பாரதீய மக்களாகிய நாம் முன்பே ஒரு தீர்மானம் செய்து கொண்டு விட்டோம். அதாவது மேல்நாட்டினரின் வாழ்க்கை முறையே மிகவும் சிறந்தது என தீர்மானித்து அவர்களது நடை, உடை, பாவனை ஆகியவற்றைக் காப்பியடித்து பின்பற்றுவது மட்டுமல்லாது உணவுப் பழக்கத்திலும் அவர்களது பழக்கத்தையே கடைபிடிக்க ஆரம்பித்து விட்டோம். ‘Dessert’ என்பது அது மாதிரி வந்த ஒரு வழக்கமே. மேல்நாட்டினர் ‘Dessert’ என்ற பெயரில் உணவுக்குப் பிறகு இனிப்பு, ஐஸ்க்ரீம் போன்றவற்றை உண்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இப்பொழுது நாமும் அதையே பின்பற்ற ஆரம்பித்து விட்டோம். ஆனால் நமது ஆயுர்வேதத்தில் உணவு இனிப்புடன் துவங்கப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நமது உடலில் வாதப் பொருளின் பயோ-கூறுகள் கட்டுப்படுவதுடன் நமது ஜீரண சக்திக்கும் இடையூறு விளைவிப்பதில்லை.
நவீன விஞ்ஞான கண்ணோட்டப்படி ஆயுர்வேத கண்ணோட்டம் அதிக விஞ்ஞான பூர்வமானது. இனிப்பு வகைகளை ஜீரணிப்பது கடினம். எனவே இனிப்பு வகைகளை உணவு உட்கொள்வதற்கு முன்பாக உண்பதால் ஜீரண சக்தி முழு வீச்சில் செயல்படுவதுடன் அதற்குப் பிறகு நாம் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைவாக இருக்கும். இதற்கு மாறாக உணவிற்குப் பிறகு ‘Dessert’ என்ற பெயரில் குளிர்ச்சியான ஐஸ் க்ரீம் வகைகளை உண்பதால் வயிற்றின் உஷ்ணத் தன்மை குறைந்து அதனால் உணவு ஜீரணமாவதும் பாதிக்கப்படுகிறது. எனவே இனிப்பு வகைகளை உண்பதாக இருந்தால் உணவிற்கு முன்பாகவோ அல்லது உணவிற்கு இடையிலோ உண்ண வேண்டும். எனவே உணவிற்குப் பிறகு ‘Dessert’ என்ற பெயரில் உண்ணும் மேல்நாட்டுப் பழக்கத்தை நம் நாட்டினர் பின்பற்றுவது உண்மையில் ஆபத்தானது.