வருடம் 2000-லிருந்து ‘கால மகத்துவத்தின்படி விரைவில் ஆபத்துக் காலம் வரப்போகிறது’, என்பது ஸாதகர்களுக்குத் தெரியும்; ஆனால் இன்று ஆபத்துக் காலம் வாசல் கதவிற்கு அருகில் வந்து விட்டது. கோர ஆபத்துக் காலம் ஆரம்பமாவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. வருடம் 2019-க்குப் பிறகு மெதுமெதுவாக மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகப் போகிறது என்று பல நாடி ஜோதிடர்கள் மற்றும் தொலை நோக்குடைய ஸாது-மகான்கள் கூறியுள்ளனர். முதலில் இந்த மகாயுத்தம் மானசீக நிலையில் நடக்கும்; காரணம் ஏதாவது இரு தேசங்களுக்கு இடையே நடக்கும் மகாயுத்தம் மானசீக நிலையிலேயே முதலில் நடக்க ஆரம்பிக்கும். உதாரணம் கொரிய-அமெரிக்க சண்டை, சீன-அமெரிக்க சண்டை. வரும் 2-3 வருடங்களில் மகாயுத்தம் ஸ்தூல நிலையில் நடக்கும். அப்பொழுது ‘காய்ந்த புல்லுடன் பச்சைப் புல்லும் எரிந்து போகும்’, என்ற சித்தாந்தப்படி சமூகத்திலுள்ள நல்ல மனிதர்கள், ஸாதகர்கள் ஆகியோரும் ஆபத்துக் காலத்தில் பாதிக்கப்படுவர்.
(பராத்பர குரு) டாக்டர் ஆடவலே
ஆபத்துக் காலத்தில் பூகம்பம், புயல் போன்றவற்றால் மின்சாரம் துண்டிக்கப்படும். பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தட்டுப்பாடு ஏற்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படும். அதனால் சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள், குடிநீர் ஆகியவை கிடைக்காமல் போகலாம் அல்லது ‘ரேஷன்’ முறையில் கிடைக்கலாம். ஆபத்துக் காலத்தில் மருத்துவர், வைத்தியர், மருந்துகள், ஆஸ்பத்திரி போன்ற வசதிகள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கும். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஆபத்துக் காலத்தைக் கடந்து செல்ல அனைவரும் உடலால், மனதால், குடும்ப நிலையில், நிதி நிலையில், ஆன்மீக நிலையில் தயாராக இருப்பது மிகவும் அவசியம். இது சம்பந்தமான மிக சாதாரண தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி எவ்வளவு முடியுமோ அவ்வளவு செயல்படுத்துவதற்கு இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள்.
1. ஆபத்துக் காலம் என்றால் என்ன?
ஆபத்து + காலம் = ஆபத்துக் காலம். ஸம்ஸ்கிருதத்தில் ஆபத் என்றால் சங்கடம். ஆபத்துக் காலம் என்பது சங்கட காலம்.
2. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில்
உடலளவில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்
2 அ. உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க இதை செய்யுங்கள்!
2 அ 1. சில மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்கு தேவையான உணவு தானியங்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! : இதில் பருப்புகள், கோதுமை, அரிசி, மஞ்சள், உருளைக்கிழங்கு, ஊறுகாய், நெய் ஆகியவையும் அடங்கும்.
2 அ 1 அ. சில குறிப்புகள்
2 அ 1 அ 1. உணவு தானியங்கள் மற்றும் அவற்றை சேமித்து வைக்கத் தேவையான பொருட்களை வாங்கும்போது குடும்பத்தின் தேவை, நீங்கள் வசிக்கும் இடத்தின் தட்பவெட்ப நிலை, பொருளின் காலாவதி தேதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்!
2 அ 1 அ 2. குறிப்பிட்ட காலாவதிக்குப் பிறகு (உதா. ஒவ்வொரு 2 – 4 மாதங்களுக்கு) சேமித்து வைத்துள்ள உணவு தானியங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் அன்றைய நிலையை சரி பார்க்க வேண்டும்!
2 அ 2. சமையல் எரிவாயு, அடுப்பிற்கு வேண்டிய கெரோசின் ஆகியவற்றிற்கு ஏற்படக் கூடிய பற்றாக்குறையை மனதில் கொண்டு கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் அவசியமானதை செய்யவும்!
