‘ஆசை’ எனும் ஆளுமை குறையைக் களைய செய்ய வேண்டிய முயற்சிகள்!

1.   ஆசை என்றால் என்ன?

‘அறுமின் அறுமின், ஆசை அறுமின்;
ஈசனோடாயினும் ஆசை அறுமின்!’

அர்த்தம் : ஆசை அல்லது ‘வேண்டும்’ என்பதற்கு மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை, ஒரு பொருள் வேண்டும் எனத் தோன்றுதல். இரண்டாவது நிலையில் அப்பொருள் எப்பொழுதும் நம்முடனேயே இருக்க வேண்டும் எனத் தோன்றுதல். மூன்றாவது நிலையில் அப்பொருள் இல்லாமல் எதுவும் சிந்திக்க முடியாது போதல். ஆசை என்றால்  ‘அபிமானம்’, ‘என்னுடையது’ என்றும் அர்த்தம். இத்தகைய ஆசை மனிதனின் எதிரியாகும்.

செயலளவில் முயற்சி : மனதை சிந்திக்க விடாமல் செய்யும், பகவானிடமிருந்து தூர விலகச் செய்யும் எந்த ஒரு இச்சையும் ‘ஆசை’ ஆகும். இதை கவனத்தில் கொண்டு நம்மிடம் என்னென்ன ஆசைகள் உள்ளன என்பதை அட்டவணையில் பதிய வைக்க வேண்டும். அப்பொழுதுதான் ‘நம்முடைய எந்த ஆசை எந்த நிலையில் உள்ளது?’ என்பது தெரிய வரும்.

2.   ஆசையின் ஸ்வரூபம்

ஆசை என்பது தினமும் புதுப்புது விளையாட்டுகளை நமக்குக்  காண்பிக்கிறது. உண்மையில் விளையாட்டு பழையது தான்; ஆனால் நம் ஆசை மட்டும் புதியது.

வாழ்வில் தினமும் விதவிதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. ‘என்னிஷ்டப்படி நடக்க வேண்டும்’ என்பதே நம் எதிர்பார்ப்பாக உள்ளது. அவ்வாறு நடக்காதபோது தீவிர எதிர்மறை எண்ணம் ஏற்பட்டு ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு ஏதாவது தவறுகள் அல்லது நிகழ்வுகள் நம் மூலமாக நடக்கின்றன. ‘எல்லாமே இறைவனின் இச்சைப்படியே நடக்கின்றன. இதை உணராததால்  ஆசைகள் நம் மூலம் புதுப்புது விளையாட்டுகளை விளையாடுகின்றன.’ என்ற மகானின் கூற்றை உணர்ந்து உண்மையுடன் முயற்சித்தால் நம்மிடமுள்ள ஆசைகளை அகற்றுவதற்கு குருவருளும் திருவருளும் நமக்குத் துணை புரியும்.

3.   ‘பகவானின் மீதுள்ள ஆசை’யே ஆசையாகாது !

‘பகவானின் மீதுள்ள ஆசை’யே ஆசை என்ற தளையாகாது. எப்படி கோதுமையைப் புடைத்து எடுத்து அதிலுள்ள ஸத்தை மாவாக எடுக்கிறார்களோ, அப்படியே உலக விஷயங்களின் மீதுள்ள ஆசைகள் முழுவதுமாக அகலும்போது எது மிஞ்சுகிறதோ அதுவே ‘பகவானின் மீதுள்ள ஆசை’ ஆகும்.

‘இறைவனை அடைய ஆசை’ என்பது இறைவனை அடைவதிலுள்ள தீவிர ஆர்வத்தைக் குறிக்கிறது. நமக்கு கஷ்டங்களைக் கொடுப்பதன் மூலம் இறைவன் நம்முடைய பிராரப்த கர்மாவைக் குறைத்து நம்மிடம் ஆன்மீக ஆர்வம் ஏற்பட காரணமாக உள்ளார். உலக விஷயங்கள் மாயையுடன் சம்பந்தப்பட்டவை. உண்மையான ஆனந்தத்தை ஸாதனை செய்வதன் மூலமே பெற முடியும். ஸாதனை செய்வதற்குரிய லட்சியத்தை உறுதி செய்து அதற்கான முயற்சியையும் ஆர்வத்தையும் அதிகப்படுத்துவதே ஆசைகளைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.

