சிஷ்யர்களுக்கு ஸங்கீதக் கலை மற்றும்
நாமஸங்கீர்த்தனக் கலை ஆகியவற்றை ஸாதனை
கண்ணோட்டத்துடன் கற்றுத் தரும், முருகனிடம் அதீத
பக்தியுணர்வு கொண்ட (பூஜ்ய) திருமதி காந்திமதி ஸந்தானம் !
சென்னையிலுள்ள திருமதி காந்திமதி ஸந்தானம் அவர்கள் பூஜ்ய (திருமதி) உமா ரவிசந்திரன் அவர்களின் ஸங்கீத குரு ஆவார். கடந்த 44 வருடங்களாக வகுப்புகள் நடத்தி அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு ஸங்கீதம் மற்றும் பஜனைகளை ஆன்மீக ஸாதனையின் கண்ணோட்டத்துடன் கற்றுத் தரும் பூஜ்ய (திருமதி) காந்திமதி ஸந்தானம் அவர்களின் குண விசேஷங்களைப் பற்றி பூஜ்ய (திருமதி) உமா ரவிசந்திரன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
சிறுவயது முதல் பஜனைகளைக் கேட்பதில் இருந்த விருப்பம்
‘பூஜ்ய (திருமதி) காந்திமதி ஸந்தானம் அவர்களுக்கு சிறுவயது முதற்கொண்டே பக்திப்பாடல்களில் விருப்பம் அதிகம். ஒருமுறை அவருக்கு 2 வயதிருக்கும்போது அவர் வீட்டின் வெளியே அவரின் தந்தையாரின் சைக்கிளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். வாரப்படாத தலையுடன் இருந்த அவரை அவரது தாய் உள்ளே வந்து தலை வாரி புத்தாடை அணிந்து செல்லுமாறு வேண்டினார். ஆனால் எங்கே உள்ளே சென்றால் அவரின் தந்தை அவரை விட்டுவிட்டு சென்று விடுவாரோ என்ற பயத்தால் அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இந்த சிறு வயதிலேயே பகவானின் ஸ்துதியைக் கேட்பதிலும் பாடுவதிலும் அவருக்கிருந்த ஆர்வம் நன்கு தெரிகிறது.
வாத்ஸல்ய உணர்வு
அவர் நாள் முழுவதும் பல வேலைகளில் மூழ்கியிருந்தாலும் வீட்டிற்கு வரும் அனைவரையும் அன்புடன் உபசரித்து அவர்களுக்கு ஏதாவது உண்ண கொடுக்காமல் இருக்க மாட்டார். நாங்கள் அவரிடம் பஜனைகளைக் கற்றுக் கொள்ள செல்வோம். வகுப்பு முடிந்து வீடு திரும்பக் கிளம்பும்போது அவர், ‘முருகா கூட போ’ என்று அன்புடன் வழியனுப்பி வைப்பார். அவரிடமுள்ள வாத்ஸல்ய உணர்வுக்கான சில உதாரணங்கள் இவை.
ஸங்கீதக் கலையையும் நாமஸங்கீர்த்தனத்தையும்
ஆன்மீக ஸாதனையாக கற்றுத் தருதல்
நேரந்தவறாமை : அவரின் பஜனை நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு குறித்த நேரத்தில் முடிவடையும்.
பொறுமை : பாடுவதற்கு கடினமான பாடல்களை மிகப் பொறுமையாக கற்றுத் தருவார். அதன் மூலம் கற்றுக் கொள்ளும் அனைவரும் ஒரே குரலில் ஒன்று போல் பாட முடிகிறது. பாடலின் ஒவ்வொரு வரியும் பரிபூரணமாக எங்களுக்கு பாடமாக வேண்டும் என்பதற்காக அவர் ஒவ்வொரு சங்கதியையும் 10 முதல் 25 முறை கூட திரும்பத் திரும்ப பாடச் சொல்லுவார்.
தலைமை தாங்கும் குணம் : எங்களிடம் அன்பு காட்டுவது போலவே கட்டுப்பாட்டையும் விரும்புபவர். இக்காரணத்தால் பஜனைக் குழுவிலுள்ள அனைவருள்ளும் ஒரு ஒற்றுமை உணர்வைக் கொண்டு வந்தார்.
வித்யார்த்திகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பவர் : யாராவது ஒரு வித்யார்த்தி நன்றாக பாடிவிட்டால் பூஜ்ய காந்திமதி மாமிக்கு பெருமை கொள்ளாது. எப்படி ஒரு தாய் தன் குழந்தையைப் பார்த்து பெருமிதம் அடைவாளோ அவ்வாறே மாமி பெருமிதம் கொள்வாள். அந்த வித்யார்த்தி 7 முதல் 70 வயது வரை எந்த வயதினராக இருந்தாலும் ‘பார், என் குழந்தை எப்படி பாடுகிறாள்’ என்று பெருமைப்படுவார். தனியாகப் பாடும்படி வித்யார்த்திகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பார்.
ஆன்மீக உணர்வுடன் பாடுதல், மற்றவரையும் பாட ஊக்குவித்தல் : அவர் ஆன்மீக உணர்வில் மூழ்கியே எப்பொழுதும் பாடுவார். சில சமயங்களில் தன்னையறியாமல் அவர் கண்களில் கண்ணீர் பெருகும். கற்கும், கேட்கும் ஒவ்வொருவரும் அப்பாடலில் உள்ள ஆன்மீக உணர்வில் அமிழ்ந்து அதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பாடலின் உள்ளர்த்தத்தை விளக்கிக் கூறுவார்.