2 அ 2 அ. வீட்டில் விறகடுப்பு மூட்டுவதற்கான ஏற்பாட்டை செய்யவும், விறகடுப்பில் சமையல் செய்ய பழக்கப்படுத்திக் கொள்ளவும்!
2 அ 2 ஆ. சூரிய ஒளியில் இயங்கும் உபகரணங்களை (உதா. சோலார் அடுப்பு) வாங்குங்கள்!
2 அ 2 இ. பசுக்கள், காளைகள் ஆகியவற்றை பராமரிப்பவர் கோபர்-காஸ் அமைப்பை நிறுவலாம்!
2 அ 2 ஈ. வேண்டிய அளவு இயற்கை ஈரக் கழிவுகள் (காய்கறியின் தோல், தண்டு) இருக்குமென்றால் அவர்கள் பயோ-காஸ் அமைப்பை நிறுவலாம்!
2 அ 3. சமையல் செய்யும்போது மின்யந்திரங்களை (உதா. மிக்ஸி) உபயோகிப்பதைத் தவிர்த்து பாரம்பரிய வழிமுறைகளை (உதா. அம்மி, குழவி போன்றவற்றை) பயன்படுத்த ஆரம்பியுங்கள்! : மற்ற பாரம்பரிய பொருட்களான இடிப்பதற்கு உரல், உலக்கை, அரைப்பதற்கு அம்மி, குழவி போன்றவற்றை உபயோகிக்க கற்றுக் கொள்ளவும். அதனால் தினசரி வாழ்க்கை கடினமாகாமல் இருக்கும்.
2 அ 4. உணவு தானியங்களைப் பயிரிடுதல், காய்கறி தோட்டம் போடுதல், பசுக்களை வளர்த்தல் ஆகியவற்றை இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள்!
2 ஆ. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல்
இருக்க இந்த முன்னேற்பாடுகளை செய்யவும்!
2 ஆ 1. வீட்டிற்கு அருகில் கிணறு இல்லை என்றால் கிணறு வெட்டவும்! : ஆபத்துக் காலத்தில் கார்ப்பரேஷன் தண்ணீர் கிடைக்காதபோது கிணற்றுத் தண்ணீர் உதவியாக இருக்கும். அருகிலுள்ளவர்கள் ஒருங்கிணைந்து ஒரு கிணற்றைத் தோண்டலாம்.
2 ஆ 2. தண்ணீரை சேமித்து வைக்க பெரிய தொட்டிகளைக் கட்டவும்!
2 ஆ 3. மின்சாரம் இல்லாதபோது வீட்டில் நீர் தூய்மைப்படுத்தும் யந்திரம் இயங்காது என்பதால் காண்டல் பில்டரை (candle filter) வாங்கி வைக்கவும்!
2 இ. மருத்துவர், வைத்தியர், ஆஸ்பத்திரி
ஆகிய வசதிகள் கிடைக்காமல் போகலாம் என்பதை
மனதில் கொண்டு ஆரோக்கியம் நன்றாக இருக்க இதை செய்யுங்கள்!
2 இ 1. சிறுசிறு நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல், உடலில் சூரிய ஒளி படுதல் போன்ற மருந்து உட்கொள்ளாத வழிமுறைகளை இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள்!
2 இ 2. பிந்துதாபன், நாமஜப-நிவாரணம், பிராணசக்தி ஓட்ட நிவாரணம் மற்றும் வெற்றுப் பெட்டிகள் நிவாரணம் போன்ற மருந்தில்லாத நோய் நிவாரண வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்! : இது சம்பந்தமான நூல்களை ஸனாதன் வெளியிட்டுள்ளது.
2 இ 3. அருகிலுள்ள தெரிந்த வைத்தியர்/மருத்துவர் ஆகியோரை கலந்தாலோசித்து குடும்பத்திற்குத் தேவையான ஆயுர்வேத மற்றும் அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை சில மாதங்கள் வரும்படி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்!
2 இ 4. நீங்கள் இருக்கும் சுற்றுப்புற சூழலில் முன்பிருந்தே கிடைக்கும் மருந்து மூலிகைகளைப் பற்றி விவரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதை உபயோகித்துப் பார்க்கவும்!
2 இ 5. மருத்துவ மூலிகைத் தோட்டத்தை அமைக்கவும்! : மருத்துவ மூலிகைத் தோட்டத்தைப் பற்றிய விவரங்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு அவற்றை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றி ஸனாதனின் ‘கிடைக்கும் இடத்திற்கேற்றபடி மருத்துவ மூலிகை தோட்டம் அமைத்தல் மற்றும் மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைப்பது எப்படி?’ என்ற நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.