4.   ஆசைக்கும் தேஹபுத்திக்கும் உள்ள சம்பந்தம் !

எப்பொழுது ஆகாயத்திலிருந்து ஹிமாலயம் மீது பனி விழுகிறதோ அப்பொழுது அது மிகவும் மென்மையாக மிருதுவாக உள்ளது; ஆனால் அது விழுந்த பின் சிறிது காலத்திற்குள் கல்லைப் போன்று கடினமாகிறது. அதேபோல் ஆசையும் சூட்சுமமானது, மாறும் தன்மையது. ஆனால் நாம் அதை தேஹபுத்தியுடன் உறுதியாக பிணைத்து விடுகிறோம். பிறகு அதை அழிப்பது மிகக் கடினமாகிறது.

5.   பூர்த்தியடையாத ஆசைகளால் சமாதானம் கிடைப்பதில்லை !

‘மனிதன் திரும்பத் திரும்ப காரியங்களை செய்தும் ஏன் சலிப்படைவதில்லை? இதன் காரணம் என்னவென்றால் ஒன்று அக்காரியம் மிகவும் இன்பகரமானதாக இருக்கலாம் அல்லது மனதிற்கு பூரண திருப்தி ஏற்படாமல் இருக்கலாம். இவ்விரு காரணங்களில் இரண்டாவதே அதிகம் நடக்கிறது. எந்த இச்சை அல்லது ஆசை பூர்த்தி அடையவில்லையோ அது பின்னர் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையை சார்ந்திருக்கிறது. இக்காரணத்தால் உடனே மனதிற்கு சமாதானம் கிடைப்பதில்லை.

6.   ஆசைகளின் பரிணாமத்தின் தீவிரமும்,
உடனடி உபாயம் தேடுவதன் அவசியமும் !

பிரம்மசைதன்ய கோந்தவ்லேகர் மகாராஜ் அவர்களின் சரித்திர நூலில் ஆசைகளால் ஏற்படும் பரிணாமம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆசைகளை கட்டுப்படுத்துவதன் அவசியமும் அதற்குரிய உபாயத்தைத் தேடும் அவசியமும் கவனத்திற்கு வருகிறது.

அ. ‘ஆசை என்பது நெருப்பைப் போன்றது. எந்த நெருப்பு அரிசியை பக்குவமாக வேக வைக்கின்றதோ அதே நெருப்பை வீட்டில் வைத்தால் வீடு பற்றி எரிந்து போகிறது. அதேபோல் ஆசையை பகவானின் மீது வைத்தால் அது மனிதனை ஆனந்தமயமாக்குகிறது; ஆனால் உலக விஷயங்களின் மீது வைத்தால் துக்கத்தில் ஆழ்த்துகிறது.

ஆ. ஆசை என்பது செல்ல வளர்ப்பு நாயைப் போன்றது. அதை ‘ஷூ, ஷூ’ என சொல்வதால் தூர விலகுவது இல்லை. ‘நல்ல ஆசைகள் மட்டும் இருக்கட்டுமே’ என்று சொன்னால், அதன் கூடவே தீய ஆசைகளும் சேர்ந்தே வருகின்றன. தீய ஆசைகள் நல்ல ஆசைகளை அழிக்கும் சக்தி பெற்றவை; ஏனென்றால் நாம் தீய ஆசைகளின் பக்கமே சாய்கிறோம்.

இ. பரமாத்மா எவ்வாறு சிரஞ்சீவியோ அவ்வாறே ஆசைகளும் சிரஞ்சீவிகளே. நம் ஆசைகள் என்றும் புத்துணர்வுடன் உள்ளன.

ஈ. நம் மனம் ஆசைகளுக்கு அடிமைப்பட்டு தாற்காலிக சுகங்களை நாடி செல்வதால் அடி வாங்கி காயப்பட்டு திரும்பி வருகிறது.

