சிவனின் காரியங்களும் பல்வேறு ரூபங்களும்

காரியங்கள்

ப்ரபஞ்சத்தை உண்டாக்குவது

சிவ-பார்வதியை ‘ஜகதஹ பிதரௌ’, அதாவது, லோகத்திற்கு மாதா, பிதா என்று கூறுவர். ஸம்ஹாரத்தின்போது, புதிதாக நிர்மாணிப்பதற்குத் தேவையான சூழலை சிவனே உருவாக்குகிறார்.

1. சிவனின் டமருவிலிருந்து (ஒரு விதமான உடுக்கை) எழும் 52 வகையான நாதங்கள் 52 வகையாக ஒலிகளை, அதாவது பீஜ மந்திரங்களை உருவாக்கி அதன் மூலமாக பிரபஞ்சத்தை உருவாக்க வழி செய்துள்ளது. நத்-நாத் சந்த தாரையைக் குறிக்கின்றது. தத தம் அதாவது ததாமி த்வம் (நான் உனக்கு வழங்குகிறேன்) என்னும் ஒலி, இந்த மூல ஒலிகளிலிருந்து பிறந்ததே. சிவன், இந்த ப்ரபஞ்சத்திற்கு, தன் ஞானம், தூய்மை, தவம் ஆகியவற்றை அளிக்கும் உத்தரவாதமாக இவ்வொலிகள் அமைந்துள்ளன.

2. சிவன், தன்னுடைய ஸங்கல்பத்தினாலேயே இந்த ப்ரபஞ்சத்தை உருவாக்க முடியும்.

ஜகத்குரு

ஞானம் இச்சேத் ஸதாசிவாத் |
மோஷம் இச்சேத் ஜனார்த்தனாத் ||

கருத்து : சிவனிடமிருந்து ஞானத்தையும், விஷ்ணுவிடமிருந்து மோஷத்தையும் யாசிக்க வேண்டும். சிவனின் தலையிலிருந்து ஞானகங்கை தொடர்ந்து பொங்குகிறது.

முக்குணங்களை கடந்து செல்ல வைத்தல் : ஸத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களை ஒருங்கே அழிப்பவர். அதாவது நம் அறியாமையை முழுமையாக நீக்குபவர் சிவன்.

 

சிவனின் வெவ்வேறு ரூபங்கள்

அ. ருத்ர

ருத்ர என்ற வார்த்தையின் சில அர்த்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ‘ரு’ என்றால் அழுவது. ‘த்ரு’ என்றால் ஓடுவது. யார் இறைவன் என் முன் தோன்ற மாட்டாரா என்ற ஆழ்ந்த தாபத்தோடு அழுது கொண்டே அங்குமிங்கும் ஓடுகிறாரோ, மற்றவரையும் அழ வைக்கிறாரோ, அவரே ருத்ரன்.

2. ‘ருத்’ என்றால் ஸம்ஸார ரூபமான துக்கம். யார் இந்த துக்கத்தைப் போக்குகிறார்களோ அவரே ருத்ரன்.

ஆ. அர்த்தநாரி நடேஷ்வர் (அர்த்தநாரீஷ்வர்)

சிவனிடம் சக்தி நிரம்பியிருக்கும் பொழுதுதான், அவர் செயல்பட ஆரம்பிக்கிறார். சிவாகம் என்ற புனித நூலில் விவரிக்கப்பட்டுள்ள, இரண்டில்லாத ஒன்றேயான அத்வைத தத்துவம், மாயையை இல்லை என்று தள்ளவில்லை, மாறாக, பரப்ரும்மத்தின் சக்தி வெளிப்பாடாக மாயையை ஏற்கின்றது. சிவ சக்தியின் தொடர்ச்சியான சேர்க்கையையே அத்வைதமாக கொள்கிறது.