2 இ 6. நோய்வாய்ப்பட்ட பின்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக நோய்வாய்ப்படாமல் இருக்க இன்றிலிருந்தே முயற்சி மேற்கொள்ளுங்கள்! : தினசரி உடற்பயிற்சி செய்தல், பசி எடுத்த பின்பே உண்ணுதல், அனாவசியமாக உண்ணாதிருத்தல் போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் நோய்கள் விரைவில் குணமாகி நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இவ்வழக்கம் ஆபத்துக் காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.
2 ஈ. மற்றவர்களால் காயமடைதல்,
நெருப்புக்காயம், மயக்கமடைதல் போன்ற
நிகழ்வுகளில் உடனடி சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதால்
குடும்பத்தில் ஒருவராவது முதலுதவிப் பயிற்சியைக் கற்றுக் கொள்ளவும்!
பல இடங்களில் முதலுதவிப் பயிற்சிக்கான இலவச வகுப்புகள் நடக்கும். இதில் பங்கேற்று பயனடையுங்கள். ஸனாதனின் முதலுதவிப் பயிற்சி பற்றிய நூல் தொகுப்பு (3 பாகம்) வெளிவந்துள்ளது.
2 ஈ 1. குடும்ப தேவைக்காக முதலுதவிப் பெட்டி தயார் செய்யுங்கள் ! : வலியைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், ஆயின்ட்மென்ட், பாண்டேஜுகள், பாண்ட்-எய்ட் ; அதேபோல் ஜுரம், வாந்தி போன்றவற்றிற்கான மருந்துகளை முதலுதவிப் பெட்டியில் வைத்திருங்கள். அந்தப் பெட்டியை வீட்டில் சாதாரணமாக எல்லோரும் பார்க்கும் இடத்தில் வையுங்கள். முதலுதவிப் பெட்டியில் முடிந்தவரை மாத்திரை ஸ்ட்ரிப்-களை வைக்க வேண்டாம்; காரணம் அதிலிருந்து மாத்திரைகளை எடுக்கும்போது அதன் காலாவதி தேதி மறைந்து போகக் கூடும். அவ்வாறு நடந்தால் மீதியுள்ள மாத்திரைகளின் காலாவதி தேதி எப்பொழுது என்பது தெரியாமல் போகும். அதனால் ஸ்ட்ரிப்-களிலிருந்து மாத்திரைகளை வெளியே எடுத்து ஒரு காற்றுப் புகாத டப்பியில் அடைத்து அதன் மேல் மாத்திரையின் பெயர், எந்த நோய்க்கான மருந்து, உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகிய அவசிய தகவல்களை ஒரு லேபிளில் எழுதி ஒட்டி வைக்கலாம். (முதலுதவி பெட்டி பற்றிய விரிவான விவரங்கள் ஸனாதனின் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.)
2 உ. குண்டுவெடிப்பு மற்றும் வேறு காரணங்களால்
தீக்காயங்கள் ஏற்படும்போது தீயை அணைக்கவும்
பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை வழங்கவும்
குடும்பத்தில் ஒருவராவது தீயணைப்பு பயிற்சி பெறுவது சிறந்தது!
ஸனாதனின் தீயணைப்பு பயிற்சி பற்றிய நூல் வெளி வந்துள்ளது.
2 ஊ. கலவரம், திருட்டு, ரௌடித்தனம் ஆகியவற்றிலிருந்து
தன்னையும் குடும்பத்தினரையும் காப்பாற்ற தற்காப்பு பயிற்சி பெறுங்கள்!
தற்காப்பு பயிற்சி பற்றிய நூலை ஸனாதன் வெளியிட்டுள்ளது.
2 எ. மற்ற குறிப்புகள்
2 எ 1. கொசுக்கடியிலிருந்து தப்புவதற்கு அவசியத்திற்கேற்றபடி கொசு வலையை வாங்கலாம்!
2 எ 2. நவீன வைத்திய உபகரணங்களின் மூலம் செய்து கொள்ள வேண்டிய சிகிச்சைகளை (உதா. கண் அறுவை சிகிச்சை, பற்களின் சிகிச்சை ஆகியவற்றை) விரைவில் செய்து கொள்ளுங்கள்!
