பக்தர்களின் ஸமர்ப்பண உணர்விடம், பக்தியிடம் ஆகர்ஷிக்கப்படும் பக்தவத்ஸல ஸ்ரீகிருஷ்ணன்!

1.    ஸ்ரீகிருஷ்ணனின் சிறப்பு

(11 ஆகஸ்ட் 2020 அன்று ‘ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி’. அது நிமித்தமாக…)

‘மகாபாரத யுத்தத்தின்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு யுத்தம் சம்பந்தமாக எதுவும் கூறாமல் அவனுக்கு வாழ்க்கை லட்சியத்தை தெரிந்து கொள்ள பகவத்கீதையை உபதேசித்தார்.’

2. ஸமர்ப்பண பக்தியின் மேன்மை

2 அ. ராதை போன்றவர்களின்
ஸமர்ப்பண பக்திக்கு கட்டுப்படும் ஸ்ரீகிருஷ்ணன்

பராத்பர குரு பாண்டே மஹராஜ்

பகவானிடம் வரும் எல்லா பக்தர்களும் அவரிடம் ஏதாவது வேண்டுகிறார்கள். அதற்கு கிருஷ்ணன் ஒருமுறை, ‘என்னிடம் உண்மையான அன்பு செலுத்துபவர் யார்?’, என்று தெரிந்து கொள்ள ஒரு நாடகம் ஆடினார். அவர் “என் வயிறு மிகவும் வலிக்கிறது”, எனக் கூறி “என்னுடைய பக்தனின் பாததூளியை என் வயிற்றில் தடவினால்தான் என் வயிற்றுவலி சரியாகும்” என்றார். ‘பகவானின் வயிற்றில் நம் கால் பட்டால் பெரும் பாவம் உண்டாகும்’, என்ற எண்ணத்தில் யாரும் முன்வரவில்லை; ஆனால் ராதைக்கு கிருஷ்ணனிடம் அளவு கடந்த அன்பு உண்டு. அவள், ‘எனக்கு பாவம் ஏற்பட்டாலும் பரவாயில்லை; கிருஷ்ணனின் வயிற்றுவலி நீங்க வேண்டும்’ என்று அதை செய்வதற்கு சித்தமானாள். இதிலிருந்து ராதை பகவானின் பிரிய பக்தை என்பதும் ராதை போன்ற பக்திக்கு பகவான் கட்டுப்படுவான் என்பதும் தெரிகிறது. பகவான், ராதை போன்ற பக்தர்கள் கிடைக்க மாட்டார்களா என தாபப்படுகிறான்.

(இன்னொரு விதமாகவும் சொல்வது உண்டு. ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணனுக்கு வயிற்றுவலி அதிகமானதால் ‘என்னுடைய பக்தனின் பாததூளியை வயிற்றில் தடவினால் என் வயிற்றுவலி நீங்கும். ஆனால் அவ்வாறு தரும் பக்தனின் பிராணன் உடனே போய்விடும்’ என்று கூறினார். பிராணன் போய்விடுமே என்ற பயத்தினால் யாரும் தர முன்வரவில்லை. ராதையும் கோபிகைகளும் மட்டுமே ஆனந்தமாக தருவதற்கு முன்வந்தார்கள்.)

2 ஆ. ஸ்ரீகிருஷ்ணனிடம் அபார பக்தியுணர்வு
கொண்ட ருக்மிணி மற்றும் துளசியின் மகத்துவம்

இன்னொரு உதாரணம் கிருஷ்ணனின் சுவர்ண துளசி சம்பந்தமானது! சத்யபாமா கிருஷ்ணனின் துலாபாரம் செய்வதற்கு முடிவெடுத்தாள். அவள் தன்னிடம் உள்ள அனைத்து பொன் ஆபரணங்களையும் தங்கக் காசுகளையும் தராசின் ஒரு தட்டில் வைத்தாள்; ஆனால் எடை சம நிலைக்கு வரவில்லை. இறுதியில் ருக்மிணி பக்தியுணர்வுடன் ஒரு துளசிதளத்தை அந்த பொன் ஆபரணங்களின் மீது வைத்தாள். அந்தக் கணமே எடை சம நிலையில் நின்றது. இதிலிருந்து ருக்மிணியின் பக்தியும் துளசியின் மகத்துவமும் தெரிகிறது. அதனால்தான் பகவான் தன் அனன்ய பக்தர்களை தன் கண்டத்தில் (கழுத்தில்) கௌஸ்துபமணியாக அணிகிறான்.