உ. ஆசைகளால் சித்தத்திற்கு அமைதி ஏற்படுவதில்லை என்பது தெரிந்தாலும் ஆசைகளின் பிடியிலிருந்து விடுபட முடிவதில்லை, இறுதி மூச்சு வரை அவை தொடர்கின்றன.

ஊ. காலம் நம்மை இதிலேயே உழல வைக்கிறது, இறுதி வரை சுகம் பெறாமலேயே ஆயுளும் முடிவடைகிறது.

எ. ‘எனக்கு சலிப்பாக உள்ளது’ என்று நாம் கூறினாலும் ஆசைகள் நம்மை விடுவதில்லை.

ஏ. ஆசைகளால் காலை முதல் மாலை வரை, பின் தொடர்ந்து இரவு வரை எல்லா கர்மாக்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.

ஐ. செல்வந்தர்களின் கஷ்டங்கள் இறக்கும் வரை தீர்வதில்லை. ஏனென்றால் அவர்களின் ஆசைகளும் அதிகம்.

ஒ. வயதானோர் மற்றும் இளைஞர் ஆகிய யாரையும் ஆசை விட்டு வைப்பதில்லை.

ஓ. இறக்கும்போது நம் ஆசைகளும் நம்மோடு தொடர்ந்து வருகின்றன.

7. ஆசைகளை அழிக்க பிரம்ம சைதன்ய
கோந்தவ்லேகர் மகாராஜ் அவர்கள் கூறும் உபாயங்கள் !

அ. ‘ஆசை என்ற மரத்தை வெட்ட அதன் கிளைகளை (அதாவது வேண்டும், வேண்டாம் என்ற விருப்பு-வெறுப்புகளை) முதலில் வெட்ட வேண்டும். பிறகு மரத்தை வெட்டுவது சுலபம் : ‘பெரிய மரத்தை வெட்ட வேண்டுமென்றால் முதலில் அதன் மேல் கிளைகளைக் கழிக்க வேண்டும். பிறகு முக்கிய பாகத்தை வெட்ட வேண்டும். அதேபோல் ஆசை என்ற மரத்தை வெட்ட முதலில் அதன் கிளைகளான விருப்பு-வெறுப்புகளை வெட்ட வேண்டும்.

ஆ. நமக்கு என்ன வேண்டுமோ அதை பகவானிடமே கேட்க வேண்டும் : நமக்கு என்ன வேண்டுமோ அதை பகவானிடமே கேட்க வேண்டும். அவர் அதைக் கொடுக்கவில்லையென்றால் அதுவும் நம்முடைய நலனுக்காகவே என்ற நல்புத்தி ஏற்படும். அதன் மூலம் ஆசைகள் அற்றுப் போகும்.

இ. ஆசைகளை அறுப்பதற்கு கீழ்க்கண்ட ஆன்மீக உபாயங்களை செய்யலாம்.

  • மானசீகமாக திருஷ்டி கழிக்கலாம்.
  • மனதில் ஏற்படும் எதிர்மறையான, தீய ஆசைகளை ஒரு காகிதத்தில் எழுதி அதில் கற்பூரத்தை வைத்து நெருப்பிலிடலாம்.
  • ஸ்ரீகிருஷ்ணனிடம் சரணாகதி செய்து மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். ‘ஹே ஸ்ரீகிருஷ்ணா, என் ஸாதனைக்கு அவசியமானதை எனக்கு அளிப்பாய். ஸாதனைக்கு தேவையில்லாதவற்றை நான் கேட்டாலும் தராதே.’
  • ‘எல்லாமே ஈச்வர இச்சைப்படியே நடக்கின்றன’ என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும்.

ஈ. ‘வேண்டும், வேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருக்கக் கூடாது. இதன் மூலம் ஆசைகள் குறையும்.’

உ. வீட்டில் ஒரு விருந்தினரைப் போல் நடந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் ஆசைகள் குறையும்.

ஊ. நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுவே கிடைக்கும் : இதில் ‘வேண்டும், வேண்டாம்’ என்பதை அதாவது ஆசைகளை விட்டொழித்தால் அதன் மூலம் ஏற்படும் சுக-துக்கங்களும் இல்லாமல் போகிறது. ஆனந்தம் மட்டுமே எஞ்சுகிறது.

