ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 7

ஆபத்துக் காலத்தில் எவ்வாறு உயிர்வாழ்வது என்பது குறித்த வழிகாட்டுதலை ஸனாதன் ஸன்ஸ்தா வழங்குகிறது!

பாகம் – 6 படிக்க இங்கு க்ளிக் செய்யவும் ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 6

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்கள் மட்டுமே
ஆபத்துக் காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு வழி காட்டும்
ஒரே தொலைநோக்கு பார்வை கொண்டவர் !

இக்கட்டுரைத் தொடரின் முந்தைய கட்டுரைகளில் ஒரு குடும்பத்தினரின் தினசரி தேவைகள் பற்றிய தகவல்களைப் பற்றிப் பார்த்தோம். இக்கட்டுரையில் தினசரி உபயோகிக்கும் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

1. வரக்கூடிய ஆபத்துக் காலத்தை எதிர்கொள்ளத்
தேவையான ஸ்தூல ஏற்பாடுகள்

1 அ. தினசரி உபயோகிக்கும் பொருட்களுக்கான
மாற்றுப் பொருட்களைப் பற்றித் திட்டமிடல்

ஆபத்துக் காலத்தில் தினசரி உபயோகிக்கும் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படலாம். தட்டுப்பாடு ஏற்பட்டால் அவற்றின் விலை மிகவும் உயரலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். இத்தகைய சூழ்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்றுப் பொருட்கள் உபயோகமாக இருக்கும். இப்போதிலிருந்தே அவற்றைப் பழகிக் கொள்ள முயற்சிக்கலாம்.

1 அ 1. சந்தையில் கிடைக்கும் பற்பொடி மற்றும் பற்பசைக்கான மாற்று ஏற்பாடுகள்

வேப்ப மர குச்சிகள்

அ. வேப்ப மரத்தின் இளம் குச்சிகளை 15 செ.மி. நீளம் இருக்கும்படியாக வெட்டி எடுத்து அவற்றை பல்துலக்க உபயோகிக்கலாம்.

ஆ. பற்களை உப்பு உபயோகித்தும் தேய்க்கலாம்.’

– திரு. அவினாஷ் ஜாதவ், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (21.5.2020)

இ. பத்து பங்கு சிவப்பு மண் மற்றும் ஒரு பங்கு உப்பு (கல்லுப்பு சிறந்தது, அல்லது பொடி உப்பு உபயோகிக்கலாம்) கலந்து அதை பற்பொடியாக பயன்படுத்தலாம்.

ஈ. மாங்காய், கொய்யா, வேம்பு, எருக்கஞ் செடி, அரச மரம், கருங்காலி, புங்கை போன்ற மரங்களின் காய்ந்த இலைகள், சருகுகள் ஆகியவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேகரித்து எரிக்கவும். இதன் சாம்பலை துணியில் சலித்தெடுத்து பற்பொடியாக பயன்படுத்தலாம்.’

– பூஜ்ய வைத்திய வினய் பாவே, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (10.12.2019)

உ. கருவேல மரத்தின் சருகுகளை எரித்து அதன் சாம்பலையும் பற்பொடியாக பயன்படுத்தலாம்.

ஊ. பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பற்பொடி

பசுஞ்சாண பற்பொடி

புதிய வேப்பிலைகளையும் நெல் உமியையும் பசுஞ்சாணத்துடன் கலந்து மெல்லிய வறட்டிகளாக தட்டவும். வேப்பிலைகள், ஈ போன்ற பூச்சிகளை விரட்டுகிறது. நெல் உமி, வறட்டிகள் விரைவில் எரிய உதவுகிறது. வறட்டிகளை மெலிதாக தட்டினால் விரைவில் காயும். இது போன்று பசுஞ்சாண வறட்டிகளை நடுவில் சிறிது இடம் விட்டு குவியலாக அடுக்கவும். அந்த இடத்தில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைக்கவும். வறட்டிகளில் நெருப்பு பற்றிக் கொண்டவுடன் அந்த தீபத்தை அகற்றி விடலாம். முழு குவியலும் எரிந்த பின் நெருப்பு சிறிதாக புகைய ஆரம்பிக்கும்போது ஒரு பெரிய பாத்திரத்தை அதன் மேல் கவிழ்த்து மூடவும். அதன் விளிம்பை முழுவதும் மண்ணால் மெழுகி மூடவும். (சில இடங்களில் வறட்டிகள் ஒரு குழிக்குள் வைத்து எரிக்கப்படுகின்றன. நெருப்பு புகைந்து கொண்டிருக்கும்போது அதன் மேல் ஒரு உலோக தட்டு வைத்து மண்ணால் மெழுகி மூடப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நெருப்பு சிறிது சிறிதாக அணைந்து போகிறது. அடுத்த நாள் பாத்திரத்திற்கு அடியில் உள்ள சாம்பலை எடுத்து மெல்லிய துணியில் சலித்து வைத்துக் கொள்ளவும்.