‘கண்டமே’ வைகரி வாணி மூலமாக நம் ஆன்மீக உணர்வை வெளிப்படுத்துகிறது. கண்டமே இந்த உடல் ரூபமான கோவிலில் பகவானின் தரிசனத்தைப் பெற்றுத் தரும் நுழைவாயில்.

3. மயிலிறகை தலையில் சூடியுள்ள பகவான்

3 அ. மயிலிறகின் மகத்துவம்

ஸ்ரீகிருஷ்ணன் தலையில் மயிலிறகை அணிந்துள்ளான். அது அந்த மயிலிறகிற்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும். இயற்கையான பொன்னிற ஒளியாலும், இந்த ஒளிக்கதிர்களின் ஊற்றாலும், மேலும் அழகு மிளிரும் மயிலிறகில் உள்ள நீல வர்ண கண்களை ஒத்த வடிவத்தாலும், அன்பு செறிந்த தாபத்தை வெளிப்படுத்துகிறது.

மயிலும் ஸ்ரீகிருஷ்ணனைப் போன்றே பால பிரம்மச்சாரி ஆகும். அது எப்பொழுது ஆனந்த மிகுதியால் நடனமாடுகிறதோ அப்பொழுது பெண் மயில் பெரும் ஆசையுடன் அதைப் பார்க்கிறது மற்றும் அதன் கண்களில் இருந்து பெருகும் ஆனந்தக் கண்ணீரைப் பருகுகிறது.

3 ஆ. ஞானத்தின் சின்னமாக விளங்கும் மயில்
மற்றும் ஸ்ரீ ஸரஸ்வதிதேவியின் கருணைப்பார்வை

மயில், ஸ்ரீ ஸரஸ்வதிதேவியின் வாஹனம். ஸ்ரீ ஸரஸ்வதிதேவி, ஞானத்தின் அதிதேவதை. அதனால் மயிலும் ஞானத்தின் சின்னமாகும். எவரிடம் ஸ்ரீ ஸரஸ்வதிதேவி மகிழ்ச்சி அடைகிறாளோ அவருக்கு அவளின் மூல ஸ்வரூபமான ஆத்மஞானத்தின் தரிசனம் கிடைக்கிறது. அப்பொழுது அவரின் வாக்கிலிருந்து அமுததாரை பெருகுகிறது. அனைவரையும் திருப்திப்படுத்துகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த மயிலிறகை பகவான் தன் சிரத்தில் அணிந்துள்ளார்.

3 இ. மயிலிறகு தரும் படிப்பினை

‘பணத்தின் பூஜையை செய்யாமல் ஞானத்தின் பூஜையை செய்ய வேண்டும்! எந்த பிரம்மச்சாரி தவவலிமையால் தன்னுள்ளிருக்கும் ஆத்மஞானத்தை வெளிப்படுத்தி பகவானின் சேவையாக அந்த ஞான கங்கையை வீட்டிற்கு வீடு சென்றடையும்படி செய்கிறாரோ மற்றும் அவர்களையும் இந்த ஸன்மார்க்கத்தின் பக்கம் திசை திருப்புகிறாரோ அவரும் பூஜிக்கத் தக்கவர்! அவரை ‘அதிதி’ அல்லது ‘ஸாதகர்’ எனக் கூற வேண்டும். இதுவே மயிலிறகு நமக்குத் தரும் படிப்பினை. இதனால் மனிதர் பயத்தை வென்று பலமுள்ளவர் ஆகிறார். இதற்கு மாறாக யார் வெறும் பணத்தின் பின் அலைகின்றாரோ அவர் பலவீனமாகி ஆசைகளால் அலைகழிக்கப்பட்டு அல்லல்படுகிறார்.’