2 எ 3. வாழ்விற்கான குறிப்பிட்ட சுக சௌகரியங்களை (சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களை விரும்புதல், குளிக்க வெந்நீரை உபயோகித்தல், எப்பொழுதும் மின்விசிறியை ஓட விடுதல், ஏசி போட்டுக் கொண்டே உறங்குதல், நடந்து போகும் இடத்திற்குக் கூட இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை உபயோகித்தல்) சிறிது சிறிதாக குறைப்பதற்கான வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!
2 எ 4. உணவுப் பொருட்கள், தண்ணீர், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் இது போன்ற மற்றப் பொருட்களை (கெரோசின்) சிக்கனமாக உபயோகிக்க இன்றிலிருந்தே பழகிக் கொள்ளுங்கள்!
2 எ 5. ஆபத்துக் காலத்தில் உபயோகமாக இருப்பதற்கு உடலால் செய்யக் கூடிய காரியங்களை இன்றிலிருந்தே செய்ய பழகிக் கொள்ளுங்கள்! : கிணற்றிலிருந்து நீரை இறைத்தல், துணிகளை கைகளால் துவைத்தல், மின்தூக்கியை உபயோகிக்காமல் படிகளில் ஏறி இறங்குதல், அருகிலிருக்கும் இடங்களுக்கு வாகனங்களுக்கு பதிலாக சைக்கிளை உபயோகித்து செல்லுதல் ஆகியவை இதில் அடங்கும்.
2 எ 6. பாதகமான காலத்திலும் உடல் ஆரோக்கியமாக விளங்க தினமும் உடற்பயிற்சி (உதா. சூர்யநமஸ்காரம் செய்தல், குறைந்தபட்சம் தினமும் 1-2 கி.மீ. நடத்தல்), பிராணாயாமம், யோகாசனம் ஆகியவற்றை செய்யவும்!
3. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில்
மானசீக நிலையில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்
3 அ. சில பிரச்சனைகள் சம்பந்தமாக
மனதிற்கு சுய ஆலோசனை வழங்க வேண்டும்!
சுய ஆலோசனை பற்றிய விரிவான விளக்கங்கள் ஸனாதனின் நூல் ‘சுய ஆலோசனை மூலம் ஆளுமை குறைகளைக் களைதல்’ என்பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
3 அ 1. கலவரம், பூகம்பம், மகாயுத்தம் போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாதபோது சம்பந்தப்பட்ட நிகழ்வை எதிர்கொள்ளும் தைரியம் ஏற்படுவதற்கு சுய ஆலோசனை வழங்கிக் கொள்ள வேண்டும்!
3 அ 2. உறவினர்களிடம் மானசீக முறையில் பந்தப்படாமல் இருக்க சுய ஆலோசனை எடுத்துக் கொள்ளுங்கள்!
3 அ 3. ஆபத்துக் காலத்தில் ஏதாவது ஒரு நிகழ்வின்போது நம்மால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் அந்த நிகழ்வை தத்துவார்த்த கண்ணோட்டத்துடன் இருந்து கொண்டு, சாக்ஷி உணர்வுடன் பார்க்கவும் அந்நிகழ்வை ஆனந்தமாக அங்கீகரிக்கவும் சுய ஆலோசனை வழங்க வேண்டும்!
3 ஆ. சிறிது-அதிக காலத்திற்கு குடும்பத்தினரின்
பிரிவைத் தாங்கிக் கொள்ள சித்தமாயிருத்தல் வேண்டும்!
4. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில் குடும்ப
அளவில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்
4 அ. குடும்பத்தினருக்குத் தேவையான ஆடைகள், பொருட்கள்
ஆகியவற்றை இன்றிலிருந்தே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்!
இதில் ஆடைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஊசி-நூல், செருப்பு, சோப், பற்பொடி, குடை, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, பல்ப், மழிக்கும் பொருட்கள், ஆன்மீக உபாயத்திற்குத் தேவையான ஸாத்வீகப் பொருட்கள் (உதா. அத்தர், கற்பூரம், ஊதுபத்தி) ஆகியவை அடங்கும்.
4 ஆ. முடிந்தவரை புது வீடு அல்லது ப்ளாட்-ஐ வாங்காமல்,
இருக்கும் வீட்டில் அல்லது வாடகை வீட்டில் இருப்பதற்கு முயற்சிக்கவும்!