பத்து சிறிய கப் பசுஞ்சாண வறட்டி பொடியுடன் ஐந்து டீஸ்பூன் கல்லுப்பு மற்றும் அரை டீஸ்பூன் படிக்காரம் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பற்பொடியாக பயன்படுத்தலாம்.

–  திரு. அவினாஷ் ஜாதவ் (21.5.2020)

எ. ‘நெல் உமியை குவித்து நெருப்பு மூட்டவும். அது உடனே தீப்பிடித்துக் கொள்ளும். அது முழுவதும் எரிந்த பின்னர் சாம்பலாக மாறும். ஆறிய பின்னர் அந்த சாம்பலை மெல்லிய துணியில் சலித்துக் கொள்ளவும். (மேற்புறம் கருப்பாக இருக்கும். சாம்பலாக மாறாது. அதனால் இப்பகுதியை கவனத்துடன் நீக்கிவிட்டு நல்ல சாம்பலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.) அதை பற்பொடியாக பயன்படுத்தலாம்.’

– பூஜ்ய வைத்திய வினய் பாவே (10.12.2019)

ஏ. ‘தேங்காய் ஓடு அல்லது பாதாம் ஓடுகளை எரித்து அவற்றின் கரியை நைசாக பொடியாக்கி கொள்ளவும். இதை மெல்லிய துணியில் சலித்து பற்பொடியாக பயன்படுத்தலாம்.’

– திரு. அவினாஷ் ஜாதவ் (21.5.2020)

மேற்கூறப்பட்ட எல்லா பற்பொடிகளும், காற்றுப் புகாத டப்பாக்களில் வைக்கப்பட்டால் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

1 அ 2. சவரம் செய்ய உதவும் நுரை, க்ரீம் ஆகியவற்றிற்கான மாற்றுப் பொருட்கள்

அ. கன்னத்தில் வெதுவெதுப்பான வெந்நீரை தெளித்தோ அல்லது வெந்நீர் குளியலுக்கு பின்போ சவரம் செய்து கொள்ளலாம்.

ஆ. தாடியில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணை தேய்த்து சவரம் செய்து கொள்ளலாம்.

மேற்கூறிய உபாயங்களை செய்யும்போது வழுவழுப்பாக சவரம் செய்ய முடியாது. ஏதாவது கஷ்டத்தை உணர்ந்தால் இவ்வழியைப் பின்பற்ற வேண்டாம்.’

– பூஜ்ய வைத்திய வினய் பாவே (10.12.2019)

1 அ 3. உடல் சோப்பிற்கான மாற்று வழி

முல்தானி மண்

குளியல் சோப் கிடைக்காவிட்டால், கடலைமாவு, பச்சைப் பயறு மாவு, முல்தானி மண், எறும்புப் புற்றின் மண் அல்லது எந்த ஒரு சுத்தமான சலிக்கப்பட்ட கருப்பு மண் அல்லது சிவப்பு மண் ஆகியவற்றை உபயோகிக்கலாம். இவற்றை சிறிது தண்ணீரில் ஊற வைத்து பின் ஸ்நானப் பொடி போல் உபயோகப்படுத்தலாம். (சில சமயங்களில் எறும்புப் புற்றில் வாஸ்து தேவதை இருக்கலாம். அதனால் அருகிலுள்ளவர்களை விசாரித்து அந்த எறும்புப் புற்றில் எந்த வாஸ்து தேவதையும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஒரு நீண்ட குச்சியால் எறும்புப் புற்றை உடைத்து அதிலிருந்து மண் கட்டிகளை சேர்த்து வைத்துக் கொள்ளலாம். பிறகு இந்த மண் கட்டிகளை பொடி செய்து சலித்து உபயோகப்படுத்தலாம்.)

இதில் எதுவுமே கிடைக்கவில்லை என்றால் நம் உடலை கைகளால் அழுத்தத் தேய்த்து குளித்தால் கூட போதுமானது.’