4. கிருஷ்ணனின் விபூதி ரூபத்துடன் எப்பொழுதும்
தொடர்பில் இருப்பதால் அவனின் ஸகுண ரூபத்தை
அனுபவிக்கும் கோகுல கோபிகைகள்!

கோபிகைகள் அந்த பகவானை தங்களின் இதயத்திற்கு அழைத்து வந்து அமரச் செய்துள்ளனர். மதுராவிற்கு சென்ற பின்னர், கிருஷ்ணன், தன்னைப் பிரிந்து வாடித் தவிக்கும் கோபிகைகளை சாந்தப்படுத்த உத்தவரை அவர்களிடம் அனுப்பி வைத்தான் மற்றும் கூறினான், ‘நீ உனக்குத் தெரிந்த அந்த வெளிப்படாத நிர்குண பரமேச்வர ஞானத்தை அந்த கோபிகைகளிடம் கூறு மற்றும் அவர்களுக்கு தைரியத்தைக் கொடு.’ அதன்படி உத்தவர் கோபிகைகளை சந்தித்து அவர்களிடம் நிர்குண நிராகார பரமேச்வரனைப் பற்றி விவரித்தவுடன் கோபிகைகள்,  ‘இவருக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா’ என நினைத்தனர். கோபிகைகள் உத்தவரின் அதிரகஸ்யமான ஞானமய உபதேசத்தை லட்சியம் செய்யவில்லை. உத்தவர் இதுபற்றி ராதையிடம் கேட்டபோது அவள் சொன்னாள், “உத்தவா, உன் கிருஷ்ணன் மதுராவுக்கு ராஜா; ஆனால் எங்களின் கிருஷ்ணன் எங்களுடைய இதயத்தில் ஸகுண ரூபமாக வீற்றிருக்கிறான். அவன் எங்களுடன் பேசுகிறான். நாங்களும் அவனுடன் விளையாடுகிறோம்.” உத்தவருக்கு இதில் நம்பிக்கையில்லை; ஆனால் எப்பொழுது அவர் கிருஷ்ணன் ஸகுண ரூபத்தில் ராதையுடன் அமர்ந்து நன்றாக வம்பளப்பதைப் பார்த்தாரோ அப்பொழுது ஆச்சரியப்பட்டு ராதையின் பாதங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அவருக்கு ராதையின் பக்தியின் அதி உச்ச நிலை அப்போதுதான் புரிந்தது. அவர் கிருஷ்ணனிடம் சென்று கூறினார், “கிருஷ்ணா, நீ என் அஹம்பாவத்தை முழுவதுமாக அழித்து விட்டாய். நீ என்னை பிருந்தாவனத்தில் ஒரு செடி, கொடியாக பிறக்கச் செய்வாய். அதன் மூலம் உன்னத பக்தியுடைய கோபிகைகளின் சரணகமலங்கள் என் மீது பட்டு நான் உத்தாரணம் அடைவேன்.”

கோபிகைகளின் ஒவ்வொரு அணுவிலும் கிருஷ்ணனே நிறைந்துள்ளான். அவர்களின் கண்களிலும் அவனே உள்ளான். அதனால் எங்கெங்கு அவர்கள் பார்க்கின்றனரோ அங்கெங்கிலும் அவர்களுக்கு கிருஷ்ணனே தெரிகிறான்.