1. பூகம்பம், நிலச்சரிவு போன்றவற்றால் கட்டிடங்கள் இடிந்து விழலாம், அதனால் நம் பணமும் வீணாகலாம் என்பதை கவனத்தில் கொண்டு முடிந்தவரை புது வீடு அல்லது ப்ளாட்-ஐ வாங்காமல் இருக்கலாம். இருக்கும் வீட்டில் தொடர்ந்து இருப்பதற்கு அல்லது வாடகை வீடு அல்லது ப்ளாட்டில் இருப்பதற்கு முயற்சிக்கவும்.
2. சில தவிர்க்க முடியாத காரணங்களால் வீடு அல்லது ப்ளாட் வாங்க வேண்டும் என்றால் எந்த பிரதேசத்தில் அவை பாதுகாப்பாக இருக்கும் என்பதை சிந்தனை செய்து பிறகு வாங்கவும்.
3. ப்ளாட் வாங்க வேண்டும் என்றால் முடிந்தவரை மூன்றாவது மாடிக்கு மேல் போகாதபடி வாங்க முயற்சிக்கவும். இதன் காரணம் பூகம்பம் போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது மூன்றாவது மாடி வரை விரைவில் கீழே இறங்கி வெளியே ஓடி வருவது சுலபமாக இருக்கும்.
4. தற்போதைய ப்ளாட் மூன்றாவது மாடிக்கு மேற்பட்டு இருந்தால் அதற்கு பதிலாக வேறு ப்ளாட் கிடைக்கிறதா என்பதை விசாரிக்கலாம்.
4 இ. கிராமத்தில் சொந்த வீடு இருக்குமானால்
குடியேறும் நிலையில் அதை வைத்திருப்பது நல்லது!
வரவிருக்கும் காலத்தில் இயற்கை பேரழிவுகள், அதிகரிக்கும் தீவிரவாத செயல்கள் ஆகியவற்றால் பல நகரங்கள் அழிந்து போகலாம். அதனால் யாரிடமாவது கிராமத்தில் சொந்த வீடு இருக்குமானால் அதை இன்றே குடியேறும் நிலையில் சரிபார்த்து வைத்துக் கொள்வது நல்லது.
4 ஈ. கிராமத்தில் சொந்தமான நிலமோ வீடோ இல்லையென்றால்
நகரவாசிகள் முடிந்தவரை தங்களுக்கு சௌகரியமான கிராமத்தில்
வசிக்கும் கண்ணோட்டத்தில் இன்றே வீடு வாங்க சிந்தனை செய்யுங்கள்!
4 உ. வேலை சம்பந்தமாக வெளி தேசங்களுக்கு சென்றுள்ள
குடும்பத்தினரை பாரதத்திற்கு திரும்பி வருமாறு கூறுங்கள்!
பாரதம் உண்மையில் புண்ணிய பூமியாகும். வரவிருக்கும் ஆபத்துக் காலத்தில் பாரதத்தைக் காட்டிலும் மற்ற தேசங்களில் அதிக அழிவுகள் நேரும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் வெளி நாடுகளில் ரஜ-தம தன்மையின் பிரமாணம் அதிகமாக உள்ளது. அதோடு மகாயுத்தம் ஆரம்பித்த பின்னர் வெளிநாடுகளிலிருந்து பாரதத்திற்கு பாதுகாப்பாக திரும்பி வருவது கடினமாக இருக்கும்.
4 ஊ. நமக்குப் பிறகு நம் சொத்து சம்பந்தமாக
உறவினரிடையே சண்டை, கருத்து வேறுபாடு வராமல் இருக்க
வயதானவர்கள் உயில் பத்திரம் எழுதி வைப்பது நல்லது!
5. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில் நிதி
நிலையில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்
5 அ. இன்று சம்பாதிக்கும் மற்றும் இதுவரை சேமித்து
வைத்துள்ள பணத்தை சிக்கனமாக செலவழியுங்கள்!
5 ஆ. முதலீடு செய்யும்போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்!
இன்று பெரும்பான்மை வங்கிகளில் பெரும் அளவில் ஊழல்கள் நடைபெறுகின்றன. அதனால் நம்முடைய பணம் பாதுகாப்புடன் இருக்க கீழே குறிப்பிட்டுள்ளபடி சிந்தனை செய்வது நல்லது. பணத்தை முதலீடு செய்யும்போது You should not put all eggs in one basket என்பதற்கேற்ப எல்லா பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக வெவ்வேறு இடங்களில் செய்ய வேண்டும் என்ற அர்த்தசாஸ்திர தத்துவப்படி முதலீடு செய்யுங்கள்.