– வைத்திய மேகராஜ் பராட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (13.3.2019)

1 அ 4. தலைக்குளியல் ஷாம்பூவிற்கான மாற்று வழி

1 அ 4 அ. சீயக்காய்ப் பொடியை வீட்டிலேயே தயாரித்தல்

இரு பங்கு நெல்லிக்காய்ப் பொடி மற்றும் ஒரு பங்கு சீயக்காய்ப் பொடி, ஒரு பங்கு புங்கங்கொட்டை பொடி ஆகியவற்றை நன்கு கலக்கவும். இதிலிருந்து 2 முதல் 4 டீஸ்பூன் அளவு பொடியை இரும்பு கடாய்யில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். (இரும்பு பாத்திரம் இல்லையென்றால் எவர்சில்வர் பாத்திரத்தில் ஊற வைத்து அதில் நான்கைந்து இரும்பு ஆணிகளைப் போட்டு வைக்கவும். மறுதினம் ஞாபகமாக இரும்பு ஆணிகளை அகற்றி விட்டு பொடியை உபயோகப்படுத்தலாம். – தொகுத்தவர்). நெல்லிக்காய்ப் பொடி மற்றும் இரும்பால் கருப்பு நிறம் ஏற்படுகிறது. தலைமுடியை கருப்பாக்க இது உதவுகிறது. குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு இக்கலவையை தலையில் தேய்த்து ஊறவும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீர்ல தலையை அலசிக் குளிக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை இவ்வாறு குளிப்பதால் தலைமுடி கருப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.’

– வைத்திய (திருமதி) காயத்திரி சந்தேஷ் சாவன், குர்லா, மும்பை. (20.6.2020)

மேற்கூறிய கலவையில் இரு பங்கு வெந்தயம், ஒரு பங்கு கோரைக்கிழங்கு பொடி, ஒரு பங்கு ஜடாமஞ்சி, அதோடு காய்ந்த செம்பருத்தி பூக்கள், வல்லாரைக் கீறிப் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை காற்றுப் புகாத பாட்டிலில் அடைத்து வைத்தால் ஒரு வருடம் கூட நன்றாக இருக்கும். இவற்றை பொடியாக்காமல் அப்படியே வெயிலில் காய வைத்து பாட்டிலில் அடைத்தால் 3 வருடம் கூட நன்றாக இருக்கும். காற்றிலுள்ள ஈரப்பசையால் இவை மிருதுவாக ஆனால் மீண்டும் வெயிலில் காய வைக்கலாம்.’

– வைத்திய மேகராஜ் பராட்கர் (20.6.2020)

1 அ 4 ஆ. புங்கங்கொட்டை

புங்கங்கொட்டைகளை காய வைத்து சேமிக்கலாம். ஐந்தாறு கொட்டைகளை வெந்நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலை குளிக்கும்போது இந்த தண்ணீரை தலையில் விட்டுக் குளிக்கலாம்.

1 அ 5. துணி துவைக்கும் சோப்பிற்கான மாற்று வழி

1 அ 5 அ. புங்கங்கொட்டை

புங்கங்கொட்டை பொடி

புங்கங்கொட்டைகளை நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். சில சமயங்களில் காயும்போது அவை உடைந்து விதைகள் தானாகவே வெளியே வரும். விதைகள் வரவில்லை என்றால் சிறு உரலில் நசுக்கி விதைகளை வெளியே எடுத்து விடலாம். புங்கங்கொட்டை தோலை உரலில் நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதை சோப்பாக உபயோகிக்கும்போது அது நனையும் அளவு தண்ணீர் விட வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் அப்படியே 20 – 25 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு அதை ஈர துணிகளில் சோப் போல நன்கு தேய்த்து துணிகளைத் துவைக்க பயன்படுத்தலாம்.

1 அ 5 ஆ. கருப்பு மண்

இந்த மண்ணை உபயோகித்து துணிகளைத் துவைக்கும்போது அதை ஈர துணிகளின் மீது சோப்பை போல உபயோகப்படுத்தி பிறகு தண்ணீரில் அலசி எடுக்க வேண்டும். (சிவப்பு மண்ணை உபயோகிக்கக் கூடாது, ஏனென்றால் அது கறைகளை ஏற்படுத்தும்.)’

– திரு. அவினாஷ் ஜாதவ் (மே 2020)

1 அ 5 இ. வாழை இலைத் தண்டின் சாம்பல்

‘வாழை இலைத் தண்டை காய வைக்கவும். பிறகு அதை எரித்து சாம்பலாக்கவும். இந்த சாம்பலில் உப்பு இருப்பதால் அதை ஈர துணிகளின் மீது சோப் போல தேய்த்து துவைக்கவும்.’