5. பக்தர்களை மோகிக்க வைக்கும்
பிரபுவின் புல்லாங்குழலோசை

5 அ. கோபிகைகளின் உடலுணர்வை மறக்கச்
செய்யும் ஸ்ரீகிருஷ்ணனின் புல்லாங்குழலோசை

கோபிகைகள் ஸ்ரீகிருஷ்ணனுடன் ஒருங்கிணைந்து விட்டனர். அவர்களின் கனவு, நனவுகளில், ஆழ்ந்த தியானத்தில் கிருஷ்ணனே தெரிகிறான். அதனால் அவர்கள் எப்பொழுதும் ஆன்மீக உணர்வில் ஆழ்ந்திருந்தனர். சம்சார வாழ்வின் அனைத்து காரியங்களை செய்யும்போதும் அவர்களின் மனம் என்னவோ பிரபுவிடமே இருந்தது. ஒருமுறை கிருஷ்ணன் சரத்ருது பௌர்ணமி அன்று இரவு ராசலீலையாக வனத்திற்கு சென்று புல்லாங்குழலை இசைக்க ஆரம்பித்தான். அந்த நாதத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே கோபிகைகள் தங்கள் வசம் இழந்தார்கள்; உடலுணர்வை மறந்து பித்துப் பிடித்தாற்போல் கிருஷ்ணனிடம் ஓடி வந்தனர். கிருஷ்ணனைப் பார்த்த பின்னரே அவர்கள் அமைதியானார்கள். கிருஷ்ணன் அவர்களிடம் கூறினான், “கோபிகைகளே, நீங்கள் சம்சாரிகள்; திருமணமானவர்கள். நீங்கள் உங்கள் சம்சாரத்தை விட்டு இப்படி ஓடி வரக்கூடாது. நீங்கள் உங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள்!” அப்பொழுது புல்லாங்குழலிசை மயக்கத்தில் இருந்த அவர்கள் கூறினார்கள், “நாங்கள் எப்பொழுதும் சம்சாரத்தில் இல்லை, இப்பொழுதும் இல்லை. நாங்கள் உன்னிடம் எங்களை ஒப்படைத்து விட்டோம். இப்பொழுது சமூகம் எங்களை எவ்வளவு நிந்தித்தாலும் பரவாயில்லை, திரும்பிச் செல்ல மாட்டோம்.” அவர்களின் இந்த திட உறுதியைக் கண்டு கிருஷ்ணனுக்கு மிகவும் ஆனந்தமாகி விட்டது. அதன் பிறகு அவன் அவர்களுடன் ராசலீலை செய்தான் மற்றும் புல்லாங்குழலிசையால் அவர்களை சமாதி நிலைக்கு அழைத்துச் சென்றான்.

கிருஷ்ணனின் இந்த குழலோசையால் கோபிகைகள் மட்டுமன்று பசுக்களும் அங்கு ஆகர்ஷிக்கப்பட்டு வந்தன; யமுனா நதியும் ஓடாமல் அங்கேயே நின்றது. இதிலிருந்து அந்தக் குழலோசையின் ஆற்றல் வெளிப்படுகிறது.

5 ஆ. குழலோசை என்பது ‘அநாஹத நாதம்’ என்பதால் ஆனந்தம் அளிக்கிறது

அத்தகைய நாதம் பிரபுவின் அநாஹத குழலோசை ஆகும். இந்த நாதம் ‘ஆகாத்’ இல்லாமல் அதாவது தாக்குதல் இல்லாமல் உண்டாவதால் இது அநாஹத நாதமாகிறது. அது பக்தர்களை மோகத்தில் ஆழ்த்துகிறது. அவர்களைத் தங்களின் உடலுணர்வு இழக்கும்படி செய்கிறது. எல்லாவற்றையும் மறந்த ஒரு ஆனந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது. இந்த குழலோசை இன்றும் தொடர்கிறது. அது ஒவ்வொருவரின் இதயத்திலும் அநாஹத ரூபத்தில் ஓம்கார ஸ்வரூபத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