5 ஆ 1. வெவ்வேறு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்யவும் : ஏதாவது ஒரு வங்கி திவாலாகிப் போனாலும் எல்லாப் பணத்தையும் இழக்காமல் இருக்க உங்கள் அருகிலுள்ள வெவ்வேறு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பங்கீடு செய்து முதலீடு செய்யவும். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பணம் 1 லக்ஷம் வரை பாதுகாப்புடன் உள்ளது. அதனால் ஒவ்வொரு வங்கியிலும் அதிகபட்சம் 1 லக்ஷம் வரை பணத்தை முதலீடு செய்யலாம்.
5 ஆ 2. வங்கியில் உள்ள கணக்கு-வழக்குகள் பற்றி மனைவி மற்றும் வயது வந்த குழந்தைகளுக்குக் கற்றுத் தாருங்கள் : குடும்பத்தில் உள்ளவர் அனைவருக்கும் வங்கியில் பணம் போடுதல், வங்கியிலிருந்து பணத்தை எடுத்தல் போன்ற குறைந்தபட்ச செயல்களை செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
5 ஆ 3. தங்கம்-வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களில் முதலீடு செய்தல் : யாராவது முதலீடு நோக்கத்தில் தங்கம் வாங்க நினைத்தால் நகைகளாக வாங்காமல் தூய தங்கக் காசுகளாக வாங்கலாம். அதனால் நகைகளுக்குரிய செய்கூலி தர வேண்டியிருக்காது. பின்னர் நிலைமை மாறிப் போனால் இது போன்ற பொருட்களை உபயோகிக்க முடியும்.
5 ஆ 4. நிலத்தில் முதலீடு செய்தல் : யாரால் முடியுமோ அவர்கள் தோட்டம் அமைப்பதற்கு ஏற்றதான நிலத்தை தேர்வு செய்து வாங்கலாம். ஒருவர் தனியாக வாங்க முடியாவிட்டால் பலர் ஒருங்கிணைந்து அந்த பூமியை வாங்கலாம். பூமியில் முதலீடு செய்யும்போது இன்றோ அல்லது நாளையோ பலன் கிடைக்கும்.
5 இ. யார் பங்குசந்தையில் முதலீடு செய்துள்ளனரோ
அவர்கள் அதற்கான மாற்று யோசனையை செய்ய வேண்டும்!
வீட்டிற்காக கிணறு வெட்டுதல், சூரிய ஒளி சக்தியை பயன்படுத்துதல் ஆகிய செலவுகளும் ஒருவகை முதலீடு ஆகும்!
6. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில்
செய்ய வேண்டிய மற்ற முன்னேற்பாடுகள்
6 அ. வீட்டில் அனாவசியமாக உள்ள பொருட்களை அகற்ற ஆரம்பியுங்கள்!
6 ஆ. இரு வெவ்வேறு நிறுவனங்களின் சிம் கார்ட்-ஐ கைபேசியில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்! : ஒன்றின் ரேன்ஜ் கிடைக்கவில்லை என்றாலும் இன்னொன்றை உபயோகிக்க முடியும்.
6 இ. உறவினர், அருகில் வசிப்பவர்கள், காவல்துறை, தீயணைப்பு போன்ற அத்தியாவசியமான இடங்களின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை ஒரு தனி நோட்டில் பதிவு செய்து கொள்ளவும் ! : ஆபத்துக் காலத்தில் தொலைபேசி வேலை செய்யாதபோது இது கை கொடுக்கும்.
6 ஈ. வெள்ளம் போன்ற நிகழ்வுகளில் அரசாங்க செய்தி வந்தவுடன் சில நிமிடங்களுக்குள்ளாகவே வீட்டை விட்டு வெளியேறும்படி நேரும் என்பதால் முன்னேற்பாடாக சிறிய பெட்டியில் (ப்ரீஃப்கேஸ்) முக்கியமான பத்திரங்கள் (உதா. பாஸ்போர்ட், ஆதார்கார்ட், பாங்க் பாஸ்புக்) மற்றும் மற்ற அவசிய பொருட்களை எடுத்து வையுங்கள்!
6 உ. வீட்டின் காவலுக்கு நாய், பாலுக்கு பசு, வயல் வேலை மற்றும் வண்டியிழுக்க காளை, பிரயாணம் செய்ய குதிரை ஆகியவற்றை பராமரியுங்கள்!
