ஆரம்பத்தில் பிரார்த்தனை பக்திபூர்வமாக இல்லாமல் வெறும் வார்த்தைகளாக சொல்லப்படுகிறது. பிறகு பிரார்த்தனை தரத்தில் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பிரார்த்தனையின் நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அ. முதல் நிலை
இந்த நிலையில் பிரார்த்தனை செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.மேலும் நமது பிரார்த்தனையில் நோக்கமும் குறிப்பிட்ட வார்த்தைகளும் இருக்கும். மேலும் இந்த நிலையில் நான் பிரார்த்தனை செய்கிறேன் என்ற உணர்வு மிகுந்திருக்கும்.
ஆ. இரண்டாவது நிலை
நாம் இவ்வாறு பிரார்த்தனை செய்யும் பழக்கம் நன்கு கைவரப்பட்டு நேரப்படி தவறாமல் பிரார்த்தனை செய்தால் நமக்கு ஒருபிடிப்பும், நம்பிக்கையும், மன உறுதியும் ஏற்படும். அதனால் முன்பு போல் பிரார்த்தனை ஒரு குறிப்பிட்ட, திட்டவட்டமான வார்த்தைகளாக இல்லாமல், உண்மையுடனும், உணர்வு பூர்வமாகவும் இருக்கும். நாம் இறைவனுடனே, குருவுடனே வாதிடுவது போன்ற பாவனையில் பிரார்த்தனை அமைந்திருக்கும்.
இ. மூன்றாவது நிலை
மேலும் இந்த நிலையில் பிரார்த்தனைக்காக வார்த்தைகளைத் தேட வேண்டிய அவசியமில்லாமல் அவை தாமாகவே வந்து விழும்.
ஈ.நான்காவது நிலை
காலப்போக்கில் நாம ஜபம் இயல்பாக பிரார்த்தனையுடன் இணைந்து விடுகிறது. குருவையோ அல்லது இறைவனையோ பிரார்த்தனை செய்வதற்கு வார்த்தைகளும் மனதிலிருந்து தோன்ற ஆரம்பித்துவிடுகின்றன. இறைவன் நமக்குள்ளேயே எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறார்.
உ. ஐந்தாவது நிலை
இந்த நிலையில் பிரார்த்தனை வார்த்தைகளால் அமையாமல், நன்றி உணர்வு மிகுந்து அமையும். மேலும் பிரார்த்தனை, நன்றி தெரிவிப்பது ஆகிய எல்லாம் தனித்தனி அல்ல ஒன்று தான் என்ற ஆன்மீக அனுபவம் ஏற்படுகிறது.
ஊ. ஆறாம் நிலை
நமது பிரார்த்தனையின் தன்மை உயர உயர நம்மால் நன்றியோடு இணைந்த சரணாகதியினால் ஏற்படும் ஆன்மீக உணர்ச்சியை அதிகரிக்கச் செய்ய இயலும். “இறைவா நீ தான் எல்லாவற்றையும் நிகழ்த்துகிறீர்; எனவே எல்லாம் தங்கள் விருப்பப்படியே நடக்கட்டும் “, என்று பிரார்த்தனை செய்ய இயலும். இவ்வாறு நம் பிரார்த்தனையின் தன்மை உயர உயர “நமது என்று ஒன்றும் இல்லை. இவ்வுலகில் உயிருள்ள உயிரில்லாத எல்லாப் பொருள்களும் கடவுளின் கட்டுப்பாட்டில் உள்ளது “ என உணர்வோம்; இயல்பாகவே நமது நன்றியுணர்வும், சரணாகதி பாவமும் அதிகரிக்கும். அப்பொழுது தான் ஒரு ஜீவன் இறைவனின் புனிதபாதங்களைச் சென்று அடைகிறது.
எ. ஏழாம் நிலை
நான் பிரார்த்தனை செய்கிறேன் என்பதை மறந்து விடுவது பிரார்த்தனையின் உச்ச கட்ட நிலை. ஏனென்றால் பிரார்த்தனையை செய்பவன், செய்விப்பவன் மற்றும் பிரார்த்தனை என்ற மூன்றும் ஒருங்கிணைந்து விடுகிறது.