புல்லாங்குழலே கிருஷ்ணனின் பிரிய பக்தன் ஆகும். அதனுள் வெற்றிடமே உள்ளது, அதாவது அஹம்பாவமே இல்லாமல் உள்ளது. ஆனால் அதனின் சைதன்ய ப்ரவாஹத்தால் அதனிடமிருந்து ‘ரஸோ வை ஸ:’, அதாவது பக்திரசமான பகவானின் மதுர ரசம் எங்கும் பரவுகிறது. குழலிசையால் உடல் புல்லரிக்கிறது. மனம் எண்ணங்களற்ற நிலையை எய்துகிறது. யாரால் இந்த இசையை கேட்க முடியுமோ அவர்கள் பாக்கியவான்கள். யார் பகவானுடன் இரண்டறக் கலந்தனரோ அவர்களுக்கு இந்த நாதம் கேட்கும். இந்த பாக்கியம் மகான்களுக்கு கிடைத்துள்ளது. அதனால் அவர்களும் பாக்கியவான்களே.

5 இ. குழலோசை புரியும் ஸ்ரீகிருஷ்ணனின் வர்ணனை

ஸ்ரீகிருஷ்ணனின் (ஸங்கர்ஷண சக்தியால்) முரளி நாதத்திலிருந்து வெளிப்பட்ட காயத்ரி மந்திரத்தின் மூலம் பிரம்மாவுக்கு ஞானம் கிடைத்தது. ‘பிரம்மஸம்ஹிதா, ஸ்லோகம் 39’–ல் ஸ்ரீகிருஷ்ணனின் வர்ணனை இது போன்று உள்ளது. ‘யார் குழலை வாசிக்கிறாரோ, யாரின் விழிகள் கமலதளத்தை ஒத்திருக்கிறதோ, யாருடைய கேசத்தில் மயிலிறகு அழகு கூட்டுகிறதோ, யாருடைய திருவிக்ரஹம் (தேஹம்) புதிய மேகத்தைப் போன்று நீலகாந்தி நிரம்பி மிளிர்கிறதோ, யார் கோடி கோடி மன்மதரைப் பழிக்கும் அதிரூப சௌந்தர்யம் உடையவரோ, அப்பேற்பட்ட ஆதிபுருஷனான கோவிந்தனை நாங்கள் பஜிக்கிறோம்.’

6. ஸ்ரீகிருஷ்ணன் செய்த
பசுக்களின் ரக்ஷணம் மற்றும் பராமரிப்பு

ஸ்ரீகிருஷ்ணன் சிறு வயதிலிருந்தே பசுக்களை பாதுகாத்து பராமரித்தான். பசுக்களிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய் மற்றும் நெய் ஆகியவை விற்பனைக்கு செல்லாமல் வீட்டு குழந்தைகளுக்கு கிடைக்குமாறு செய்து அவர்களின் பலோபாசனை நடந்து ஸாதனையும் நடக்குமாறு செய்தான். அதனால் கோகுலத்திலிருந்து பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை மதுராவிற்கு விற்கச் செல்லும் பெண்களை தடுத்தான். ஸ்ரீகிருஷ்ணன் பசுக்களை அன்புடன் பராமரித்தான். அவனின் மதுர முரளி நாதத்தால் ஈர்க்கப்பட்டு பசுக்கள் அவனிடம் தாங்களே ஓடி வந்தன. பசுக்களை மேய்ப்பவனாக வேடமிட்டு பசுக்களின் சேவையை செய்த அந்த கோபாலன், ‘வாழ்வில் பசுக்களின் மகத்துவம் எவ்வளவு’ என்பதை செயல்படுத்திக் காட்டினான். இதை உணர்ந்தே ஹிந்துக்கள் பசுக்களை பக்தியுடன் பூஜை செய்கின்றனர். தீபாவளி காலத்தில் ‘கோவத்ஸபாரஸ்’ அன்று பசுக்களுக்கு விசேஷமான பூஜைகள் செய்யப்படுகின்றன.

–  (பராத்பர குரு) பாண்டே மஹராஜ் (14.1.2019)

 

 

 

 

 

Leave a Comment