இ. வேதாள்

வேதாளின் மூல வார்த்தை ‘வைதாள்’ என்பது. மாறுபட்ட தவறான போக்கைக் கூட தன்னுடைய ஆட்டத்துக்கு ஆட வைப்பவர் என்று பொருள். காதால் அறியப்படும் அஹத் மற்றும் அறிய முடியாத சூட்சுமமான அநாஹத் நாதத்தின் சேர்க்கை எழுப்பும் ஒலி அலைகளே ‘வை’ என்பதாகும். இது மாறுபாடுகளை சமனம் செய்கின்றது.

ஈ. நடராஜ்

சிவனுக்கு இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று ஸமாதி (உணர்வறியா உயர்ந்த நிலை); இன்னொன்று தாண்டவ அல்லது லாஸ்ய (நடனமாடும்) நிலை; ஸமாதி என்பது நிர்குண நிலை (வெளிப்படாதது); தாண்டவ அல்லது லாஸ்ய என்பது ஸகுண நிலை (வெளிப்பட்டது).

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது தலைப்பை, அங்க அசைவுகளால் வெளிப்படச் செய்வதே நடனம் அல்லது நாட்டியமாகும். இத்தகைய அங்க அசைவுகளை நடத்துபவர் ‘நட்’ எனப்படுவார். சிவன், இந்த நடராஜ ரூபத்திலே, இந்த நாட்டியக் கலையை ஆரம்பித்து வைத்தார் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. சிவனை, ஆத்யநாத் (முதன்மையான நடிகர்) ஆக கருதுவதால், நடராஜ் என்கிறோம். இப் ப்ரபஞ்சமே அவனின் நாட்டிய மேடை; நாட்டியம் ஆடுபவனும் அவனே; அதைக் காண்பவனும் அவனே. அவனுடைய நாட்டியத்தின் துவக்க ஒலியானது இவ்வுலக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, இயங்க வைக்கிறது. அவன் நாட்டியத்தை நிறுத்தும் பொழுது, இவ்வுலகத்தை தன்னுள் கரைத்து, தனித்து ஆத்மானந்தத்தில் திளைக்கிறான். நடராஜனின் அடிப்படையான தத்துவம் இதுவே. நடராஜனின் நாட்டியம், ஐந்து திவ்ய காரியங்களை பிரதிபலிக்கிறது. அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (மாயையில் மூழ்க வைத்தல்) அருளுதல் (மாயைக்கு அப்பாற்பட்டு அழைத்துச் செல்லுதல்).

சிவன் முன்பு செய்த நாட்டியத்தை, தண்டுகர்வி (ஒரு முக்கியமான சிவகணம்) பரத முனிவருக்கு காண்பித்தார். தண்டு செய்து காண்பித்ததால் தாண்டவம் எனப் பெயர் பெற்றது. பின்னர், பரத முனிவரால், மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு பரதநாட்டியம் என்றும் பெயர் பெற்றது.

தாண்டவ ந்ருத்யம் : எந்த நாட்டியத்தில் நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் சிவநாமம் எதிரொலிக்கிறதோ அதை தாண்டவ ந்ருத்யம் என்பர். வெவ்வேறு முத்திரைகளோடு கூடிய, ஆண்மைக்கே உரித்தான நடனமிது. ஆள்காட்டி விரலும் பெரு விரலும் இணைவது த்யான முத்ரா ஆகும். இதனால் குரு மேடும், சுக்கிர மேடும் இணைகின்றன. அதாவது, ஆண், பெண் தத்துவங்கள் இணைகின்றன. அதேபோல், சிவன், லாஸ்ய நடனத்தை பார்வதியுடன் சேர்ந்து பெரும் விருப்பத்தோடு பரத முனிவருக்கு முன்னால் ஆடிக் காண்பித்தார். லாஸ்ய என்பது பெண்மை கலந்த நடனம். அதில் கைகளிரண்டும் தன்னிச்சையாக இருப்பது அதன் சிறப்பு.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘சிவன்’

Leave a Comment