(தகவல் நூல் : ‘வியாபரோபயோகி வனஸ்பதிவர்ணன் (பகுதி 1)’, ஆசிரியர் – திரு. கணேஷ் ரங்கநாத் திகே, 1993)

1 அ 6. பாத்திரம் துலக்கும் சோப், மற்றும் பொடிக்கான மாற்று வழி

1 அ 6 அ. விறகடுப்பின் சாம்பல்

விறகடுப்பின் சாம்பலை பாத்திரங்கள் துலக்க உபயோகப்படுத்தலாம்.

1 அ 6 ஆ. மண்

சாம்பல் இல்லையென்றால் பாத்திரங்களை ஏதாவது ஒரு மண்ணைக் (உதா. சிவப்பு மண், கருப்பு மண்) கொண்டு துலக்கலாம். மண்ணில் கற்கள் இருந்தால் பாத்திரங்களில் கீறல்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க மண்ணை சலித்தெடுத்து உபயோகிக்கவும்.

1 அ 7. கை கழுவும் சோப்பிற்கான மாற்று வழி

1 அ 7 அ. விறகடுப்பின் சாம்பல்

விறகடுப்பின் சாம்பலை உபயோகித்து கைகளைக் கழுவிக் கொள்ளலாம்.

1 அ 7 ஆ. மண்

எந்த வகை மண்ணைக் கொண்டும் கைகளைக் கழுவிக் கொள்ளலாம்.’

– திரு. அவினாஷ் ஜாதவ் (மே 2020)

1 அ 8. தீப்பெட்டி அல்லது லைட்டருக்கான மாற்று வழி

1 அ 8 அ. கான்வேக்ஸ் லென்ஸ் அல்லது பூதக் கண்ணாடியை சூரிய ஒளியில் காட்டி நெருப்பை உண்டாக்க முடியும்

கான்வேக்ஸ் லென்ஸ்

சூரிய ஒளி இருக்கும்போது கான்வேக்ஸ் லென்ஸ் உபயோகித்து நெருப்பை பற்ற வைக்கலாம். ஆய்வகப் பொருட்கள் எங்கு கிடைக்குமோ அங்கு இந்த லென்ஸ்-ம் கிடைக்கும். சூரிய ஒளி இந்த கான்வேக்ஸ் லென்ஸ் மூலமாக ஒரு பருத்தி துணி, தேங்காய் மட்டை, உலர்ந்த புல், காய்ந்த சருகுகள் அல்லது துண்டு காகிதம் மீது 1 – 5 நிமிடங்களுக்கு குவியும்போது அதில் தீப்பற்றிக் கொள்கிறது.

1 அ 8 ஆ. விறகடுப்பின் தீயை அணைக்காமல் இருப்பது

1.       ‘சமைத்த பின்னர் அடுப்பில் சிறிது சாம்பலைத் தூவவும். அதனால் நெருப்பு கனன்று கொண்டே இருக்கும். 3 – 4 மணி நேரத்திற்கு பின்னர் அதில் சிறு காகித துண்டுகள் அல்லது காய்ந்த சருகுகளைப் போட்டு ஊதுகுழல் மூலம் ஊதினால் மறுபடியும் நெருப்புப் பற்றிக் கொள்ளும்.’

– திரு. அவினாஷ் ஜாதவ் (மே 2020)

2.       ‘2 அடுப்புகளை உருவாக்கவும். ஒவ்வொரு அடுப்பின் கீழ் ஒரு சிறிய பள்ளத்தைத் தோண்டவும். ஒரு அடுப்பின் கீழுள்ள பள்ளத்தில் புதிய பசுஞ்சாண உருண்டையை வைக்கவும். அதன் மீது சாம்பலைப் போட்டு மூடி பிறகு எப்போதும் போல் அடுப்பு பற்ற வைக்கவும். பசுஞ்சாணத்தில் உள்ள ஈரப்பசையை மண் உறிஞ்சி விடுவதால் பசுஞ்சாண உருண்டை புகைய ஆரம்பிக்கிறது. மறுநாள் அடுத்த அடுப்பைப் பயன்படுத்தவும். புகையும் பசுஞ்சாண உருண்டையை அந்தக் குழியில் வைத்து நாள் முழுவதும் அடுப்பைப் பயன்படுத்தலாம். மூன்றாவது நாள் முதல் அடுப்பிலுள்ள பசுஞ்சாண உருண்டையை இடுக்கி மூலம் எடுக்கவும். அது இன்னும் புகைந்து கொண்டிருக்கும். அதன் மீது காகிதம் அல்லது காய்ந்த சருகுகளை இட்டு ஊதுகுழல் மூலம் ஊதி நெருப்பைப் பற்ற வைக்கலாம். இது போன்று இரு அடுப்புகளையும் மாறி மாறி பயன்படுத்தலாம்.’