6 உ 1. நாய், பசு, காளை, குதிரை போன்ற பிராணிகளை எவ்வாறு பராமரிப்பது மற்றும் அவற்றின் நோய்களுக்கு என்ன மருந்து தருவது போன்றவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள்!
6 ஊ. வரவிருக்கும் ஆபத்துக் காலத்தில் கைகொடுக்கக் கூடிய ஏதாவது ஒரு கலையை அல்லது செயலை இன்றே கற்றுக் கொள்ளுங்கள், மற்றும் அதை பயிலுங்கள்! : இதில் தையல் இயந்திரத்தில் உடைகளைத் தைத்தல், நீச்சல், காளைமாட்டு வண்டி ஓட்டுதல், குதிரையேற்றம் ஆகிய செயல்களும் அடங்கும்.
6 எ. சோப், பற்பொடி போன்ற பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களையும் யோசித்து வைக்க வேண்டும்! : இதில் ஆடைகளைத் துவைப்பதற்கு புங்கங்கொட்டை, பாத்திரங்களைத் தேய்ப்பதற்கு சாம்பலை உபயோகித்தல், பசுஞ்சாணத்தை உபயோகித்து பற்பொடி தயாரித்தல் ஆகிய செயல்களும் அடங்கும்.
7. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில்
பல்வேறு நிலைகளில் செய்ய வேண்டிய
முன்னேற்பாடுகளைப் பற்றிய சில பொது குறிப்புகள்
7 அ. வீட்டிலுள்ள உபகரணங்கள் (சமையல் உபகரணங்கள், மின்சார உபகரணங்கள் போன்றவை), சைக்கிள், மாட்டுவண்டி போன்றவற்றை சரி செய்வதற்குத் தேவையான உதிரி பாகங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்!
7 ஆ. வீட்டிலுள்ள உபகரணங்கள், குழாய்கள், சைக்கிள், மாட்டுவண்டி ஆகியவற்றை சரி செய்ய கற்றுக் கொள்ளுங்கள்!
7 இ. சில பொருட்களை (உதா. தானியங்களை அரைக்கும் இயந்திரம்) இன்றே வாங்கவும், சில பொருட்களை (உதா. மருந்துகள்) படிப்படியாக அவற்றின் காலாவதி தேதி மற்றும் அரசாங்க விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வாங்குங்கள்!
7 ஈ. தொலைக்காட்சி (டிவி) ஒளிபரப்பு நின்று விட்டால் ஆகாசவாணி மூலமாக கிடைக்கும் செய்திகளை, தகவல்களை கேட்பதற்கு ரேடியோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்! : கைபேசியில் ரேடியோ இருந்தாலும் பரவாயில்லை.
7 உ. ஹவுசிங் சொசைட்டி, அபார்ட்மென்ட் ஆகியவற்றில் குடியிருப்போர் ஒருங்கிணைந்து கீழே கூறப்பட்டுள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும்! : இதில் பயோ-காஸ் அமைப்பை ஏற்படுத்துதல், கிணறு வெட்டுதல், சூரிய ஒளி சக்தியை பயன்படுத்துதல் ஆகிய வசதிகளும் அடங்கும்.
8. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில் ஆன்மீக
நிலையில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்
8 அ. நம் மீது தெய்வத்தின் கருணைப் பார்வை
விழுவதற்கும் நம்மை சுற்றி பாதுகாப்பு கவசம்
ஏற்படுவதற்கும் கீழே கூறப்பட்டுள்ள செயல்களை தினமும் செய்யுங்கள்!
இதில் தெய்வ பூஜை செய்தல், மாலை வேளையில் பூஜை அறையிலும் துளசி மாடத்திலும் விளக்கு ஏற்றி நமஸ்கரித்தல், விளக்கேற்றிய பின்னர் வீட்டிலுள்ள அனைவரும் ஒருங்கே அமர்ந்து ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் ஸ்லோகங்கள்/ஸ்தோத்திரங்களைக் கூறுதல் (உதா. சுபம் கரோதி, கந்தசஷ்டி கவசம், ராமரக்ஷா ஸ்தோத்திரம், தேவிகவசம்), இரவு உறங்கும்போது படுக்கையை சுற்றி தெய்வங்களின் ஸாத்வீக நாம படிவங்களைக் கொண்டு மண்டல் ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பிற்கு உபாசனை தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தல் ஆகிய செயல்களும் அடங்கும்.