வெளி அலங்காரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காமல் பாடலை அலங்காரப்படுத்தி ஜோடி சேர்ப்பதிலுள்ள ஆர்வம் : ஒரு சாமான்ய பெண்ணிற்கு புடவைக்கேற்ற ரவிக்கை, அதற்கேற்ற அலங்காரங்கள் என ஜோடி சேர்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். பூஜ்ய காந்திமதி மாமி அதிலிருந்து வேறுபட்டவர். அவர் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்கு ஏற்ற விருத்தம் மற்றும் நாமாவளிகளை ஜோடி சேர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் தருவார். அதனால் அவரின் ஒவ்வொரு பாடலும் அதற்கேற்ற விருத்தத்துடன் ஆரம்பித்து நாமாவளியுடன் அலங்காரமாக முடியும். இதன் மூலம் மிகுந்த திறனுடன் கேட்பவர்களை அந்தப் பாடலிலுள்ள ஜீவனை உணரும்படி செய்வார்.
பாடலில் மேலோங்கியுள்ள உணர்வை உணர்ந்து அதற்கேற்ற ராகத்தைத் தேர்ந்தெடுத்தல் : அவருக்கு கர்நாடக சாஸ்த்ரீய ஸங்கீதத்தில் மிகுந்த ஞானம் உண்டு. அவரால் அபூர்வமான ராகங்களையும் மிகத் திறமையாக கையாள முடியும். அவர் ஒரு பாடலிலுள்ள ஜீவனை உணர்ந்து அதை வெளிக்கொணரும்படியான ராகத்தில் மெட்டமைப்பார். அந்தப் பாடலிலுள்ள சொற்களை கோர்த்து மடக்கிப் பாடி அதில் மேலும் அழகு மிளிரச் செய்வார்.
கர்த்ருத்வத்தை இறைவனிடம் ஒப்படைத்தல்
அவருக்கு ஸங்கீதத்தில் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் கணிதம் ஆகியவற்றிலும் நல்ல ஞானம் உண்டு. இவ்வளவு ஞானம் இருந்தும் அவர், ‘எனக்கு என்ன தெரியும்? முருகனல்லவா எனக்குள் இருந்து எல்லாவற்றையும் நடத்தி வைப்பவன்’, எனக் கூறுவார்.
அவர் எப்பொழுதும் பஜனைகளில் மூழ்கி இருப்பார். ‘அவரின் ஆழ்மனதில் தொடர்ந்து நாமஜபம் நடைபெறுகிறது’ என்பதை என்னால் உணர முடிகிறது!
ஆன்மீக உணர்வு
அ. அவர் எப்பொழுதும் பகவானைப் பற்றியே பேசுவார், சிந்தனை செய்வார். ‘உன்னைப் பாடுவதன்றி மற்றேதும் அறியேன்’ என்றிருப்பவர். முருகனுடன் எப்பொழுதும் அனுசந்தானத்தில் இருப்பவர். அவர் சில சமயம், ‘இன்று முருகனே சமையல் செய்தான்’, எனக் கூறுவார், மற்றொரு சமயம் ‘இன்று கிருஷ்ணனே படியளந்தான்’ என்பார். உண்மையில் அன்றைய தினம் முருகன் அல்லது கிருஷ்ணனின் பஜனையைப் பாடிக் கொண்டே உடல் உணர்வை மறந்து அவர் சமையலில் ஈடுபட்டதால் எந்தக் கஷ்டத்தையும் உணராமல் அவரால் செய்ய முடிகிறது. தினமும் பிரத்யக்ஷமாக பகவானே வந்து சமையல் செய்கிறான் என்ற அநுபூதி கிடைக்கிறது.
ஆ. அவரின் பஜனை வகுப்பிலுள்ள பலர் மத்திய வயதைக் கடந்தவர்கள், நடனமாடத் தெரியாதவர்கள். இருந்தாலும் பஜனை நிகழ்ச்சியில் எங்களை கோலாட்டம் ஆட வைப்பார். அதன் மூலமாக கோபியரின் அனன்ய பக்தியுணர்வை கடுகளவாவது எங்களால் உணர முடிந்தது.
நான் அவரின் பஜனை வகுப்பு செல்ல ஆரம்பித்தலிருந்து என்னுடைய நாமஸங்கீர்த்தன யோக வழிப்படியான ஸாதனை நடக்க ஆரம்பித்தது. அவர் மூலமாக என்னுடைய ஸாதனையின் அடித்தளம் வலுப்பெற்றது. அதனால் ஸனாதன் ஸன்ஸ்தா வழிப்படியான ஸாதனை செய்வதற்குரிய தகுதியும் கிடைத்தது. கடந்து வந்த காலத்தை நினைக்கும்போது, ‘பராத்பர குருதேவர் என்னை இந்த ஸாத்வீக பந்தத்திலிருந்து (பஜனை வகுப்புகளுக்கு செல்லுதல்) விடுவித்து மேலும் ஸத்வ, ரஜ, தம ஆகிய நிலைகளைக் கடத்துவிக்கக் கூடிய ஸாதனையை ஆரம்பிக்கச் செய்தார்’, என்பதை உணர்ந்தேன். இன்று 15 வருடங்கள் கடந்த பின் ஸனாதன் ஸன்ஸ்தா மூலமாக பூஜ்ய (திருமதி) காந்திமதி மாமியின் தெய்வீக குணங்களை உலகிலுள்ள ஸாதகர்கள் அனைவரும் கற்றுக் கொள்ளும்படி வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலமாக ‘இந்த சுழற்சி பூரணம் அடைந்தது’ எனத் தோன்றுகிறது. பஜனை வகுப்பிற்கு சென்ற என் காரியம் பராத்பர குருதேவரின் அருளால் பூரணத்துவம் அடைந்துள்ளது.’