எ. பிராரப்த கர்மாவை அனுபவித்து கழிப்பதற்குதான் இந்த மனிதப் பிறவி நமக்குக் கிடைத்துள்ளது :  பிராரப்த கர்மாவின்படி பகவான் நமக்கு மாயையிலுள்ள விஷயங்களைத் தருகிறார். இவ்வாறிருக்கும்போது ‘எனக்கு இது வேண்டும், இது வேண்டாம்’ என நினைப்பது ‘பகவானைக் காட்டிலும் எனக்கு அதிகம் தெரியும்’ என்பதாகிறது.

ஏ. ஆசைகளை அழிப்பதற்கு ‘பகவானின் இருப்பை கெட்டியாக பிடித்துக் கொள்வது’ சிறந்த உபாயமாகும் : ஆசையை மற்றவற்றில் வைக்காமல் பகவானின் காலடியில் சமர்ப்பணம் செய்தால் ஆசைகள் தானே அழியும். ஆசையின் மூல வார்த்தை ‘வாசனா’ ஆகும். வாச-னா என்றால் உலக விஷயங்களில் வாசம் இருக்கக் கூடாது என்பதாகும்.

ஐ. ‘பகவானின் இருப்பு என்றால் சைதன்ய சக்தி!  : அதில் ஆனந்தம் உள்ளது. அதுவே ஸத்யமானது, நிரந்தரமானது. அதனால் அங்கு ஆசைகள் இருக்க முடியாது’ என்பது பராத்பர குரு பாண்டே மகாராஜ் அவர்களின் கூற்று.

ஒ. நான் செய்கிறேன் என்ற உணர்வால் ஆசைகள் உண்டாகின்றன : செய்பவன், செய்விப்பவன் பகவானே என்ற புரிதல் ஏற்பட்டால் அங்கு நான் என்பது மறைந்து விடும். அதன் மூலம் அஹம் குறைவதால் சுய இச்சையிலிருந்து பர இச்சைக்கு, (அதாவது மற்றவர் சொல்படி நடத்தல்) செல்ல முடிகிறது. பின்பு இறுதி நிலையாக ஈச்வர இச்சைக்கு சென்ற பின் அங்கு ஆசைகள் தங்குவதில்லை. பராத்பர குரு பாண்டே மகாராஜ் அவர்கள் கூறுகிறார், ‘பகவானை அதாவது சைதன்யத்தை முன் நிறுத்தி காரியங்களை செய்ய வேண்டும். அவனே செய்பவன்-செய்விப்பவன். வெறும் சாக்ஷி உணர்வுடன் பார்க்க வேண்டும்.’

ஓ. எந்த விஷயம் நம் கைகளில் இல்லையோ அதைப் பற்றி ஆசைப்படுவது மூடத்தனம் : இதை நினைவில் கொள்ள வேண்டும். பகுத்து ஆயும் சிந்தனையாலும் நாமத்தாலும் ஆசைகளை எளிதாக வெற்றி கொள்ள முடியும். ‘நான் செய்கிறேன்’ என்ற கர்த்ருத்துவமும் செத்து மடியும்.

7. குருக்ருபாயோகத்தில் நாம ஸாதனை வலியுறுத்தப்படுகிறது!

நாமஜபம் நன்றாக நடப்பதற்கு மனதிற்குள் அந்த சிந்தனை ஆழப் பதிய வேண்டும். மனதிலுள்ள அனாவசிய எண்ணங்களால் எதிர்பார்ப்புகளால் நாமஜபம் ஆழப் பதிவது இல்லை. இதற்காக மனதிற்கு சுய ஆலோசனை வழங்க வேண்டும், ‘எப்பொழுதெல்லாம் என் மனதில் ……… என்ற ஆசை எழும்புகிறதோ அப்பொழுது நான் அதை உணர்ந்து ‘இதன் மூலம் நான் பகவானிடமிருந்து தூர விலகுகிறேன்’ என்பதை கவனத்தில் கொண்டு என் கவனத்தை நாமஜபத்திடம் செலுத்துவேன்.’