8 ஆ. தீய சக்திகளின் கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பு பெற
ஆன்மீக நிவாரணங்களை இன்றிலிருந்தே கவனத்துடன் செய்யுங்கள்!
தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்குவதற்கு நாமஜப நிவாரணம், கல்லுப்பு தண்ணீரில் பாதங்களை அமிழ வைத்தல் போன்ற ஆன்மீக நிவாரணங்களை தினசரி தொடர்ந்து செய்ய வேண்டும். (பல்வேறு ஆன்மீக நிவாரணங்களைப் பற்றிய விவரங்கள் sanatan.org என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.)
8 இ. வரவிருக்கும் மூன்றாவது உலகப்போரில் உபயோகப்படுத்தக் கூடிய அணுகுண்டுகளால் ஏற்படும் கதிர்வீச்சுகளால் உயிருக்கு ஆபத்தான பாதிப்பு ஏற்படும். அதிலிருந்து பாதுகாப்பு பெற இன்றிலிருந்தே தினமும் அக்னிஹோத்ரம் செய்ய ஆரம்பியுங்கள்!
8 ஈ. வரவிருக்கும் காலத்தில் ஏற்படப்போகும் பயங்கர ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெற நல்ல முறையில் ஸாதனை செய்து பகவானின் பக்தனாக மாறுவது மிகவும் அவசியம்!
8 ஈ 1. ஸாதனையை மிகுந்த ச்ரத்தையுடன் செய்யவும்! : ஸனாதன் பிரபாத் பத்திரிக்கையில் அவ்வப்பொழுது வெளியிடப்படும் ஸாதனை சம்பந்தமான குறிப்புகளை உடனுக்குடன் செயல்படுத்த முயற்சிக்கவும்.
8 ஈ 2. வ்யஷ்டி ஸாதனையை நன்கு நடைபெற செய்யவும்! : ஸாதகர்கள் தங்களின் வ்யஷ்டி ஸாதனை நன்கு தினசரி நடைபெறுமாறு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
9. ஆபத்துக் காலத்தை தாண்டி செல்லும்
கண்ணோட்டத்தில் அனைவரிடமும் விழிப்புணர்வு
ஏற்படுத்துவதும் ஸாதனையின் ஒரு அங்கமே!
வரவிருக்கும் ஆபத்துக் காலத்தைப் பற்றி உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் தெரிவிப்பது, இக்கட்டுரையை அலுவலகத்திலுள்ள மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வது போன்ற நிலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. இதை செய்வது நமக்குள்ள சமூக கடனை அடைப்பதற்கு ஒப்பாகும். அத்துடன் நம் ஸாதனையும் நடக்கிறது.
– (பராத்பர குரு) டாக்டர் ஆடவலே (27.3.2019)
தகவல் : வரவிருக்கும் ஸனாதனின் நூல் ‘வரவிருக்கும் ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்’
(ஆபத்துக் காலத்தை கடந்து செல்ல எல்லா முன்னேற்பாடுகளையும் செய்ய உதவியாக இருக்கும் இக்கட்டுரையை ஸாதகர்களும் வாசகர்களும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.)
இக்கட்டுரையின் பதிப்புரிமைக்கான முழு அதிகாரம் (காப்பிரைட்)
ஸனாதன் பாரதீய ஸன்ஸ்க்ருதி ஸன்ஸ்தாவிற்கு சொந்தமானது.
ஸாதகர்கள் மற்றும் வாசகர்களுக்கான விண்ணப்பம்!
1. வரவிருக்கும் ஆபத்துக் காலத்தை கடந்து செல்வதற்கான முன்னேற்பாடுகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது ஓரளவாவது தெரிய வேண்டும் என்பதற்காக பல துறைகளைப் பற்றிய விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இது சம்பந்தமான விரிவான விவரங்களுடன் கூடிய நூல்கள் விரைவில் வெளி வர உள்ளன.
2. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல துறைகள் சம்பந்தமான மேலும் விவரங்கள் உங்களின் கவனத்திற்கு வருமானால் அவற்றை [email protected] என்ற கணினி முகவரிக்கும் மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கும் அனுப்பவும். அதன் மூலம் இவ்விஷயங்களை மேலும் விவரமாக சமூகத்திற்கு எடுத்து சொல்ல முடியும்.
கணினி முகவரி : [email protected]
தபால் முகவரி : திருமதி பாக்யஸ்ரீ ஸாவந்த், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, போண்டா, கோவா 403 401.
தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்