1. உடல் நம்முடையது அன்று,
அது கடவுளுக்கே சொந்தம் என உணர்தல்
நம்மை உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்வதே நாம் செய்யும் மிகப் பெரிய தவறு. இரண்டாவது தவறு உடல் என்னுடையது என்ற உணர்வுடன் உடல் மீது அதிக பற்று வைத்தல். அதைக் காட்டிலும் பெரிய தவறு உடலின் தன்மைகளான ஆசைகள், உள்ளுணர்வுகளை வளர்ப்பது. இந்த குறைகள் அதிகரிக்கும்போது, அவற்றைக் கட்டுப்படுத்த முயலாமல் அவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகிறோம். சில சமயங்களில் நம் புத்தியையும் இழக்கிறோம். ஒரு மரத்தை வெட்ட வேண்டுமென்றால் முதலில் அதன் கிளைகளை வெட்டிய பின்னர் அம்மரத்தை வெட்ட வேண்டும். அதேபோல், நாம் ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டுமென்றால் நம் உடலின் ஆசைகளைக் களைய வேண்டும் (கிளைகளை வெட்டுவதைப் போன்று).
2. ‘கடவுள் என்னுடையவர்’ என்ற ஆன்மீக
உணர்வைக் காட்டிலும் ‘நான் கடவுளுக்கு சொந்தமானவன்’
என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ளுதல்
கடவுளிடம் ஆன்மீக உணர்வைக் கொள்ளும்போது ‘கடவுள் என்னுடையவர்’ என்று நினைப்பதற்கு பதிலாக ‘நான் கடவுளுக்கு சொந்தமானவன்’ என்று நினைக்க வேண்டும். இல்லையெனில் அதுவே அஹம்பாவத்திற்கு அடிகோலும். ‘நான் கடவுளுக்கு சொந்தமானவன்’ என்று எண்ணும்போதே உண்மையாக கடவுளுக்கு சேவை செய்ய முடியும்.
3. எல்லாமே கடவுளுக்கு சொந்தம்
என்ற விழிப்புணர்வைக் கொள்ளுதல்
கடவுளே இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர். அவர் சர்வ வல்லமை உள்ளவர், எங்கும் நிறைந்தவர், அனைத்தையும் உணர்ந்தவர். அவரின் அனுமதியில்லாமல் நம்மால் பேசவும் முடியாது, மௌனமாக இருக்கவும் முடியாது. நம்மால் உடலைத் துறக்கவும் முடியாது, உயிருடன் இருக்கவும் முடியாது. அவரின் அனுமதியில்லாமல் ஒரு இலையும் அசையாது. அதனால் உலகிலுள்ள அனைத்தும் (நம்மைச் சேர்ந்தது என்று நாம் நினைப்பது உட்பட) அவருக்கு மட்டுமே சொந்தமானது. இவ்வுணர்வு ஏற்படுமானால் நம் உடைமைகள் மீது பற்று வைக்க மாட்டோம்.
4. கடவுள் எங்கும் நீக்கமற
நிறைந்துள்ளார் என்ற உணர்வு ஏற்படுதல்
கடவுள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்ற உள்ளுணர்வுடன் நம் வாழ்க்கையை வாழ்ந்தால் அதுவே நம்மைப் பற்றிய எண்ணங்களைக் குறைத்து கடவுள் மீது ஆன்மீக உணர்வு வளர உதவும்.
5. கடவுளே எல்லாவற்றையும் நடத்துவிப்பவர்
என்ற உணர்வுடன் எவ்வாறு அஹம்பாவத்தைக் குறைப்பது
ஒருமுறை குருதேவர் ரானடே அவர்களுக்கு ஒரு அழைப்பிதழ் வந்தது . அதில் –‘நாங்கள் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹத்தை பௌர்ணமியிலிருந்து கொண்டாடப் போகிறோம். நீங்கள் அவசியம் வருகை புரிய வேண்டுகிறோம்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்த குருதேவர், ‘நாங்கள் கொண்டாடப் போகிறோம் என்றால் என்ன அர்த்தம்? இது நடக்கப் போகிறது என்றல்லவா சொல்ல வேண்டும்’ என்றார்.
ஒரு செயலை செய்து பின் கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதைக் காட்டிலும் செயலை செய்யும்போதே கடவுளின் நாமஜபத்தை உச்சரித்தல் சிறப்பு. அதனினும் சிறப்பு கடவுளே எல்லாக் காரியங்களையும் நடத்துவிக்கின்றார் என்ற உணர்வுடன் செய்தல்.
நாம் நம் கடமைகளை சரிவர செய்து வர வேண்டும். ஆனால் எது நடந்ததோ, எது நடக்கிறதோ, எது நடக்கப் போகிறதோ அவை அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானவை, எது நடந்தாலும் அது என் நன்மைக்கே என்ற உணர்வைக் கொள்ள வேண்டும். கடவுளே என் மூலமாக அனைத்தையும் நடத்துவிக்கிறார். நான் இந்த காரியத்தை செய்தேன் என்று கூறக் கூடாது. ஏனென்றால் அப்பொழுது ‘நான்’ என்பது கடவுளிடமிருந்து தனித்து நிற்கிறது. ஆன்மீகத்தைப் பற்றி பிறருக்கு எடுத்துரைக்கும்போது அவர் கேட்கவில்லை என்றோ, ஒத்துக் கொள்ளவில்லை என்றோ வருந்தக் கூடாது. அதோடு அவர்கள் கேட்டுக் கொண்டாலும் கர்வப்படக் கூடாது. எது நடந்தாலும் அது கடவுளின் இச்சைப்படியே நடக்கிறது என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ள வேண்டும்.
