித்தார். மகாபாரதத்தில் வருகின்ற உன்னத வில்லாளிகளான பீஷ்மர், துரோணர் ஆகியோர் அவரின் சிஷ்யர்களே.
ஈ. தாராள மனம்
க்ஷத்ரியர்களை அழிக்கும் அவரின் பணியால் முழு உலகமே அவரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன் பலனாக அவருக்கு அஸ்வமேத யாகம் செய்யும் தகுதியும் ஏற்பட்டது. அதனால் அவர் எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி, உலகை மும்முறை வலம் வந்து அந்த யக்ஞத்தை நடத்தினார். அவரின் யக்ஞவேதி தங்கத்தினால் ஆனது. அது பத்து வன்வ (இரு கைகளையும் நீட்டினால் கிடைக்கும் அளவு) நீளமும் ஒன்பது வன்வ உயரமும் கொண்டதாக இருந்தது. அந்த யக்ஞத்தை நடத்தித் தந்த கஷ்யப மகரிஷிக்கு அந்த நிலப்பரப்பு முழுவதையும் தானமாக அளித்தார்.
உ. புது நிலத்தை நிர்மாணித்தல்
பரசுராமர் முழு நிலப்பரப்பையும் தானமாக அளித்ததால் அவர் அங்கு இருக்க முடியாது என்பதை கஷ்யப மகரிஷி உணர்ந்தார். அதனால் அவர் பரசுராமரிடம் ‘நீ எனக்களித்த பூமி எனக்கு சொந்தமாகி விட்டது. அதில் வசிப்பதற்கு உனக்கு உரிமை இல்லை’ என்று கூறி விட்டார். அதன் பிறகு சமுத்திரத்தை உள்வாங்க செய்து தனக்கென்று நிலத்தை நிர்மாணித்துக் கொண்டார் பரசுராமர். வைதரனா முதல் கன்யாகுமரி வரையுள்ள பிரதேசம் இவ்வாறு பரசுராம க்ஷேத்திரம் ஆகிவிட்டது.
ஊ. ஸப்த சிரஞ்ஜீவி
அஸ்வத்தாமா பலிர்வ்யாசோ ஹனுமான்ஷ்ச விபீஷண: |
க்ருப: பரசுராமஷ்ச ஸப்தைதே சிரஞ்ஜீவின: ||
அர்த்தம் : அஸ்வத்தாமன், பலி, மகரிஷி வியாசர், ஹனுமான், விபீஷணன், கிருபாச்சாரியார் மற்றும் பரசுராமர் ஆகியோர் ஸப்த சிரஞ்ஜீவிகள் ஆவர்.
அவர், ஏழு சிரஞ்ஜீவிகளுள் ஒருவர்; இருந்தாலும் மன்வந்திரம் முடிவடையும்போது அவரும் தன் உடலை உகுப்பார் என்று மகாபாரதம் கூறுகிறது.
தகவல் : ஸநாதனின் புனித நூல் ‘தெய்வங்களின் வழிபாடு : பகுதி 2 – ஸ்ரீ விஷ்ணு’