ஆன்மீக உணர்வுபூர்வமாக நாமஜபம் செய்ய ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்கள் கொடுத்துள்ள சில ஆலோசனைகள் – ‘பராத்பர குருவின் காலடியில் அமர்ந்து நாமஜபம் செய்கிறேன்’, ‘ஸ்ரீகிருஷ்ணனே என் இதயத்தில் அமர்ந்துள்ளான்’, ‘என்னைக் காட்டிலும் அவர்களே நாமஜபம் செய்கின்றனர்’. இவ்வாறான ஆன்மீக உணர்வைக் கொள்வதால் மனதிலுள்ள சிந்தனைகள் குறைந்து நாமஜபம் நன்றாக நடக்க ஆரம்பிக்கிறது.

பரமார்த்த பதத்தை அடைவது சுலபமன்று. அதற்கு குறைந்தபட்ச தீய ஆசைகளையும் முழுவதும் களைய வேண்டும். நல்ல ஆசைகளையும் நீதி மற்றும் தர்மநெறி வழுவாது அனுபவிக்க வேண்டும்.

8. ஆசைகளை நிர்மூலமாக்க மற்ற விஷயங்களிலிருந்து
ஊக்கம் பெற்று செய்ய வேண்டிய கடும் முயற்சிகள்!

அ. சுய ஆலோசனை வழங்குதல் : ஆன்மீகம் என்பது செயல்பாட்டு சாஸ்திரம் என்பதால் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ‘சுய ஆலோசனை யோகத்தில்’ ‘ஆசைகளை எவ்வாறு களைவது?’ என்பதைக் கற்றுத் தந்துள்ளார். மனதிற்கு தினமும் சுய ஆலோசனை வழங்குவதால் ஆசைகள் 100% குறையும் என்பதில் சந்தேகமில்லை. இதை நாம் அனுபவபூர்வமாக உணர முடியும்.

ஆ. வ்யஷ்டி ஸாதனையின் தன்மை : ‘தனிமனித ஆன்மீக முன்னேற்றத்திற்கான ஸாதனை என்பது சஹஜமாக, சுகமாக நடப்பது இல்லை. அதற்கு மனதிடம் கடுமையாக நடந்து கொண்டு முயற்சிக்க வேண்டும்.’ என்று ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்கள் வழிகாட்டியுள்ளார்.

இ. பிராயச்சித்தமும் தண்டனையும் : போதிய முயற்சி நடக்கவில்லை என்றாலோ சலுகையுடன் நடந்து கொண்டாலோ நமக்கு நாமே கடுமையாக நடந்து கொண்டு பிராயச்சித்தம் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்டனை வழங்கிக் கொள்ள வேண்டும்.

9. ஆசைகள் அழிவதால் கிடைக்கும் பேரின்பம் !

ஸ்ரீபிரம்மசைதன்ய கோந்தவ்லேகர் மகாராஜ், ஆசைகள் அழிந்த பின் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதைக் கூறுகிறார்.

  •  ‘யார் வாழும்போது ஆசைகளைக் களைந்து வாழ்கின்றாரோ அவரை சுக-துக்கங்கள் பாதிப்பதில்லை.
  • ஆசைகள் அழிந்த பின் புத்தி பகவானின் ஸ்வரூபத்துடன் ஒன்றி விடும்.
  • எங்கு ஆசைகள் இல்லையோ அங்கு பகவானின் அருள் உண்டு.’

10. நன்றி

பெரும் வியாதிகளுக்கு ஆயுள் முழுவதும் வைத்திய சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. வைத்தியர் கூறியபடி அவ்வப்பொழுது பரிசோதனைக்கு செல்ல வேண்டி உள்ளது. அவர்கள் கூறியபடி விலை உயர்ந்த, நீண்ட கால சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் நம்முடைய ‘ஆசை’ எனும் பெரும் நோயிலிருந்து நம்மை விடுவித்து வழிகாட்டும்  ஸ்ரீ பிரம்மசைதன்ய கோந்தவ்லேகர் மகாராஜ் மற்றும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே ஆகியோருக்கு கோடி கோடி நன்றி கலந்த நமஸ்காரம் செய்தாலும் போதாது.’

– பூஜ்ய (திரு) சிவாஜி வட்கர், ஸனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல். (15.6.2018)

 

 

 

Leave a Comment