ஆன்மீக வாழ்வைப் போன்று உலக வாழ்விலும் கடவுளே எல்லாவற்றையும் நடத்துவிக்கிறார் என்ற உணர்வைக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ‘நான் கற்றேன்’ என்பதற்கு பதில் ‘கடவுள் எனக்குக் கற்றுத் தந்தார்’, ‘கடவுள் எனக்கு இப்பணியைத் தந்தார்’, ‘கடவுளே இந்த கல்யாணத்தை நிச்சயித்துள்ளார்’ போன்று நினைக்க வேண்டும். சாதாரண உடலியல் விஷயங்களான பசி, உறக்கம், தும்மல், கொட்டாவி போன்றவற்றைக் கூட கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நாம் எதைப் பற்றி கர்வம் கொள்ள முடியும்?
6. கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து
எவ்வாறு அஹம்பாவத்தை குறைப்பது
மகாபாரதத்தில் ஒரு சம்பவம் உள்ளது. சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றுப் போனார்கள். துரியோதனன், துச்சாதனனிடம், திரௌபதியை அரசவைக்கு இழுத்து வந்து அவளைத் துகிலுரிய ஆணையிட்டான். திரௌபதி ஸ்ரீகிருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். இறுதியாக ஸ்ரீகிருஷ்ணன் அவளுக்கு அபயமளித்து அவளின் சேலையை வளரச் செய்து அவளின் மானத்தைக் காத்தான். அப்பொழுது திரௌபதி ஸ்ரீகிருஷ்ணனிடம் கேட்டாள், ‘கிருஷ்ணா, நீ ஏன் இவ்வளவு தாமதம் செய்தாய்?’. அதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பதிலளித்தான், ‘நீ உன் சேலையை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் வரை உன் மானத்தை நீயே காத்துக் கொள்ள முடியும் என்று நம்பினாய். ஆனால், உன்னால் காத்துக் கொள்ள முடியவில்லை என்று உணர்ந்த பின் என்னிடம் பூரண சரணாகதி செய்தாய். உடனே நான் வந்தேன்’.
7. பிரார்த்தனை
‘பிரார்த்தனை’ என்ற வார்த்தை ‘பிரா’ மற்றும் ‘அர்த்த’ என்ற இரு வார்த்தைகளின் சேர்க்கையாகும். அதாவது தீவிரமாக வேண்டுவது என்று அர்த்தம். கடவுளிடம் பணிவோடு ஆழ்ந்து வேண்டுவதே பிரார்த்தனையாகும். (குருபிராப்தி அடைந்த ஒரு சிஷ்யர் குருவிடம் பிரார்த்தனை செய்வார்.) நாம் கடவுளிடம் வேண்டும்போது நம் இயலாமையைத் தெரியப்படுத்துகிறோம். அப்பொழுது கர்த்தா என்ற உணர்வு நம்மிடம் இருப்பதில்லை, கடவுளிடம் உள்ளது. குருவோ கடவுளோ ‘ததாஸ்து’ (அப்படியே ஆகுக) எனக் கூறுவதால் அக்காரியம் நடப்பதோடு கூட குரு, கடவுள் ஆகியோரால்தான் இக்காரியம் நடந்தது என்ற ஆன்மீக உணர்வு வளர்கிறது. அதனால் அக்காரியம் பற்றிய அஹம்பாவம் மனதில் எழுவதில்லை.
எந்த ஒரு காரியமும் நடப்பதற்கு வெறும் பிரார்த்தனை மட்டுமே போதாது. அதோடு கூட முயற்சியும் செய்ய வேண்டும். ‘பிரயத்னாந்தி பரமேஸ்வர்’ என்ற வாக்கின்படி முயற்சி செய்பவருக்கு கடவுள் துணை புரிகிறார். முயற்சி செய்யாதவருக்கு கடவுள் உதவி செய்வதில்லை.
8. நன்றி
கடவுளே இந்த பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தவர். நாம் இப்படைப்பின் ஒரு சிறு அம்சமே. அதனால் ‘நான்’ என்ற உணர்வு துளிர்விடும்போது அல்லது உலகைப் பற்றிய எண்ணங்கள் எழும்போது கடவுளின் இருப்பை அவரின் எண்ணற்ற ரூபங்களை மனதில் இருத்துவதே, இவ்வாறு நினைப்பதையும் அவனின் கருணையாக உணர்வதே நன்றியுணர்வாகும்.
‘பிரார்த்தனை’யின் இன்னொரு அர்த்தம் சரணாகதி ஆகும். நன்றி தெரிவிக்காமல் சரணாகதி பூரணத்துவம் பெறாது.
நன்றி தெரிவிப்பதால் குருவிடம் அல்லது கடவுளிடம் கர்த்ருத்வம் சமர்ப்பணம் செய்யப்படுகிறது; அதனால் அஹம்பாவம் குறைகிறது.
9. கடவுளின் அருளால் மட்டுமே ஆன்மீக
முன்னேற்றம் ஏற்படும் என்பதை உணர்தல்
ஒரு ஸாதகருக்கு தன் ஆன்மீக முன்னேற்றம் கடவுளின் அருளால் மட்டுமே நடக்கிறது, அவரே கர்த்தா என்ற உணர்வு எப்பொழுதும் இருக்குமானால் தன் ஆன்மீக பயிற்சி பற்றிய அஹம்பாவம் அவரின் மனதில் எழாது.
தகவல் : ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஆங்கில நூல் ‘Spiritual Practice for Destroying Ego’.