–  திரு. விவேக் நாஃப்டே, ஸனாதன் ஆச்ரமம், தேவத், பன்வேல், மகாராஷ்ட்ரா. (மே 2020)

1 அ 8 இ. கூழாங்கற்களை உபயோகித்து நெருப்பைப் பற்ற வைத்தல்

கூழாங்கற்கள்

‘எலுமிச்சை அளவுள்ள இரு கூழாங்கற்களை ஒன்றோடு ஒன்று உராய வைத்து அதிலிருந்து கிளம்பும் தீப்பொறியை பஞ்சில் பற்றிக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.’

– திரு. கொண்டிபா ஜாதவ், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (7.1.2019)

1 அ 9. உப்புக்கான மாற்று வழி

‘வாழையிலையின் தண்டில் உப்பு உள்ளது. மேற்கு வங்காளத்திலுள்ள பல ஏழை மக்கள் இந்த சாம்பலையே உப்பாக பயன்படுத்துகின்றனர்.’

–  தகவல் : ‘வியாபாரோபயோகி வனஸ்பதிவர்ணன் (பகுதி 1), ஆசிரியர் – திரு. கணேஷ் ரங்கநாத் திகே, 1993)

1 அ 10. தட்டுகள் மற்றும் கிண்ணங்களுக்கான மாற்று வழி

வாழையிலைத் தட்டு

வாழையிலை அல்லது மந்தார இலைத் தட்டுகளை உணவு உண்ண உபயோகிக்கலாம். ஆல மர இலைகளால் செய்யப்பட்ட தட்டுகள் மற்றும் கிண்ணங்களையும் கூட பயன்படுத்தலாம்.

1 அ 11. மார்க்கெட்டில் கிடைக்கும் கொசுவர்த்தி சுருள் மற்றும் திரவத்திற்கான மாற்று வழி

1 அ 11 அ. வீட்டிலேயே கொசுவர்த்தி தூபம் செய்யலாம்

‘ஒரு கிலோ புதிய பசுஞ்சாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி பட்டை இலைகள், இரு கைப்பிடி வேப்பிலை, அரை கைப்பிடி புதினா இலைகள், அரை கைப்பிடி துளசி இலைகள் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதில் இரு டீஸ்பூன் வேப்பிலை எண்ணெய், அரை ஸ்பூன் கற்பூரப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை தூப வடிவில் செய்து வெயிலில் காய வைக்கவும். எப்போது தேவையோ அப்போது ஒரு தூபத்தை ஏற்றவும். இதன் புகை கொசுக்களை விரட்டி அடிக்கும்.

1 அ 11 ஆ. மற்ற வழிகள்

1.  அறையில் உள்ள கொசுக்களை விரட்ட

அ. கொசு விரட்டும் மெஷினில் ரசாயன காகித துண்டிற்கு பதிலாக ஒரு பல் பூண்டை வைத்து மெஷினை ஆன் செய்யவும். ஒரு பல் பூண்டை ஓரிரு நாட்களுக்கு உபயோகப்படுத்தலாம்.

ஆ. வேப்பிலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சரிசமமாகக் கலந்து அதை ஊற்றி அந்த அறையில் ஒரு விளக்கை ஏற்றி வைக்கவும்.

இ. தணலின் மேல் வேப்பிலைகளைப் போடவும். காய்ந்த இலைகளாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து அவற்றை தணலில் போடவும். அப்போது உடனடியாக எரிந்து போகாது.

ஈ. காய்ந்த ஆரஞ்சு தோல்களை தணலில் இட்டு புகை போடவும்.

2. வெளியே தெரியும் உடலின் பகுதிகள் மேல் சம அளவு வேப்பிலை எண்ணெய் மற்றும் புதினா எண்ணெய் கலந்து தடவிக் கொள்ளவும். இதனால் கொசுக்கள் அருகே அண்டாது.

3. வீட்டுத் தோட்டத்தில் சாமந்திப் பூச்செடியை நடவும். அதனாலும் கொசுக்களின் எண்ணிக்கை குறையும்.’

– திரு. அவினாஷ் ஜாதவ் (16.6.2020)

பாகம் – 8 படிக்க இங்கு க்ளிக் செய்யவும்ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 8

தகவல் : ஸனாதன் வெளியிடவிருக்கும் நூல் தொகுப்பு – ‘ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’

(Copyright : Sanatan Bharatiya Sanskruti Sanstha) 

 

 

 

 

Leave a Comment